மேலும்

அகதிகள் நாடு திரும்புவதற்கான கப்பல் வசதி – வாக்குறுதியில் இருந்து நழுவுகிறது இந்தியா?

Vikas-Swarupசிறிலங்கா அரசாங்கத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தமது தாயகம் திரும்ப விரும்பினால், இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் 2500 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இவர்கள் இந்திய அரசாங்கம் ஒழுங்கு செய்து தருவதாக வாக்குறுதி அளித்த கப்பல் சேவைக்காக காத்திருப்பதாகவும், செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து இந்திய ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அகதிகள் தாயகம் திரும்புவது தொடர்பாக இந்திய அரசாங்கத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

“கொழும்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவரராஜுக்கும் சந்திரகாசனுக்கும் இடையில் நடந்த சந்திப்பில் நானும் கலந்து கொண்டிருந்தேன்.

அந்தச் சந்திப்பின் போது, அகதிகளாக இருக்கும் மக்கள் சுயவிருப்பின் பேரிலேயே தாயகம் திரும்ப வேண்டும் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

சுயமாக முடிவெடுத்து, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் நாடு திரும்ப இந்த மக்கள் விரும்பினால், நாம் ஏன் அதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தவாறு, அகதிகள் நாடு திரும்புவதற்கு தேவையான கப்பல் பயண வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து அவர் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *