மேலும்

‘கைவினைக்கதிர்’ நூல் வெளியீட்டு விழாவும் கைப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும்

jaffna-exhibition (1)யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்திச் சங்கத்தின் ‘கைவினைக்கதிர்’ நூல் வெளியீட்டு விழாவும் கைப்பணியாளர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி தொடக்கம் மாலை இரண்டு மணி வரை யாழ்., சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்திச் சங்கத் தலைவர் க.இரத்தினகோபால்  தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக யாழ். மாவட்டச் செயலர் க.வேதநாயகன், கலந்து கொண்டு, கைப்பணியாளர்களின் பணிகளை எடுத்துக்கூறும் ‘கைவினைக்கதிர்’ எனும் நூலை வெளியிட்டு வைத்தார்.

‘கைவினைக்கதிர்’ நூல், அனுபவம் மிக்க மூத்த கைவினைப் படைப்பாளிகளின் விபரணக் கட்டுரைகளையும், கைப்பணி சார்ந்த கட்டுரைகளையும், தொழில் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்துள்ளது.

இந்தச் சங்கத்தின் கடந்த காலச் செயற்பாட்டு உரையை, வடமாகாண கைப்பணி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் த.சுரேஸ்குமார் நிகழ்த்தினார்.

jaffna-exhibition (1)jaffna-exhibition (2)jaffna-exhibition (3)jaffna-exhibition (4)jaffna-exhibition (5)

‘இக்கைப்பணிக் கலையில் ஈடுபடுபவர்கள் கடந்த கால யுத்தத்தில் முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டவர்களாவர். அன்றாடம் அவர்களது வாழ்வாதரத் தேவைகளுக்காகவே கைப்பணித் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

இவர்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற உற்பத்திப் பொருட்களை சிறந்த முறையில் கொள்வனவு செய்து விற்பனை செய்வதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும் என நாம் பணிவோடு வேண்டுகிறோம்.

குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் தாயகத்தில் உங்கள் உறவுகளால் உருவாக்கப்படும் கைப்பணி உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்து நீங்கள் வாழும் நாடுகளில் விற்பனை செய்வதன் ஊடாக கடந்த கால யுத்தத்தால் நலிவுற்றிருக்கும் உங்கள் உறவுகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என நாம் அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறோம்’ என அவர் கைப்பணியாளர்கள் சார்பாக கோரிக்கை விடுத்தார்.

மேலும் இந்த நிகழ்விற்கு  உசா சுபலிங்கம் ( மாகாணப் பணிப்பாளர், தொழிற்றுறைத் திணைக்களம்) க.நவதர்சன் (உதவிப் பணிப்பாளர், தேசிய அருங்கலைகள் பேரவை, வடமாகாணம்) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கே.விக்னேஸ் ( தலைவர், யாழ் வர்த்தகத் தொழிற்துறை மன்றம்) ரி.எஸ்.முகுந்தன் (மூத்த அறிவிப்பாளர், தமிழ் எவ்எம் வானொலி) ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் கலாபூசண விருது பெற்ற மூத்த கைப்பணியாளர்கள் நான்கு பேர், யாழ் மாவட்டச் செயலரால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *