சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்தித்தார் இந்திய கடற்படைத் தளபதி
சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
ஐந்து நாள் அதிகார பூர்வ பயணமாக இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா நேற்று முன்தினம் கொழும்பைச் சென்றடைந்தார்.
காலி கலந்துரையாடலில் பங்கேற்கும் வகையிலும், சிறிலங்காவின் அரச மற்றும் பாதுகாப்பு தரப்பினரைச் சந்திக்கும் நோக்கிலும், அட்மிரல் சுனில் லன்பாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்ற இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியுடன் பேச்சுக்களை நடத்தினார்.
இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.