மேலும்

சிறிலங்காவின் மீறல்களைக் குழிதோண்டிப் புதைக்க முயன்றவரா அடுத்த ஐ.நா பொதுச்செயலர்?

Helen Clarkசிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக, கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரைப் பதவியிலிருந்து விலக்கினார்கள்.

இவ்வாறு, The Journal ஊடகத்தில், Colum Lynch எழுதியுள்ள கட்டுரையில்  குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பொறுப்பதிகாரியான ஹெலன் கிளார்க், ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களில் முன்னிலை பெற்றுள்ள ஒருவராவார். அதிகாரம் மிக்க இந்தப் பெண்மணி உலகின் முன்னணி இராஜதந்திர அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையை திறம்பட நடத்திச் செல்வார் என்ற நம்பிக்கையை முதன் முதலாக அனைத்துலக மட்டத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

இவர் டிசம்பர் 1999 தொடக்கம் நவம்பர் 2008 வரை நியூசிலாந்து நாட்டின் பிரதமராகக் கடமையாற்றியிருந்தார். ஹெலன் கிளார்க் மிகச் சிறந்த ஒரு பெண்மணி என பொப் பாடகி லோர்ட் அறிவித்திருந்தார். இவரது ஆதரவாளர்கள் ‘ஐ.நா பொதுச் செயலராகப் போட்டியிடும் ஆன்ரி ஹெலன்’ என்கின்ற வாசகம் தாங்கிய ரீ-சேட்டை தயாரித்துள்ளனர்.

ஆனால் ஐ.நாவில் பணியாற்றும் ஹெலனின் சகஅதிகாரிகள் பலர் இவருக்கு ஆதரவளிக்கவில்லை. ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் (யு.என்.டி.பி) பொறுப்பதிகாரியாக ஏழு ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ள கிளார்க் தனது பதவிக்காலத்தில் தனது சக அதிகாரிகளின் வெறுப்பிற்கு ஆளாகும் விதமாக நடந்துள்ளார். இவர் இந்தப் பதவிக்கு வருவதன் மூலம் ஐ.நாவால் முன்னெடுக்கப்படும் மனித உரிமைச் செயற்பாடுகள் குழப்பமடையும் என இவரது சகஅதிகாரிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலை தொடர்பாக ஐ.நாவின் பொறுப்பு என்ன என்பது தொடர்பாக மிகக் கூர்மையாக விமர்சனம் செய்யப்பட்ட வேளையில், இது தொடர்பாக ஐ.நாவால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கலந்து கொண்டமைக்குப் பழிதீர்க்கும் முகமாக இவரை கிளார்க்கின் உயர் அதிகாரிகள் அவரது பதவியிலிருந்து விலக்கினார்கள்.

பதவி விலக்கப்பட்ட ஐ.நா நிகழ்ச்சித் திட்டப் பணியாளரை மீளவும் இணைத்துக் கொள்ளுமாறு பிரதி ஐ.நா செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் உயர் ஆலோசகரின் அலுவலகங்கள் கிளார்க்கின் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும் அவை நிறைவேற்றப்படவில்லை.

குறித்த பணியாளர் பதவி நீக்கப்பட்டமையானது பழிதீர்ப்பதை நோக்காகக் கொண்டதல்ல எனவும் இந்த விடயத்தில் கிளார்க் எவ்வித பங்கும் வகிக்கவில்லை எனவும் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமானது மறுத்தது. இந்த அமைப்பின் நியுயோர்க் தலைமையகத்தில் பணியாற்றிய 200 பணியாளர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இதன்மூலம் நியூயோர்க் அலுவலகத்தின் உயர் முகாமைத்துவ அதிகாரிகளின் பதவிகளைக் குறைப்புச் செய்வதே நோக்காக இருந்தது. செப்ரெம்பர் 2013 தொடக்கம் செப்ரெம்பர் 2015 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கிளார்க்கின் இத்தகைய நிர்வாக செயற்திறனானது ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு துணைபோனதாக இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் தனது பணியாளர்களை பலரை பணியிலிருந்து நீக்குவதற்கான தற்துணிவை கிளார்க் கொண்டிருந்தார் எனவும் இது அவரது தலைமைத்துவத்திற்கான ஒரு சாட்சியமாக விளங்குவதாகவும் இவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இவர் தனது அமைப்பின் நலன்களுக்காக உறுதியாகச் செயற்படும் ஒருவர் என இவரது விமர்சகர்கள் கூடச் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளனர். ‘ஐ.நா இதுவரை காணாத மிகவும் கடும்போக்காகச் செயற்படுகின்ற அதிகாரிகளில் ஒருவராக கிளார்க் விளங்குகிறார்’ என மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா தனது பொறுப்பை ஆற்றத் தவறியிருந்ததைச் சுட்டிக்காட்டி அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்ட போது அதற்குத் துணைபோனதாக குற்றம் சாட்டப்பட்டு லீனா சின்ஹா பதவி விலக்கப்பட்டார். இவர் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பணியாற்றிய ஒரு சுவீடன்-அமெரிக்க இரட்டைக் குடியுரிமை பெற்றவராவார்.

அனைத்துலக நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட அமைப்பானது மேலும் செயற்திறன் மிக்க பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது தொடர்பாக இந்த அமைப்பிற்குள் இடம்பெற்ற விவாதத்தின் போதே சின்ஹா பதவி விலக்கப்பட்ட விவகாரமும் முக்கியத்துவம் பெற்றது. அனைத்துலக நாடுகளில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போது அவை பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் ஐ.நா அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட அமைப்பானது உயிர்ப்பான பணியை ஆற்ற வேண்டும் என இதன் முகாமைத்துவ உயர் அதிகாரிகள், ஐ.நா அதிகாரிகள், ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் மனித உரிமை அதிகாரிகள் நம்புகின்றனர்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை தயாரிப்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட உயர் மட்ட அதிகாரிகளின் முதன்மை அதிகாரியாக சின்ஹா கடமையாற்றினார்.

2009ல் இடம்பெற்ற சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அதில் அகப்பட்டுத் தவித்த பல நூறாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் காப்பாற்றுவதில் ஐக்கிய நாடுகள் சபையால் இழைக்கப்பட்ட ‘திட்டமிடப்பட்ட தவறு’ தொடர்பாக இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.நா அதிகாரியும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆலோசகருமான சாள்ஸ் பெற்றியால் தயாரிக்கப்பட்ட ‘பெற்றி அறிக்கை’ யில் சுட்டிக்காட்டப்பட்டது.

நியூயோர்க்கில் செயற்பட்ட மூத்த ஐ.நா அதிகாரிகள் மற்றும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் தலைமைக் குழுவானது சிறிலங்கா அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட பாரியதொரு படுகொலைச் சம்பவத்தை வெளிக்கொண்டு வரத் தவறியதாக பெற்றி அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டது. அதாவது பாரபட்சமற்ற வகையில் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 70,000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்பளிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டுவதில் ஐ.நா தலைமையக அதிகாரிகள் மற்றும் கொழும்பிலிருந்த இதன் பிரதிநிதிகள் தவறியுள்ளதாகவும் பெற்றி அறிக்கை விமர்சித்துள்ளது.

பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க வேண்டிய பொறுப்பை சிறிலங்காவில் செயற்பட்ட ஐ.நா குழுவினர் கொண்டிருந்த போதும் இதனை அந்தக் குழு செய்யத் தவறிய அதேவேளையில், இவர்களின் பொறுப்பைச் சுட்டிக்காட்டி அவர்களின் தவறைத் திருத்துவதற்கான எவ்வித அறிவித்தலையும் ஐ.நா மற்றும் அதன் தலைமையகம் செய்யத் தவறியதாகவும் பெற்றி அறிக்கை கோடிட்டுக் காண்பித்தது.

பெற்றி அறிக்கையானது ஐ.நா செயலாளர் நாயகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என உலகெங்கும் உள்ள ஐ.நா மனித உரிமைச் செயற்பாட்டாளர்களிடம் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. நவம்பர் 2013ல், பான் தனது ‘மனித உரிமை மேம்படுத்தல் செயற்திட்டத்தை’ ஆரம்பித்தார். மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் போது அதிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் என இச் செயற்திட்டமானது அறிவுறுத்துகிறது.

இது பெரும்பாலான நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளாகச் செயற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட அதிகாரிகள் மத்தியில் பாரியதொரு அழுத்தத்தை உண்டுபண்ணியது. அடிப்படையில் அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஐ.நா அதிகாரிகள் தமது பணிநாடுகளில் மனித உரிமை மேம்படுத்தலையும் மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. இது அவர்கள் பணி செய்த நாடுகளின் அரசாங்கங்களுடன் முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் ஆபத்தையும் உண்டுபண்ணியது.

ஏனெனில் பெரும்பாலான நாடுகள் தமது நாட்டின் மனித உரிமை மேம்படுத்துவது தொடர்பில் வெளித்தரப்பு தலையீடு செய்வதை தமது நாட்டின் இறையாண்மைக்கான ஒரு சவாலாகவே நோக்குகின்றனர். இதனால் இவ்வாறான நாடுகளின் அரசாங்கங்கள் ஐ.நா அபிவிருத்தி செயற்திட்ட அதிகாரிகளின் புதிய பணியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது ஐ.நா அபிவிருத்தி மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குத் தடையாக காணப்பட்டது.

பெற்றியின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர், சிறிலங்காவில் செயற்பட்ட ஐ.நா அபிவிருத்திச் செயற்திட்ட அதிகாரிகள் அங்கு இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது இதன் தலைமையானது தனது விரிவான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் அச்சுறுத்தலைத் தோற்றுவித்தது.

‘பெற்றி அறிக்கையை யு.என்.டி.பி மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோர் தனிப்பட்ட ரீதியாக தம்மீதான குற்றச்சாட்டாக நோக்கினர்’ என ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் மூத்த ஆலோசகராகக் கடமையாற்றிய எட்வேர்ட் மோற்றிமர் தெரிவித்தார். ஆனால் இந்த அறிக்கை பிழையானதுஎன நீங்கள் கருதினாலும் கூட, அவர்களுக்குத் தொழிலை வழங்குவதில் பாரபட்சம் காண்பிப்பதில் எவ்வித காரணமும் இல்லை என மோற்றிமர் சுட்டிக்காட்டினார்.

ஐ.நாவை விட்டு வெளியேறிய பின்னர் சிறிலங்காவில் மனித உரிமைச் செயற்பாட்டாளராகச் செயற்பட்ட மோற்றிமர் சின்ஹாவின் நட்பார்ந்த ஆலோசகராகவும் செயற்பட்டார். சின்ஹாவின் பிரச்சினையை பானின் பார்வைக்குக் கொண்டு செல்வதில் மோற்றிமர் செயற்பட்டுள்ளார்.

பெற்றியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முக்கிய சில தீர்மானங்களை யு.என்.டி.பி மறுத்தது. ஐ.நா சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்களையும் தடுத்து நிறுத்துவதில் தவறிழைத்துள்ளது என்ற குற்றச்சாட்டை பெற்றி அறிக்கை மிக ஆழமாக ஆராயத் தவறியுள்ளதாகவும் யு.என்.டி.பி சுட்டிக்காட்டியது. யு.என்.டி.பி அல்லது ஐ.நாவின் வேறு அமைப்புக்களுடன் ஆராய்ந்து அறிக்கையை வெளியிடுவதில் பெற்றியின் குழு தவறியுள்ளதாகவும் யு.என்.டி.பி குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையகம் உட்பட ஐ.நாவின் வெளிக்கள அமைப்புக்களின் பங்களிப்பைப் பலப்படுத்துவதற்கான பரிந்துரையை முன்வைப்பதில் பெற்றி தவறியுள்ளதாகவும் யு.என்.டி.பி சுட்டிக்காட்டியுள்ளது.

‘முழுமையான ஐ.நா கட்டமைப்பிற்குள் நடவடிக்கைக் கண்காணிப்பு, இயலுமை, பரந்த அபிவிருத்தி, கோட்பாட்டு ஆணை மற்றும் வதிவிட ஒருங்கிணைப்பு முறைமையை முகாமைத்துவம் செய்வதற்கான நிதி வளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரேயொரு அமைப்பாக யு.என்.டி.பி விளங்குகிறது’ என நம்பகமான யு.என்.டி.பி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளையில், பெற்றி அறிக்கையைத் தயார்ப்படுத்துவதில் யு.என்.டி.பி தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரியான சின்ஹா செயற்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியிடப்பட்ட கையோடு சின்ஹா பதவி விலக்கப்பட்டார்.

சிறிலங்கா தொடர்பான பெற்றி அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர், இது தொடர்பாக யு.என்.டி.பி தனது உயர் மட்டக் குழுவுடன் அவசர சந்திப்பை ஒன்றை மேற்கொண்டதாகவும் இதில் தனது பணி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாகவும், இதன் பின்னர் தான் யு.என்.டி.பி நிறுவனத்தில் ஒருபோதும் பணியாற்ற முடியாது எனவும் கூறப்பட்டதாகவும் யூலை 2015ல் யு.என்.டி.பி மனித வள அதிகாரிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் சின்ஹா குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இவ்வாறானதொரு தீர்மானம் ஒருபோதும் எடுக்கப்படவில்லை என யு.என்.டி.பியின் ஊடகச் செயலர் கிறிஸ்ரினா லோநீக்ரோ தெரிவித்தார். புதிய செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான இயலுமையை சின்ஹா கொண்டிருக்காமையே அவரது பதவி விலக்கலுக்கான காரணம் என லோநீக்ரோ தெரிவித்தார்.

சின்ஹா யு.என்.டி.பி அமைப்பில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றிய போதிலும் அவருக்கு புதியதொரு பணியை வழங்குவதற்கு உயர் அதிகாரிகள் மறுத்திருந்தனர். இவர் யு.என்.டி.பி நிறுவனத்தின் பல வேலை வெற்றிடங்களுக்கு விண்ணப்பித்த போதிலும் இவர் எதிலும் தெரிவு செய்யப்படவில்லை. இவருக்கான கொடுப்பனவு செலுத்தப்படாததால் இவர் அங்கிருந்து விலக வேண்டி நேரிட்டது.

இதேவேளையில், நியூயோர்க்கில் அமைந்துள்ள மனித உரிமைகள் அமைப்பான ‘பாதுகாப்பதற்கான பொறுப்பைக் கொண்ட உலக மையம்’ என்கின்ற நிறுவனத்தில் சின்ஹா தொண்டராகப் பணியாற்றத் தொடங்கினார். தன்னை மீண்டும் யு.என்.டி.பி பணிக்கு அழைக்கும் என சின்ஹா நம்பினார். ஆனால் இது இடம்பெறவில்லை.

‘சிறிலங்கா மீதான விசாரணையை முடிவிற்குக் கொண்டு வந்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விடயங்களை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன். நான் தொடர்ந்தும் யு.என்.டி.பியில் செயற்பட வேண்டும் என நான் விரும்பினேன். ஆனால் இதில் நான் தோல்வியுற்றேன்’ என சின்ஹா தெரிவித்தார்.

சின்ஹாவின் பதவி விலக்கல் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட போது, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை அறிக்கை தயாரிப்பதில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் ஊழியர் குறைப்பு நடவடிக்கையின் மூலம் பதவி விலக்கப்பட்டமை தொடர்பாக ஆராயப்பட்டது. இது தொடர்பான பானின் அலுவலகம் நவம்பர் 2012ல் ஆராய்ந்தது. சின்ஹாவின் பதவி விலக்கலானது பொதுமக்கள் மத்தியில் ஐ.நா செயலாளர் நாயகத்தின் மனித உரிமை மேம்படுத்தல் செயற்திட்டம் மீதான நம்பிக்கையைக் குழிதோண்டிப் புதைத்துவிடும் என பானின் உயர் மட்ட ஆலோசகர்கள் கருதினர்.

2013 யூலையில், அதாவது பான் தனது மனித உரிமை மேம்படுத்தல் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சில மாதங்கள் முன்னர், சின்ஹாவின் பிரச்சினை தொடர்பான அரசியல் தலையீடுகள் தொடர்பாகக் கருத்திற் கொண்ட பானின் அலுவலகம் கிளார்க்கின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டது. இதற்கு சிறிது காலத்தின் பின்னர், யு.என்.டி.பி மனித வள அதிகாரியிடமிருந்து சின்ஹா தொலைபேசி அழைப்பொன்றைப் பெற்றார். தற்காலிகமாக யு.என்.டி.பி ஊழியர் கோட்பாட்டுச் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதில் சின்ஹாவின் உதவி பெறப்பட்டது. ஆனால் இது நிரந்தரமாக்கப்படவில்லை.

ஐ.நா பிரதிச் செயலர் எலியேசன் மற்றும் பானின் நிறைவேற்று அதிகாரி மல்கோரா ஆகியோர் கிளார்க்கிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டனர். சின்ஹா விவகாரத்தை தான் அசட்டை செய்யவில்லை எனவும் இதனை ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் மல்கோராவோ அல்லது எலியேசனோ கிளார்க்கிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு உரையாடினர் என்பதை யு.என்.டி.பி மறுத்தது.

பெற்றி அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காத அதேவேளையில் சின்ஹா பதவி விலக்கப்பட்டதானது நீதிக்கு அப்பாற்பட்ட செயல் என மனித உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

‘சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மீறல்களைத் தடுப்பதில் ஐ.நா தவறிழைத்தமை தொடர்பாக அறிக்கையிடுவதில் உதவிய அதிகாரியான சின்ஹாவை யு.என்.டி.பி பதவி விலக்கி பழிவாங்கியதானது மிகவும் துன்பகரமான ஒரு நிகழ்வாகும். இவ்வாறான தவறுகளை தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள தனது ஊழியர்களில் ஒருவரைப் பதவி விலக்கியமை மிகவும் அதிருப்தியான செயலாகும்’ என மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் பிரதி இயக்குனர் பிலிப் பொலோபியன் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்கின்ற பானின் அறிவுறுத்தலையும் அவரது முயற்சியையும் யு.என்.டி.பி தட்டிக்கழித்துள்ளதையே சின்ஹாவின் பதவி விலக்கல் குறித்து நிற்பதாகவும், உலகில் அநீதிகள் இழைக்கப்படும் போது அதனைத் தட்டிக்கேட்பதற்கு எந்தவொரு ஐ.நா பணியாளர்களும் முன்வரக்கூடாது என்பதை வெளிப்படுத்தி நிற்கும் ஒரு முட்டாள்தனமான செய்தியாகவே சின்ஹாவின் பதவி விலக்கல் அமைந்துள்ளது என பொலோபியன் குறிப்பிட்டார்.

‘பான் கீ மூன் தான் விரும்பியவாறு ‘மனித உரிமை மேம்பாட்டு செயற்திட்டத்தை’ முன்னெடுக்க முடியும் ஆனால் இதில் யு.என்.டி.பி பங்குபெற்றத் தவறியுள்ளது’ என பொலோபியன் தெரிவித்தார்.

பானின் மனித உரிமை மேம்படுத்தல் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான உயர் மட்டக் குழுவின் இணைத் தலைவராக கிளார்க் நியமிக்கபட்டதாகவும் இதன்மூலம் பானின் இந்தச் செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு கிளார்க் தனது அர்ப்பணிப்பை வழங்கியுள்ளார் என்பதையே உறுதிப்படுத்துவதாகவும் யு.என்.டி.பியின் லோ நீக்ரோ தெரிவித்தார்.

‘நாடுகளின் வதிவிடப் பிரதிநிதிகள் தமது பணிநாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கருத்திற் கொண்டு செயற்படுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதற்காக நாங்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என யூலை 29 அன்று யு.என்.டி.பி வதிவிடப் பிரதிநிதிகளுக்கு கிளார்க் மற்றும் எலியேசன் அனுப்பிய கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனாலும் யு.என்.டி.பியின் செயற்திட்டம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர்கள் திருப்தியடையவில்லை. கிளார்க் தனது அமைப்பின் நலன்களுக்கு சவால் விடுக்கும் எந்தவொரு கோட்பாடுகளையும் தனது வீற்றோ அதிகாரத்தின் மூலம் பலவீனப்படுத்துவதாக ஐ.நா அதிகாரி ஒருவர் தனது சகஅதிகாரி ஒருவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்காவில் நடந்தேறிய மீறல்கள் தொடர்பாக யு.என்.டி.பி இன்னமும் பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை என ஐ.நா மற்றும் அதற்கு வெளியே செயற்படும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மியான்மாரில், யு.என்.டி.பியால் முன்னெடுக்கப்பட்ட பணி விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது மியான்மார் அரசாங்கத்தால் தனது சொந்த நாட்டில் வாழும் சிறுபான்மை றோகின்யா முஸ்லீம் இனத்தவருக்கு எதிராக திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட மீறல்களை வெளிப்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு யு.என்.டி.பி தவறியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது. அண்மைய ஆண்டுகளில் 100,000 வரையான றோகின்ய இனத்தவர்கள் தமது சொந்த நாடான மியான்மாரை விட்டு வெளியேறியுள்ளனர். தொடர்ந்தும் மியான்மாரில் உள்ள றோகின்யர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்ட மீறல்களை மேற்கொண்டு வருகிறது.

‘சிறிலங்காவில் இழைக்கப்பட்ட தவறுகளிலிருந்து ஐ.நா மற்றும் ஏனையோர் பாடங்களைக் கற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டே ஐ.நா செயலாளர் நாயகத்தின் மனித உரிமை மேம்பாட்டு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான மீறல்களை மேற்கொள்ளும் நாடுகள் அதிலிருந்து தப்பிக்காது தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது இதன்மூலம் வலியுறுத்தப்படுகிறது’ என ஒக்ரோபர் 2015ல் வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின் இரகசிய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்களுக்கும் மனித உரிமை சமூகத்தால் இழைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட தவறே காரணமாகும். இது வினைத்திறனுடன் முன்னெடுக்கபட வேண்டும். இவ்வாறான தவறு மீண்டும் ஏற்பட இடமளிக்கக் கூடாது’ என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *