மேலும்

தடைவிதித்தது முப்படைத் தளபதிகள் தான் – நழுவுகிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

Karunasena Hettiarachchiசம்பூர் விவகாரம் தொடர்பாக தாம் உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கவில்லை என்றும், கிழக்கு முதல்வர் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிக்கும் முடிவை முப்படைகளின் தளபதிகளே எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி.

இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றிடம், கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன். இந்த விவகாரம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கலாம், இன்னும் விரும்பத்தகாத விடயங்கள் ஏதும் நடக்காமல், இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று ஆலோசித்தேன்.

கிழக்கு முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளைப் புறக்கணிப்பது மற்றும் அவரை இராணுவ முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்பதே, இராணுவத்தின் நிலைப்பாடாக இருந்தது.

அவர்களின் முடிவுக்கு நான் இணக்கம் தெரிவித்தேன். அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில், அந்த முடிவை நான் சம்பந்தப்பட்ட தரப்புகள் அனைத்துக்கும் அறிவித்தேன்.  அவ்வளவு தான். நான் எந்த உத்தரவையும் வழங்கவில்லை.

இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கோரி, சிறிலங்கா அதிபருக்கும், பிரதமருக்கும் கிழக்கு முதல்வர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அவர் மன்னிப்புக் கோரியிருந்தார் என்றால், மேலதிக நடவடிக்கையோ, எதிர்வினைகளோ தேவையில்லை.

கடற்படையின் அறிக்கையை நான் சிறிலங்கா அதிபருக்கும், அதன் பிரதியை பிரதமருக்கும் அனுப்பியிருந்தேன்.

மேலதிக விசாரணைகளை நடத்துவதா இல்லையா என்று முடிவு செய்வது சிறிலங்கா அதிபரைப் பொறுத்த விடயம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *