மேலும்

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட கப்பல் விடுவிப்பு

Aris 13சோமாலிய கடற்கொள்ளையர்களால் 8 சிறிலங்கா மாலுமிகளுடன் கடத்தப்பட்ட அரிஸ் -13 என்ற  எண்ணெய் தாங்கி கப்பல் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளதாக மொகடிசுவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொமரோஸ் தீவு கொடியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது, டிஜிபோட்டியில் இந்தக் கப்பல் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டு சோமாலியாவின் புன்ட்லன்ட் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

கடத்தல்காரர்களிடம் இருந்து கப்பலை மீட்பதற்கு நேற்று சோமாலிய கடற்படையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். இதன் போது, கடற்கொள்ளையர்களுக்கு பொருட்களை எடுத்துச் சென்ற படகு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு கப்பலில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கடற்படையினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஐவர் காயமடைந்தனர்.

இந்தநிலையில் புன்ட்லன்ட் பகுதியில் பெரியவர்கள் மற்றும் கடற்கொள்ளையர்களுடன் நடத்தப்பட்ட இணக்கப் பேச்சுக்களின் பின்னர் நேற்றிரவு எந்த நிபந்தனையுமின்றி கப்பல் விடுவிக்கப்பட்டது.

கப்பம் ஏதும் பெறப்படாமல், கப்பல் விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்கள் கப்பலில் இருந்து பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து சோமாலிய கடற்படையின் பாதுகாப்புடன், பிராந்திய வணிகக் கேந்திரமான பொஸ்ஸாசோ துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக மொகடிசுவில், உள்ள பாதுகாப்பு அதிகாரி அகமட் மொகமட் ஏஎவ்பிக்கு தெரிவித்தார்.

இந்தக் கப்பலில் உள்ள இலங்கையர்களான மாலுமிகள் 8 பேரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் கப்பலின் தலைவரான நிக்கலஸ் மற்றும் சமையற்காரரான சண்முகம் ஆகிய இரு தமிழர்களும் அடங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *