மேலும்

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலி அதிரடியாக இடமாற்றம்

Sri_Lanka_Army_Flagசிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக பிரிகேடியர் சி.வி.டி.வி.குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பி்ரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவினால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் சுரேஸ் சாலி இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற முக்கிய கொலைகள் மற்றும் ஆட்கடத்தல்களில் தொடர்புடைய இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் மீதான விசாரணைக்கு பிரிகேடியர் சுரேஸ் சாலி ஒத்துழைப்பு வழங்காமல் முட்டுக்கட்டை போடுவதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அத்துடன், வடக்கில் ஆவா குழுவின் பின்னணியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவே இயங்குவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.

இந்தப் பின்னணியிலேயே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் பிரிகேடியர் சுரேஸ் சாலி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பணிப்பாளராக பிரிகேடியர் சி.வி.டி.வி.குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்கு புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழக்கமாக மேற்கொள்ளப்படும் இடமாற்றம் தான் என்றும் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பி்ரிகேடியர் ரொஷான் செனிவிரத்ன தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *