மேலும்

திருகோணமலையில் அமெரிக்கத் தளபதி – மரைன் படைப்பிரிவை சந்தித்தார்

admiral-harris-trincomalee-1அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று திருகோணமலைக்குச் சென்று, துறைமுகத்தைப் பார்வையிட்டதுடன், சிறிலங்கா கடற்படையினர் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்த அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் இணைந்து திருகோணமலைக்குச் சென்றார்.

அங்கு, சிறிலங்கா கடற்படையினருக்கு அனர்த்த உதவி மற்றும் கடலுக்கு அடியில் கண்ணிவெடிகளை அகற்றும் பயிற்சிகளை அளித்து வரும் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடினார்.

மேலும்,திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்திருந்த யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில், வந்த அமெரிக்காவின் 11 ஆவது மரைன் நடவடிக்கைப் பிரிவைச் சேர்ந்த படையினருடன் இணைந்து கடந்த 23ஆம் நாள் தொடக்கம், 25ஆம் நாள் வரை கடலிலும், தரையிலும் பயிற்சிகளை மேற்கொண்ட சிறிலங்காவின் மரைன் படைப்பிரிவினரையும், அட்மிரல் ஹரிஸ் சந்தித்தார்.

admiral-harris-trincomalee-1admiral-harris-trincomalee-2admiral-harris-trincomalee-3admiral-harris-trincomalee-4admiral-harris-trincomalee-5

கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும் சிறிலங்கா கடற்படை, இராணுவத் தளபதிகள் பங்கேற்ற கூட்டம் ஒன்றிலும் கலந்து கொண்ட அட்மிரல் ஹரிஸ், திருகோணமலைத் துறைமுகத்தை, கடற்படையின் அதிவேகப் படகில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், 2004 ஆம் ஆண்டு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட, தற்போது சிறிலங்கா கடற்படையில் சமுத்ர என்ற பெயரில் ஆழ்கடல் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் கப்பலிலும், அட்மிரல் ஹரிஸ் ஆய்வு செய்தார்.

கடந்த பத்தாண்டுகளில், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட முதலாவது நான்கு நட்சத்திர அமெரிக்க அதிகாரியான அட்மிரல் ஹரி ஹரிஸ், நேற்று தனது சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு, தனி விமானத்தில் ஹவாயில் உள்ள பசுபிக் கட்டளைப் பணியகத்துக்கு திரும்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *