மேலும்

சிறிலங்கா இராணுவத்துக்கு கிடைத்த வாய்ப்பு பறிபோனது

mullai-army-training (1)ஆபிரிக்க நாடான மாலியில் 1000 பேர் கொண்ட வலுவான பற்றாலியன் ஒன்றை, ஐ.நா அமைதிப்படை சார்பில் நிறுத்தும் வாய்ப்பை, சிறிலங்கா இராணுவம் இழந்துள்ளது.

ஐ.நா அமைதிப்படைக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக மாலி விளங்குகிறது. அங்கு 2013ஆம் ஆண்டு ஐ.நா அமைதிப்படை நிறுத்தப்பட்ட பின்னர், 120 இற்கும் அதிகமான பல்வேறு நாடுகளின் படையினர் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.

இங்கு அமைதிகாப்புப் பணியில் ஈடுபடுத்த 1000 சிறிலங்கா படையினரைக் கொண்ட பற்றாலியன் ஒன்றை ஐ.நா கோரியிருந்தது.

எனினும், 1000 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ பற்றாலியனுக்குத் தேவையான கனரக ஆயுதங்கள் மற்றும் காலணிகளை ஐ.நாவின் காலக்கெடுவுக்குள் பெற்றுக் கொள்ள சிறிலங்கா இராணுவத்தினால் முடியாமல் போயுள்ளது.

சிறிலங்கா இராணுவத்துக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ஐ.நா ரத்துச் செய்வதற்கு முன்னதாக, பலமுறை எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

மாலியில் சிறிலங்கா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ஐ.நா ரத்துச் செய்துள்ள நிலையில், அங்கு 100 பேர் கொண்ட மரபுரீதியான இராணுவ கொம்பனி ஒன்றை நிறுத்துவதற்கு மாத்திரம் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஊடாக, சிறிலங்கா இராணுவத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

மாலியில் சிறிலங்கா இராணுவத்தின் 1000 பேர் கொண்ட பற்றாலியன் ஒன்றை நிறுத்தும் வாய்ப்பு பறிபோயுள்ளதால், சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஐ.நா அமைதிகாப்புப் பணியில் ஈடுபடும் சிறிலங்கா படையைச்  சேர்ந்த ஒவ்வொருவருக்கும் 1332 டொலர் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெருமளவில் அந்நியச் செலாவணியை சம்பாதிக்கும் வாய்ப்பும் சிறிலங்காவுக்குப் பறிபோயுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *