மேலும்

200 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்திய சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் – சிவ்சங்கர் மேனன்

shivshankar-menonகடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரினால், சுமார் 200 பில்லியன் டொலர் இழப்பை சிறிலங்கா எதிர்கொண்டது என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தகவல் வெளியிட்டுள்ளார்.

சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இழப்பு மதிப்பீடுகளில் சந்தர்ப்பச் செலவுகள், உள்ளடக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள சிவ்சங்கர் மேனன், தெற்காசியாவிலேயே, மிகவும் திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கொண்டிருந்த சிறிலங்காவின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது என்றும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு நிபுணர்களின் தகவல்களின் படி, சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில்,  1983ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரை 80 ஆயிரம் தொடக்கம் 1 இலட்சம் வரையானோர் உயிரிழந்தனர்.

இவர்களில், 30 ஆயிரம் தொடக்கம் 50 ஆயிரம் வரையானோர் பொதுமக்களாவர். 27,693 விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளும், 23,790 சிறிலங்கா படையினரும், 1,155 இந்திய அமைதிப்படையினரும் இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களில் அடங்கியுள்ளனர்.

இறுதிக்கட்டப் போர், 3 இலட்சம் பேரை அகதிகளாக அல்லது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாக மாற்றியது. அத்துடன் வடக்கு, கிழக்கில் 1.6 மில்லியன் கண்ணிவெடிகளையும் இந்தப் போர் விட்டுச் சென்றுள்ளது.

போரினால் உண்மையில் இரண்டு சமூகங்களும் இழப்புகளைச் சந்தித்தன. இந்த இழப்புகளுக்கு விடுதலைப் புலிகளும், சிங்களப் பேரினவாதமும், சமமான பொறுப்பாளிகளாவர்.

காணாமற்போதல்கள், கொலைகள், சித்திரவதை, தடுப்புக்காவல், போரில் எல்லாத் தரப்பினராலும் பரவலாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் என்பனவற்றினால், சிறிலங்காவின் ஜனநாயகம், குற்றமிழைத்ததாக மாறியது.

பொதுமக்கள் – இராணுவ உறவு திரிபடைந்தது, சிங்கள சமூகம் இராணுவ மயப்படுத்தப்பட்டது, தமிழ் சிவில் சமூகம் தலைமையிழந்து, சரியான திசையை அறியாது, நம்பிக்கையிழந்து போனது.

அதேபோல, போரின் விளைவினால் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

அமைதி என்பது, வன்முறை இல்லாத நிலை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை விடவும், மேலானது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

போர் முடிவுற்றதன் பின்னர், அமைதியை ஏற்படுத்த சிறிலங்கா தவறிவிட்டது. சிங்களவர்களும், தமிழர்களும் இதனை ஏற்படுத்த தவறிவிட்டனர்.

போரில் வெற்றியீட்டிய மகிந்த ராஜபக்ச அரசும், சிங்களப் பெரும்பான்மையினரும், உண்மையான அமைதிக்குத் தேவையான பெருந்தன்மையைக் காண்பிக்கவில்லை. அதுபோலவே தமிழ்ச் சமூகத்திலும், அமைதியை ஏற்படுத்தும் தலைமை இருக்கவில்லை.

ஒரு மண்டேலாவுக்கு ஒரு டி கிளார்க் தேவை. சிறிலங்காவில் அது தென்படவில்லை.

எல்லா இலங்கையர்களுக்குமான தலைவராக வர வேண்டும் என்றால், அரசியல் அதிகாரங்களை பகிர்ந்து, மனித உரிமைகளை நிலைநாட்டி, வெற்றிபெற்றவர், தோற்கடித்தவர் என்ற கெளரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று ராஜபக்சவிடம் இந்தியா கேட்டுக் கொண்டது.

ஆனால் ராஜபக்சவினால் பெருந்தன்மையாக நடந்து கொள்ள முடியவில்லை.

எனினும், தமிழர் தரப்பில் தன்னுடன் இணைந்து பணியாற்ற யாரும் இல்லை என்று ராஜபக்ச இந்தியாவுக்கு கூறியது சரியாகவே இருந்தது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *