மேலும்

இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பும் அகதிகள் எதிர்கொள்ளும் சவால்கள்

refugees-houseதென்னிந்தியாவிலிருந்து தமது சொந்த நாட்டிற்குத் திரும்பும் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் இவ்வாறு திரும்பி வரும் மக்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்கான அவசியமான திட்டங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திடம் போதியளவு நிதி காணப்படவில்லை.

இவ்வாண்டு இதுவரை 550 இற்கும் மேற்பட்ட அகதிகள் இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பி வந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு சிறிலங்காவிற்குத் திரும்பி வந்த ஈழஅகதிகளின் மொத்த எண்ணிக்கையின் இருபது சதவீதம் மட்டுமேயாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், திருகோணமலை மற்றும் கண்டி போன்ற இடங்களில் மீள்குடியேறியுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டிலிருந்து வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள மக்களை மீளவும் சொந்த நாட்டிற்கு வருமாறு ஊக்குவிப்பதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் அரசாங்கத்தின் இந்தக் கோட்பாடானது போதியளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது.

தமது சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திரும்பி வரும் பெரும்பாலான குடும்பங்களின் வீடுகள் யுத்தத்தின் போது அழிக்கப்பட்டுள்ளன.

‘எமது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் தனியொரு அறையினால் மட்டும் கட்டப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தோம். இதன் காரணமாகவே நாங்கள் அங்கிருந்து வெளியேறி எமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வந்தமைக்கான பிரதான காரணமாகும். எமது பிள்ளைகள் எமது சொந்த நாட்டில் வாழவேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆனால் இங்கும் நாம் துன்பத்தையே அனுபவிக்கிறோம். நாங்கள் இடிந்த நிலையிலுள்ள எமது வீட்டிலேயே தங்கியுள்ளோம்’ என செப்ரெம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் இந்தியாவிலிருந்து தனது குடும்பத்தாருடன் தனது சொந்த இடமான தலைமன்னாரில் மீள்குடியேறியுள்ள 37 வயதான பிரான்ங்க் வெள்ளச்சாமி தெரிவித்தார்.

‘சிறிலங்காவை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் நாங்கள் மீன்பிடியில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது எமது படகுகள் அழிவடைந்த நிலையில் காணப்படுகின்றன. இதனால் நாங்கள் எமது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபடமுடியாதுள்ளது’ என இந்தியாவின் அகதி முகாம் ஒன்றில் 10 ஆண்டுகளாகத் தங்கியிருந்து தற்போது இலங்கைக்குத் திரும்பியுள்ள 42 வயதான வெள்ளச்சாமி ஜேசுராஜா தெரிவித்தார்.

refugees-house

தனது குடும்பமும் தங்குமிட வசதியில்லாததாலும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதிலும் சவால்களை எதிர்கொள்வதாக இந்தியாவிலிருந்து திரும்பி வந்துள்ள 40 வயதான பெரியசாமி கனகராசா தெரிவித்தார். ‘நாங்கள் எமது சொந்த இடத்திற்கு திரும்பி வந்தவுடன் இது தொடர்பாக மாவட்டச் செயலரிடம் தெரியப்படுத்தினோம். அத்துடன் எமக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தோம். எமக்கு உதவுவதாக அவர்கள் உறுதி வழங்கிய போதிலும் இது தாமதமாகின்றது. இதனால் நாங்கள் துன்பங்களை அனுபவித்து வருகிறோம்’ என திரு.கனகராசா தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் அகதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தால் இலவச விமானப் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படுவதுடன் இலவச போக்குவரத்து வசதிகளும் மானியமும் வழங்கப்படுகின்றன. இருப்பினும் இந்த அகதிகள் தமது நாட்டிற்குத் திரும்பிய பின்னர் முதல் மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள் வரை மிகவும் துன்பப்படுவதாக ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘அதிகமான மக்கள் இந்தியாவின் அகதி முகாங்களில் 10-20 ஆண்டுகள் வரை தங்கியிருந்த பின்னரே தற்போது தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வருகின்றனர். இவர்களுக்கான வீடுகள், நீர்வசதிகள், கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புக்கள் போன்றன பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன. ஆகவே இவ்வாறான வசதிகளை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவேண்டும். இதுவே ஈழஅகதிகள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்கான தீர்மானிக்கும் காரணியாக விளங்கும்’ என ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தியாவில் கல்விகற்ற இளைஞர்கள் தமது சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திரும்பி வரும்போது அவர்களின் கல்விச் சான்றிதழ்களை உயர் கல்வித் திணைக்களங்கள் மற்றும் தொழில் வழங்குனர்கள் அங்கீகரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன.

jennifer-jesuraja

ஜெனீபர் ஜேசுராஜா

சிறிலங்காவின் க.பொ.த.சாதாரண தரத்திற்குச் சமமான கல்வியை இந்தியாவில் பெற்றுக் கொண்ட ஜெனீபர் ஜேசுராஜா மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறிலங்காவின் கபொத சாதாரண தரக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்காகச் செலவிட வேண்டியுள்ளார்.

இதேபோன்று இந்தியாவில் கல்விகற்ற சகாயா மெக்லின் தனது வகுப்பில் அதியுயர் புள்ளிகளைப் பெற்றதுடன்  கணணி விஞ்ஞானப் பாடத்தில் இந்திய டிப்ளோமா பெற்றுக்கொண்டுள்ள போதிலும் அவரால் இவ்வாறான சான்றிதழ்களுடன் சிறிலங்காவில் பொருத்தமான வேலைவாய்ப்பைப் பெற முடியவில்லை.

‘நான் சிறிலங்காவில் உயர் கல்வியைக் கற்பதற்குக் கூட இந்தியாவில் பெற்றுக்கொண்ட சான்றிதழ்களை வழங்கமுடியவில்லை. நான் எனது தகைமைக்கு ஏற்றதோ அல்லது அதற்குக் குறைவான தொழில் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஏனெனில் தொழில் ஒன்று இல்லாமல் வாழ்வதென்பது மிகவும் கடினமானதாகும்’ என செல்வி மெக்லின் தெரிவித்தார்.

போரால் பாதிக்கப்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் போரின் போது கணவனை இழந்த பெண்கள் உட்பட அனைவரையும் உள்ளடக்கி அமுல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களுக்குள் இந்தியாவிலிருந்து திரும்பி வருவோரும் உள்ளடக்கப்படுவர் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்தது. ஆனால் இதுவரை இவ்வாறு திரும்பி வந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசாங்கத்தின்  சிறப்பு நிதித் திட்டங்கள் எவையும் சென்றடையவில்லை.

‘போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நலன்புரித் திட்டங்களின் கீழ் இந்தியாவிலிருந்து திரும்பி வந்த குடும்பங்களில் வீடற்றவர்கள் பதிவுசெய்து கொள்ள முடியும்’ என சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

இவ்வாறு திரும்பி வந்த மக்களின் வீடுகள் சேதமடைந்திருந்தால் அவர்கள் தமது அரசாங்க அதிபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அரசாங்க அதிபர்களால் இதற்கான நிதி வழங்கப்படும் எனவும் வி.சிவஞானசோதி தெரிவித்திருந்தார்.

ஆனாலும் இந்தியாவிலிருந்து திரும்பி வந்த மக்கள் தமக்கான வீடுகளைப் பெற்றுக் கொள்வதில் காலதாமதம் ஏற்படுகின்றது என்பதை அரசாங்க அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றனர். ‘ஏற்கனவே எமக்காக ஒதுக்கப்பட்ட நிதி முடிவடைந்துள்ளதால் இந்தியாவிலிருந்து திரும்பி வந்துள்ள மக்கள் புதிய திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் வரை காத்திருக்க வேண்டியுள்ளனர்’ என மன்னார் மாவட்ட அரசாங்க அதிகாரி திரு.எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்தார்.

சிறிலங்காவிற்குத் திரும்பி வரும் அகதிகள் இந்தியக் கல்வித் தகைமையுடன் இங்கு பணியாற்றுவதற்கு உதவுவதற்கான எவ்வித சிறப்புத் திட்டங்களும் வரையப்படவில்லை என்பதை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஏற்றுக்கொண்டது.  ‘எல்லாத் திட்டங்களையும் உடனடியாக வரைய முடியாது. இந்தியாவிலிருந்து திரும்பி வந்து எமது நாட்டில் மீள்குடியேறிய இளைஞர்களின் கல்விச் சான்றிதழ்கள் தொடர்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வித் திணைக்களங்களுடன் கலந்துரையாடியுள்ளோம்’ என திரு.சிவஞானசோதி தெரிவித்தார்.

இந்த மக்களின் வேலையற்றோர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, மீள்குடியேற்ற அமைச்சானது இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பி வந்துள்ள ஒவ்வொரு குடும்பமும் சுயதொழிலில் ஈடுபடுவதற்காக ரூபா 100,000 மானியமாக வழங்கப்படுவதற்கான திட்டம் ஒன்றைக் கொண்டுள்ளது.

வழிமூலம்    – சண்டே ரைம்ஸ்
ஆங்கிலத்தில் – ரவி சங்கர்
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *