மேலும்

134 தொகுதிகளில் அதிமுக, 98 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி- மூன்றாம் அணி படுதோல்வி

tamilnadu electionதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 134 தொகுதிகளைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. இதன் மூலம் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கவுள்ள அதேவேளை பலமான எதிர்க்கட்சியாக திமுக சட்டமன்றத்துக்குள் நுழையவுள்ளது.

திமுக கூட்டணி 98 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதில் திமுக 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 8 தொகுதிகளிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்த தேர்தலில் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட்ட மக்கள் நலன் கூட்டணி- தேமுதிக- தமாக அணி படுதோல்வி அடைந்துள்ளது. இதன் முதலமைச்சர் வேட்பாளரான விஜயகாந்த் உளுந்தூர்பேட்டைத் தொகுதியில், மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளார்.

இந்த அணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காட்டுமன்னார்கோயில் தொகுதியில், 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் படுதோல்வி கண்டுள்ளன.

இந்த தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், உள்ளிட்டவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 14 அமைச்சர்கள் வெற்றி பெற்ற போதிலும், வளர்மதி, கோகுல இந்திரா, வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன், உள்ளிட்ட 5 அமைச்சர்கள் தோல்வியடைந்தனர்.

பாமக தலைவர்களான ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக தலைவர்களான தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், இந்தியக் குடியரசுக் கட்சித் தலைவர் சே.கு தமிழரசன், உள்ளிட்ட முக்கிய பிரமகர்கள் பலரும் தோல்வியடைந்துள்ளனர்.

இந்த தேர்தலில் அதிமுக 40.8%, திமுக 31.6%, காங்கிரஸ் 6.5%, பாமக 5.3%, பாஜக 2.9%, தேமுதிக 2.4%, நாம் தமிழர் கட்சி 1.1%, மதிமுக 0.9%, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 0.8%, இந்திய கம்யூனிஸ்ட் 0.8%, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 0.8%, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 0.7%, தமாகா 0.5%வாக்குகள் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *