மேலும்

சம்பூரில் திரவ எரிவாயு மின் திட்டம் – இந்தியாவுடன் வரும் 20ஆம் நாள் பேச்சு

sampoorசம்பூர் அனல் மின் திட்டத்தை, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டமாக மாற்றியமைப்பது தொடர்பாக, வரும் 20ஆம் நாள், இந்திய பங்காளர்களுடன், சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சின் குழுவொன்று பேச்சுக்களை நடத்தவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனல் மின் திட்டத்துக்குப் பதிலாக, திரவ இயற்கை எரிவாயு மின் திட்டத்தை அமைப்பதற்கான சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு, பொருளாதார முகாமைத்துவத்துக்கான அமைச்சரவை குழு தீர்மானித்துள்ளது.

அத்துடன் சம்பூர் அனல் மின் திட்டம் தொடர்பாக ஏற்கனவே கோரப்பட்ட கேள்விப்பத்திரங்களை ரத்துச் செய்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்தி வைக்கவும் அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது.

இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா மின்சார சபையின் பேச்சாளர் சுலக்சனா ஜெயவர்த்தன, இந்த திட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்று மே 20 ஆம் நாள் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சம்பூரில் அனல் மின் நிலையைத்தை ஆரம்பிக்க சுற்றுச்சூழல், சமூக மட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திரவ இயற்கை எரிவாயு மின்திட்டத்தை அமைக்கலாமா என்று நாம் யோசித்து வருகிறோம். ஆனால் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயுயை இறக்கவோ, அவற்றைக் கையாளவோ வசதிகள் இல்லை என்றும், அதனால் சிறிலங்காவில் திரவ இயற்கை எரிவாயு மின்திட்டத்தை ஆரம்பிப்பது நடைமுறைச்சாத்தியமற்றது என்றும் ஜப்பானியர்கள் மேற்கொண்ட சாத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *