மேலும்

சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மீது வாள்வெட்டு – இருவர் காயம்

police-wounded-1சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலக்கத்தகடுகள் இல்லாத இரண்டு உந்துருளிகளில் வந்த முகமூடி அணிந்த ஆறு மர்ம நபர்கள், சுன்னாகம் நகரில், சிவில் உடையில் நின்ற இரண்டு புலனாய்வு அதிகாரிகளையும் வெட்டிக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றனர்.

இந்தச் சம்பவத்தில், நிமால் பண்டார மற்றும் நவரட்ண ஆகிய இரண்டு தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தலை மற்றும் கையில் காயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து, சுன்னாகம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

police-wounded-1police-wounded-2

கொக்குவிலில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமான கந்தரோடையைச் சேர்ந்த மாணவன் சுலக்சனின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுன்னாகத்தில் உள்ள வணிக நிறுவனம் ஒன்றில் கப்பம் பெறுவதற்கு முகமூடி அணிந்த ஆறுபேர் முயன்ற போது, அதனைத் தடுக்க முற்பட்ட காவல்துறையினர் இருவரையும் அவர்கள் வாளால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றதாக கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் காவல்துறையினர் இருவரும் சிறுகாயம் அடைந்தாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *