கி.பி.அரவிந்தன்: நினைவுகளோடு தொடரும் பயணம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாள்…..!
புதினப்பலகையின் நிறுவக ஆசிரியரும், புதினப்பலகை குழுமத்தின் முதன்மைப் பங்காளருமான கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களை, நாம் இழந்த நாள்.
மாணவப் பருவத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராக- சிங்கள அதிகார வர்க்கத்தின் தமிழின அடக்குமுறைக்கு எதிரான போராளியாக, போராட்டக் களத்துக்கு அறிமுகமானவர் தான் கி.பி.அரவிந்தன்.
1970களின் ஆரம்பத்தில், சுந்தராக தொடங்கிய அவரது போராட்ட வாழ்வு, தாயகத்திலும், லெபனானிலும், தமிழ்நாட்டிலும், மீண்டும் தாயகத்திலுமாக நீண்டது.
1990களின் தொடக்கத்தில் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், தனது இலக்கியப் படைப்புகளின் ஊடாக- புதியதொரு போராட்டக்களத்தை திறந்தவர் கி.பி.அரவிந்தன் அவர்கள்.
விழிமூடும் வரையில் அவர் இலக்கியங்கள் வாயிலாகவும், புதினப்பலகை வாயிலாகவும், ஈழ விடுதலைக்காக உழைத்துக் கொண்டேயிருந்தவர்.
இத்தனைக்கும் கொடிய நோயுடனான போராட்டம் வேறு.
நான்கு பத்தாண்டுகளுக்கு மேலாக போராட்டங்களுக்குள்ளேயே வாழ்ந்த கி.பி.அரவிந்தன் அவர்களை நாம் பறிகொடுத்து இன்றோடு இரண்டு ஆண்டுகளாகி விட்டன.
நம்பவே முடியவில்லை. இத்தனை வேகமாக சுழல்கிறது காலச்சக்கரம்.
கி.பி.அரவிந்தன் அவர்களின் மறைவு எமக்குள் துயரத்தை மாத்திரம் எழுப்பவில்லை, அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வியையும் தான், எழுப்பியது.
அவரது வழியில் பயணம் செய்வது, பயணத்தை நிறுத்திக் கொள்வது- எம்முன் இருந்தது, இரண்டே தெரிவுகள் தான்.
சோதனைகளைத் தாண்டி, பயணத்தை தொடர்வதே கி.பி.அரவிந்தன் அவர்களுக்காக நாம் செய்யும் அஞ்சலியாகவும், புதினப்பலகையின் குறிக்கோளை ஈடேற்றும் கடப்பாடாகவும் கருதினோம்.
எதையுமே பொறுமையாகவும், நிதானமாக கையாளுகின்ற கி.பி.அரவிந்தன் அவர்களின் ஆளுமை தான், இந்தப் பயணத்தில் இப்போதும் எம்மை வழிகாட்டுகிறது.
இந்தப் பயணம் தொடரும் வரை அவர், நினைவுகளாக எம்மோடு இருப்பார்- எமக்குள் இருந்து வழிகாட்டுவார்.
அந்த நம்பிக்கையோடும், அவரது நினைவுகளோடும், தொடர்கிறோம் எம் பயணத்தை…..!
– புதினப்பலகை குழுமத்தினர்