மேலும்

சீன – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – விபரங்களை மறைக்கும் சிறிலங்கா

general-chang-wanquan-karunasena-hettiatrachchi-1இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், பீஜிங்கில் கடந்த 13ஆம் நாள் இடம்பெற்றதாக சீன இராணுவத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற சிறிலங்கா தரப்புக் குழுவுக்கு பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமை தாங்கியிருந்தார். சீனத் தரப்புக் குழுவுக்கு, சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டு அதிகாரிகள் திணைக்களத்தின் பிரதித் தலைவர்  அட்மிரல் சன் ஜியான்கூ தலைமை தாங்கினார்.

இந்தக் கலந்துரையாடலில்,  தெற்காசிய நிலவரங்கள், இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பரிமாற்றங்கள், ஒத்துழைப்புகள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலின் போது, கருத்து வெளியிட்ட அட்மிரல் சன் ஜியான்கூ, தெற்காசியாவை முக்கிய பங்காளராக சீனா கருதுவதாகவும், சுதந்திரம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பாதுகாக்கும் சிறிலங்காவின் முயற்சிகளுக்கு சீனா உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் குறிப்பிட்டார்.

“இரண்டு நாடுகளும் உயர்மட்டப் பரிமாற்றங்களை மேற்கொள்கின்றன. பல்வேறு துறைகளிலும் இருதரப்புகளும்  நெருக்கமான ஒத்துழைப்பை கொண்டிருக்கின்றன.

கரிசனைக்குரிய விவகாரங்களில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கின்றன. அனைத்துலக , பிராந்திய விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்பையும் கொண்டிருக்கின்றன.

இருதரப்பு உறவுகளின் ஒரு மைல்கல்லாக இரு நாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான உறவுகள் தொடர்கின்றன. சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் இராணுவ அபிவிருத்திக்கு சீன இராணுவம் தொடர்ந்து உதவ விரும்புகிறது.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் காணப்பட்ட இணக்கப்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு உதவவும் சீன இராணுவம் தயாராக உள்ளது.

இருதரப்பும் மூலோபாய ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, உயர்மட்ட தொடர்பாடல், இளம் இராணுவ அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளல், கடற்படை பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், படையினருக்கான பயிற்சி, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னகர்த்தல், போன்றவற்றில் மேலும் உறவுகளை வலுப்படுத்த வேண்டும்” என்றும் அட்மிரல் சன்  ஜியான்கூ, குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, “பல்வேறு சோதனையான கட்டங்களையும் கடந்து, சிறிலங்காவும் சீனாவும் நீண்டகால நட்பு நாடுகளாக விளங்குகின்றன.

பல்வேறு துறைகளிலும் பரஸ்பரம் நன்மையளிக்கக் கூடிய பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை சீனாவுடன் ஆழமாக்குவதற்கு சிறிலங்கா தயாராக உள்ளது.

சிறிலங்கா- சீன இராணுவங்களுக்கு இடையிலான  பலமட்ட மற்றும் பலதுறை கலந்துரையாடல்கள் சுமுகமாகவும், பயனுள்ள வகையிலும் தொடர்கின்றன. சீனாவுடன் எப்போதும் பரஸ்பர உதவிகளைத் தொடர்வதற்கு சிறிலங்கா இராணுவம் விரும்புகிறது.

உயர்மட்ட மூலோபாய தொடர்பாடல், மற்றும் பயிற்சி, கூட்டுப் பயிற்சி, மூலோபாய ஆராய்ச்சி, பலதரப்பு ஒத்துழைப்பு, ஆழமான இருதரப்பு இராணுவங்களுக்கிடையிலான உறவுகளை ஆழப்படுத்தல், இருநாடுகளினதும் அடிப்படை நலன்களையும் பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாத்தல்,உள்ளிட்ட ஒத்துழைப்பை முன்நோக்கி நகர்த்துவதற்கும் சிறிலங்கா விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.

இந்தப் பாதுகாப்புக் கலந்துரையாடல் நடந்த மூன்று நாட்களுக்கு மேலாகியும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சோ, சிறிலங்கா அரசாங்கமோ, சீன பாதுகாப்பு அமைச்சோ அதிகாரபூர்வமான எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *