மேலும்

காங்கேசன்துறையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் – சிறிலங்கா அரசு அனுமதி

cruise-shipகாங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்றை நடத்துவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ஜனவரி 2ஆம் நாள் தொடக்கம் 12ஆம் நாள் வரை, திருவெம்பாவை திருவிழா, சிதம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருவெம்பாவை திருவிழாவின் இறுதி நாளான திருவாதிரை அன்று, ஆருத்ரா தரிசனம் என்னும் நிகழ்வு இடம்பெறுவது வழக்கம்.

வடமாகாணத்தில் உள்ள இந்துக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் சேவைக்கு ஒழுங்குகளை செய்து தருமாறு சிவசேனை அமைப்பின் அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன், வடமாகாண ஆளுனர் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வடமாகாண ஆளுனர் இந்தக் கோரிக்கையை சிறிலங்கா அதிபரிடம் முன்வைத்திருந்த நிலையில், இந்தக் கப்பல் சேவைக்கு சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, 32 ஆண்டுகளுக்குப் பின்னர், வடபகுதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு முதல்முறையாக பயணிகள் கப்பல் சேவை நடத்தப்படவுள்ளது.

இந்தக் கப்பலில் பயணிக்கும் யாத்திரிகர்களே கப்பல் கட்டணம், உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்நாட்டுக்கும்,சிறிலங்காவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகும் என்று வடமாகாண ஆளுனர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *