மேலும்

அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ளது ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு – சுமந்திரன்

sumanthiranமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் சிங்கள ஜூரிகள் சபை அளித்த தீர்ப்பை நிராகரித்துள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை இந்த தீர்ப்பு எடுத்துக் காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டவாளருமான எம்.ஏ.சுமந்திரன்,

“ரவிராஜ் படுகொலை வழக்கில் நேற்று அதிகாலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஏற்க முடியாது.

ஐந்து எதிரிகளையும் விடுவித்து கொழும்பு மேல்நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளேன்.

இந்தத் தீர்ப்பு, சிறிலங்காவின் நீதித்துறை நம்பகமானது அல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கள ஜூரிகளை மாத்திரம் கொண்ட ஒரு ஜூரிகள் சபையிடம் இருந்து, நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்க முடியாது என்ற பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு அச்சத்தை இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

இது எங்களுக்கு (சிங்களவர்கள்) எதிர் அவர்கள் (தமிழர்) என்ற விவகாரமாகவே மாறியிருந்தது. இந்த ஜூரிகள் சபை  குறித்து சுட்டிக்காட்டும் உரிமை எமக்கு இருந்தது. ஆனால் அதனை நீதிபதி நிராகரித்து விட்டார்.

இந்த தீர்ப்பு, 2009 மேமாதம் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து, சுதந்திரமான அனைத்துலக நிபுணர்களின் விசாரணையே தேவை என்பதை எடுத்துக் காட்டியுள்ளது.

இந்த வழக்கில் திட்டமிட்ட படுகொலையை செய்தவர்கள் என்று ஐந்து பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

படுகொலையில் அரச புலனாய்வுப் பிரிவுகள் தொடர்புபட்டுள்ளன என்பது தெளிவாகியுள்ளது.

ஆனால், இந்தப் படுகொலைக்கு யார் உத்தரவிட்டார் என்று அடையாளம் காணப்படவோ, சட்டத்தின் முன் நிறுத்தப்படவோ இல்லை.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *