மேலும்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சிறிலங்காவின் அடுத்த மனித உரிமைகள் சவால்

workshop-at-jaffna-st-marys-churchசிறிலங்காவில் யுத்தம் முடிவடைந்த பின்னர், பெண்களின் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பாரியளவில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளன என்பதால் இதனைத் தடுப்பதற்கு சிறிலங்காவைச் சேர்ந்த செயற்பாட்டார்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறையானது உள்நாட்டு யுத்தம் காரணமாக மேலும் மோசமடைந்துள்ளதாக பல்வேறு உரிமை பேண் அமைப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த அடிப்படையில், ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் சிறிலங்காவிற்கான பிரதிநிதி லெனே கே. கிறிஸ்ரியன்சன் 2008 இற்கு முன்னர் அதாவது உள்நாட்டு யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் சிறிலங்காவில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாகக் குறிப்பிட்டிருந்தார்:

‘இக்காலப்பகுதியில் பால்நிலை சார்ந்த வன்முறைகள் அனைத்து இனம், மதம் போன்றவற்றில் பரவலாக அதிகளவில் இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றன.. சட்டத்தின் ஊடாக இவ்வாறான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான சில சாதகமான பொறிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் தற்போதும் இவ்வாறான வன்முறைகள் வெளியில் பேசப்படுவது மிகக் குறைவாகவே உள்ளன’

workshop-at-jaffna-st-marys-church

கிறிஸ்ரியன்சனின் இந்தக் கருத்துக்கள் ஏழு ஆண்டுகளின் பின்னரும் மிகச் சரியாகவே காணப்படுகின்றது. சிறிலங்காவில் வாழும் 40 சதவீதமான பெண்களில் 30 சதவீதமானவர்கள் இன்று பல்வேறு வகையான வன்முறைகளுக்கு உள்ளாகும் அதேவேளையில் இலங்கைத் தீவு முழுமையிலும் வாழும் 60 சதவீதமான பெண்கள் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்படுவதாகவும் இந்தப் பெண்கள் பேருந்து, தொடருந்து போன்றவற்றில் பயணம் செய்யும் போதும் அல்லது வீதிகளில் நடந்து செல்லும் போதும் தகாத வார்த்தைகளால் அல்லது உடல் சார்ந்த வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர் என ஐ.நாவின் பெண்களுக்கான அறிக்கையிடல் வலைப்பின்னல் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஐ.நா சனத்தொகை நிதியத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், பால்நிலை அடிப்படையான வன்முறையானது குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட இடங்களிலேயே அதிகம் இடம்பெறுவதாகவும், ஆனால் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் போன்றன  அனைத்து இடங்களிலும் பரந்து காணப்படுவதாகவும் உறுதிப்படுத்தப்படுகிறது.

பால்நிலை சார்ந்த வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் உள்ளடங்கலான பால்நிலையை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் சிறிலங்காவில் அறிக்கையிடப்படுவதில்லை என பெண்கள் உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் சில அறிக்கையிடப்பட்டாலும் அவை அதிகாரிகளால் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு தீவிர கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான வன்முறைகளுக்கு உட்படும் பெண்கள் தமது பிரச்சினைகளை வெளியில் கூறவேண்டும் என்பதற்கான ஒரு விழிப்புணர்வை வழங்குவதற்கான செயற்திட்டத்தில் தற்போது சிறிலங்காவைச் சேர்ந்த சில பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள் இறங்கியுள்ளனர்.

‘மக்கள் சிலவேளைகளில் தமது கலாசாரத்தின் மீது பழிசுமத்துகின்றனர். அல்லது தமது கலாசாரத்தை இவ்வாறான வன்முறைகளை மன்னிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர்’ என பால்நிலை சார்ந்த வன்முறைக்கு எதிரான செயற்பாட்டாளரான 23 வயதான சாமத்திய பெர்னாண்டோ தெரிவித்தார்.

‘ஆனால் எந்தவொரு கலாசாரமும் பெண்களை அல்லது சிறுவர்களைத் துன்புறுத்தலாம் எனப் போதிக்காது. ஆகவே இவ்வாறான வன்முறைகளை வெளியில் பேசாதிருப்பதானது அமைதிக் கலாசாரமாகவும், புறக்கணிப்புக் கலாசாரமாகவும் மற்றும் தண்டனையிலிருந்து தப்புவதற்கான கலாசாரமாகவே நான் நோக்குகிறேன்’ என சாமத்திய பெர்னாண்டோ தெரிவித்தார்.

பெண்கள் வழிகாட்டல்கள் மற்றும் பெண்கள் சாரணர்களுக்கான உலக அமைப்பின் சிறிலங்காவிற்கான ஒருங்கிணைப்பாளராக பெர்னாண்டோ செயற்படுகிறார். இந்த அமைப்பானது உலகம் எங்கும் வாழும் பெண்கள் பாதுகாப்பாகவும் வலுவுள்ளவர்களாகவும் வாழ்வதற்கான வன்முறைகளைத் தடுப்பதற்கான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர்.

workshop-at-kiran-madya-maha-vidyalayam-batticaloa

சிறிலங்காவில் உள்ள யுவதிகள் மற்றும் பெண்கள் மத்தியில் பால்நிலை சார்ந்த வன்முறைகள் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொண்டு அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடிய ஆற்றலை வளர்க்கும் பரப்புரைச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள 65 பயிற்றுவிப்பாளர்களில் பெர்னாண்டோவும் ஒருவராவார்.

இவ்வாறான சித்திரவதைகள் தவறானது என்பதை யுவதிகள் மற்றும் பெண்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுவத்துவதன் மூலம், தமது சொந்த உரிமைகள் தொடர்பாகப் பெண்கள் வெளியில் பேசக்கூடிய நிலையை உருவாக்க முடியும் என பெர்னாண்டோ நம்புகிறார். இவ்வாறான வன்முறைகள் தொடர்பில் பெண்கள் வெளியில் பேசக்கூடாது என ஆண்கள் தடுக்கும் அளவிற்கு வலுவான ஒரு சமூக இழுக்கு உள்ளதால் அதனை வென்றெடுப்பதென்பது மிகப்பெரிய சவாலாக உள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

2013ல் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரமானது அமைதிக் கலாசாரத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. சிறிலங்காவில் வாழும் ஆண்களில் கிட்டத்தட்ட 15 சதவீதமானவர்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவதாகவும், 65 சதவீதமானவர்கள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறான பாலியல் வன்முறையில் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களில் 5 சதவீதமானவர்கள் மட்டுமே அவர்கள் செய்த குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் பலவந்தப் பாலியல் காரணமாக சட்டரீதியாக விவாகரத்துப் பெறுவதற்கு சிறிலங்காவின் சட்டம் இடமளிக்கிறது.

‘நான் நேர்காணல் மேற்கொள்ளும் பால்நிலை வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்கள் சந்தித்த பிரச்சினைகள் தொடர்பாக வெளியில் கூறுவதற்கு தயக்கம் அடைந்தனர். அவர்கள் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்கினர். ஆனால் நாங்கள் அவர்ளுக்கு போதியளவு விளக்கத்தை வழங்கிய பின்னர் அவர்களின் நடத்தையில் அவர்கள் மனப்பாங்கில் சிறிது மாற்றம் ஏற்படுவதை நான் உணர்கிறேன்’ என கடந்த மூன்று ஆண்டுகளாக பெண்கள் வழிகாட்டல்கள் மற்றும் பெண்கள் சாரணர்களுக்கான உலக அமைப்பிற்கான சிறிலங்காவிற்கான பிரதிநிதியாகப் பணியாற்றும் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஆங்கிலத்தில்  – LISA NIKOLAU
வழிமூலம்       – Human osphere
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *