மேலும்

சிறிலங்காவின் போர் வடுக்கள் ஆற்றப்படுமா?

missing-demoஅரசியல் நிலைத்தன்மையானது அகதிகளின் பிரச்சினையில் ஏதாவது தாக்கத்தைச் செலுத்துகிறதா? பல பத்தாண்டுகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நாடானது மீளிணக்கப்பாடு மற்றும் நிலையான சமாதானம் ஆகியவற்றின் மூலம் தனது நாட்டின் அரசியலில் நிலைத்தன்மையை அதிகரிக்க முடியுமா?

இவ்வாறு NEW STRAITS TIMES நாளிதழில், எழுதியுள்ள கட்டுரையில் கேள்விகளை எழுப்பியுள்ளார் மலேசியாவைச் சேர்ந்த PUTERI NOR ARIANE YASMIN என்ற வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கற்கைகள் ஆய்வாளர். இவரது கட்டுரையைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் நித்தியபாரதி.

சிறிலங்காவானது பல பத்தாண்டு கால யுத்தத்திற்கு முகங்கொடுத்துத் தற்போது அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நாடாகக் காணப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மைத்திரிபால சிறிசேன நாட்டின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாட்டின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதன்மூலம் நாட்டில் அரசியல் சீர்திருத்தம் ஒன்றை ஏற்படுத்துவதே இந்த அரசாங்கத்தின் நோக்காகும். சிறிலங்காவின் அரசியல் அபிவிருத்தி தொடர்பாகக் கற்றுக் கொள்ளப்பட வேண்டிய மற்றும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது தாக்கத்தைச் செலுத்தும் மூன்று முக்கிய விடயங்களை இங்கு நோக்க முடியும்.

முதலாவதாக, சிறிசேன அரசாங்கமானது நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி வழங்கியது. இதன் பெறுபேறாக, நாட்டின் அரசியல் யாப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதுடன், நிறைவேற்று அதிபருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் நாடாளுமன்றுக்கு பரவலாக்கப்பட்டன. 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் மூலம் ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே நாட்டின் அதிபராகப் பதவி வகிக்க முடியும். அத்துடன் நிறைவேற்று அதிபரின் அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா நாடாளுமன்றில் மூன்றாவது பெரும்பான்மைக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நாட்டின் எதிர்க்கட்சியாக உள்ளது. இதன் மூலம் பிரதமர் மற்றும் ஏனைய அரசியற் சக்திகளால் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான அரசியல் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாது பிரதேச மற்றும் தேசியக் கோட்பாடுகளை வரைவதிலும் அவற்றை அமுல்ப்படுத்துவதிலும் தனது செல்வாக்கைச் செலுத்தக்கூடிய அரசியல் அதிகாரத்தையும் கூட்டமைப்பு கொண்டுள்ளது.

நாட்டில் அரசியல் சார் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அரசியல் அதிகாரத்தை அரசாங்கம் கொண்டுள்ளது என்பதை தேர்தல் பெறுபேறுகள் மற்றும் அரசியல் மாற்றங்கள் போன்றன சுட்டிக்காட்டுகின்ற போதிலும், சிறிசேன-விக்கிரமசிங்க கூட்டணியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கான பாரிய அரசியல் முகாமைத்துவத்தையும் சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, தமிழ் சமூகத்தின் மத்தியில் மேலும் பிரிவினையையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் குறைப்பதற்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளை சிறிலங்கா அரசாங்கம் முதன்மைப்படுத்தி வருகிறது. காணிகளைத் தமிழ் மக்களிடம் மீளவும் கையளித்தல், மக்கள் ஆட்சியை மீண்டும் கொண்டுவந்தமை, நாட்டிற்குத் திரும்பி வரும் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்பிக் கொடுப்பதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டமை உட்பட பல்வேறு மாற்றங்களை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் சிலரை அரசாங்கம் விடுவிக்கத் தொடங்கியுள்ளது. புனர்வாழ்வின் பின்னர் தடுத்து வைக்கப்பட்ட 45 பேர் விடுவிக்கப்பட்டதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் 2015-16 அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அனைத்துலக நியமங்களுக்கு ஏற்ப பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளவும் வடிவமைப்பதென கடந்த செப்ரெம்பரில் வாக்குறுதி வழங்கப்பட்டது.

கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் வெளிக்கொணரப்பட்டுப் பொறுப்புக்கூறப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சம்கோரியுள்ள ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவிற்குத் திரும்பிச் செல்ல முடியும். இது தொடர்பாக ஐ.நா அகதிகள் தாபனம் மற்றும் இந்திய அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து சிறிலங்கா அரசாங்கமும் செயற்படுகிறது.

இந்த வகையில் சிறிலங்காவின் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படும் போது மட்டுமே அகதிகளும் அவர்களது சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும். ஐ.நா அகதிகள் தாபனத்தின் 30-1 என்கின்ற தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கமும் இணைஅனுசரணை வழங்கியுள்ளது. இத்தீர்மானத்தின் மூலம் சிறிலங்காவில் மீளிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமையை மேம்படுத்துதல் போன்ற உறுதிப்படுத்தப்பட முடியும்.

கடந்த ஆண்டு 208 ஈழத்தமிழ் அகதிக்குடும்பங்களும் 453 தமிழ் மக்களும் இந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்குத் திரும்பி வந்தனர். இவர்களுக்கான விமானக் கட்டணங்களை ஐ.நா அகதிகள் தாபனமே வழங்கியது. இத்தொகையானது 2014ல் முறையே 137 மற்றும் 338 ஆகக் காணப்பட்டது. இவ்வாண்டு பெப்ரவரி 29 வரையான தகவலின் அடிப்படையில், 50 அகதிக் குடும்பங்களும் 163 அகதிகளும் சிறிலங்காவிற்குத் திரும்பினர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தின் கீழ் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இவ்வாறான நல்லிணக்க முயற்சிகள் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கும் இடையில் குறிப்பாக சிறிலங்கா மற்றும் தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள விரோத மனப்பாங்கை நிச்சயமாகக் குறைக்கும். எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடரும் இராணுவமயமாக்கல் பிரச்சினையானது தற்போதும் தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகிறது. இராணுவமயமாக்கல் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய மூன்றாவது விடயமாகும்.

கடந்த ஆண்டில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின் போது இராணுவமயமாக்கல் நீக்கப்படும் என உறுதி வழங்கப்பட்டது. ராஜபக்ச அரசாங்கத்தால் மீள்குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்திற் கொண்டு உருவாக்கப்பட்ட அதிபர் செயலணியின் காரணமாகவே 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் இராணுவமயமாக்கல் என்பது தொடர்ந்தமைக்கான பிரதான காரணமாகும்.

தமது பகுதிகளில் தொடரப்படும் இராணுவமயமாக்கலானது மக்களின் அன்றாட வாழ்வைப் பாதிக்கின்றது. இதன்மூலம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. அத்துடன் மக்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படுகின்றனர். இராணுவத்தினரால் விவசாய மற்றும் மீன்பிடி நோக்கங்களுக்காக மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவை மீளிணக்க நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றன.

மறுபுறத்தே, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது தமிழ் மக்களின் அரசியல் அவாக்களைக் கருத்திற்கொண்டு கணிசமானளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் அரசியல் ரீதியாக சிங்கள மக்களின் வெறுப்புணர்ச்சிக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக தமிழ் மக்களின் பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தயக்கம் காண்பித்து வருகிறது.

சிறிசேனவின் முதலாண்டு ஆட்சியில் எதிர்பார்க்கப்படாத சாதகமாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மையாகும். எனினும், அடித்தட்டுச் சிங்களத் தேசியவாதத்தின் அரசியல் உணர்திறன்களுக்கான ஒரு சவாலாக இதயசுத்தியுடன் கூடிய மீளிணக்கப்பாடு தொடர்ந்தும் காணப்படுகிறது.

ஈழத்தமிழ் அகதிகள் பாதுகாப்புடன் தமது நாட்டிற்குத் திரும்புவதற்கு அனுசரணை வழங்குதல், தமிழ் மக்களின் வீடுகளைத் திருத்துதல் மற்றும் புதிய வீடுகளை அமைத்துக் கொடுத்தல் போன்ற விடயங்கள் தமிழ் மக்களின்  மனக்குறைகளைப் போக்குவதற்கும் அவர்கள் பெற்ற போர் வடுக்களை ஆற்றுப்படுவதற்கும் போதுமானதாக உள்ளனவா என்பதே தற்போது முன்வைக்கப்படும் வினாவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *