மேலும்

சிறிலங்காவை வடகொரியாவுடன் ஒப்பிட முடியுமா? – அனைத்துலக ஊடகம்

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், சிறிலங்கா மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. இந்த மாத இறுதியில் சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் நிலை காணப்படுவதுடன், இத்தீர்மானத்திற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கமானது இணைஅனுசரணை வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறானதொரு தீர்மானத்தின் மூலம் சிறிலங்கா மீதான, பேரவையின் அண்மைய தலையீடுகள் தொடர்பாக கேள்வி எழுப்புவது இலகுவானதாக இருக்கும். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த தடவை சிறிலங்கா மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதிர்பார்த்தளவு செயற்படுத்தப்படாத நிலையில் பிறிதொரு தீர்மானம் நிறைவேற்றப்படும் போது சிறிலங்கா இதனை சரியாக நிறைவேற்றும் எனக் கருதமுடியாது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிட்டவாறு கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்காவின் பெரும்பான்மை சமூகம் அல்லது அதன் அரசியல் தலைமைத்துவம் தனது ஆதரவை வழங்க முன்வராத நிலையில், தற்போது நடைபெற்று வரும் பேரவையின் 34வது கூட்டத் தொடரில் சிறிலங்காவின் இணைஅனுசரணையும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டாலும் அது பெரிதளவில் வெற்றியளிக்காது என சிலர் கருதுகின்றனர்.

இந்த விடயத்தில் சிறிலங்காவில் சாதகமான நகர்வுகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடையும்.

ஐ.நா பாதுகாப்பு சபையின் ஆணைக்கூடாக சிறிலங்காவிற்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளுமாறு சிலர் அழைப்பு விடுத்துள்ளனர்.  ஐக்கிய நாடுகள் சபையால் அண்மையில் வடகொரியாவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளை ஒத்த நகர்வுகளை சிறிலங்கா தொடர்பில் ஐ.நா எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஒழுங்காக நடத்தப்படுகின்ற ஜனநாயக ஆட்சி இடம்பெறும் சிறிலங்காவை, சர்வதிகார ஆட்சி இடம்பெறும் உலகின் மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றான வடகொரியாவுடன் ஒப்பீடு செய்வது பொருத்தமற்றதாகும். தவிர, ஐ.நா பாதுகாப்புச் சபையானது வடகொரியாவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நிறுத்துமாறு பரிந்துரைக்கவில்லை.

மாறாக, சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நிறுத்துமாறு குறித்த சில மக்களால் கோரிக்கை முன்வைக்கப்படுவது போன்றே, வடகொரியாவையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்துமாறு தனிப்பட்ட சிலர் கோரிக்கை விடுத்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் சிறிலங்கா நிறுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியுறுத்தினர். ஆகவே இக்கருத்தானது சிறிலங்காவில் பலம் பெற்று வருகிறது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிறிலங்கா வாழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்கவில்லை என்பதையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்கள் போருக்குப் பின்னான தற்போதைய சூழலிலும் கூட பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த மக்கள் சிறிலங்கா அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஐ.நா பொதுச் சபையானது இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்காக ஐ.நா பாதுகாப்புச் சபையின் கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பான விடயமும் பேசப்பட்டு இதற்கூடாக சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இவையெல்லாம் இடம்பெறுவதற்கான காலக்கெடு என்ன? இவ்வாறான நகர்வுகள் வெற்றியளிக்கும் என்கின்ற நம்பிக்கை எவ்வாறு ஏற்படுத்தப்படும்? அத்துடன் வடகொரியாவானது ஐ.நா பாதுகாப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்படவில்லை என்பதும் இங்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். ஆகவே சிறிலங்கா விடயத்தில் வடகொரியா ஒப்பீடு செய்யப்படக் கூடாது.

தர்க்க ரீதியான விவாதங்களை மேற்கொள்வதில் எவ்வித தவறும் இல்லை. எனினும் இராஜதந்திர ரீதியாக விவாதிக்கப்பட வேண்டிய இவ்வாறான பிரச்சினைகளில் அரசியல் சார் கற்பனைகள் உட்பகுத்தப்படுவதானது  ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆகவே சிறிலங்கா என்பது வடகொரியா அல்ல என்பது வெளிப்படை உண்மையாகும்.

அதேவேளை, சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுப்பதானது கபடமானது என்பதுடன் தவறாக வழிநடத்துவதாகும்.

ஆங்கிலத்தில் – The Diplomat
வழிமூலம்       – Taylor Dibbert
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *