மேலும்

பாதிக்கப்பட்ட பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம்

sri lanka flood (4)சிறிலங்காவில் அண்மையில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை, உயர் பாதுகாப்பு வலயங்களாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

அத்துடன், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளையும், முறையான தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்திய பின்னரே, மீளக்குடியமர்வுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர், அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மேல் மாகாணத்தில், அனுமதியின்றி வீடுகளை கட்டவும், தாழ்நிலங்களை மண்போட்டு நிரப்பவும், தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று நடந்த சிறப்பு அதிபர் செயலணியின் கூட்டத்திலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற அனர்த்தங்கள் நிகழாதவாறு தடுக்கும் நோக்கிலேயே இந்த உத்தரவுகளை பிறப்பிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அனுமதியற்ற குடியிருப்புகள், தாழ் நிலங்கள் நிரப்பப்பட்டமையே இந்த அனர்த்தங்களுக்குக் காரணம் என்றும், இந்தக் கூட்டத்தில், பங்கேற்றிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகபட்ச உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறும் சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தொழில்நுட்ப உதவியாக 10 ஆயிரம் ரூபாவை வழங்க அதிபர் செயலணி முடிவு செய்துள்ளது.

அதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிகளின் சுகாதாரம், சுத்திகரிப்பு, சிறுவர்களின் கல்வி, உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும், இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *