மேலும்

வடக்கில் கணவனை இழந்த பெண்களின் துயரக் கதைகள்

sri-lankas-war-widows (4)

கோப்புப் படம்

முல்லைத்தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நந்திக்கடல் சூரியக் கதிரின் வெப்பத்தால் சூடாகி இருந்த வேளையில் நாங்கள் செல்வராஜியின் வீட்டிற்குச் சென்றோம். அவரது சிறிய வீட்டின் சுவர்களின் ஊடாக, அவரது கடந்த காலத் துன்பகரமான வாழ்வின் கரிய நிழல்களைக் காண முடிந்தது.

‘போர் உச்சக்கட்டத்தை அடைந்த தருணத்தில், எனது கணவரும் எனது மூன்று பிள்ளைகளும் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர். நான் தற்போது எஞ்சிய எனது மூன்று பிள்ளைகளுடன் வாழ்கின்றேன். ஆனால் நாம் எமது அன்றாட வாழ்வைக் கழிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம்’ என செல்வராஜி தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கேப்பாப்புலவில் வாழ்ந்து வரும் 47 வயதான செல்வராஜி யுத்தம் முடிவடைந்த பின்னர் இரண்டரை ஆண்டுகளாக இடம்பெயர்ந்தோர் முகாம் ஒன்றில் தங்கியிருந்தார். போர்க் காலத்தில், இவரது கணவர் வெள்ளை முள்ளிவாய்க்காலில் இருந்த விடுதலைப் புலிகளுக்கு இனிப்புப் பண்டங்களை விற்றுத் தனது குடும்பத்தைக் காப்பாற்றினார்.

2009 மே மாதத்தில் இடம்பெற்ற எறிகணை வீச்சொன்றில் செல்வராஜியின் கணவரும் மூன்று பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் குண்டுவெடிப்பில் அகப்பட்டுத் தப்பிய இவரது இரண்டு பிள்ளைகள் அங்கவீனம் அடைந்தனர். இவர் தற்போது இவ்விரு அங்கவீனம் அடைந்த பிள்ளைகளுடனும் தன்னுடைய இன்னுமொரு பிள்ளையுடனும் நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்.  இவர் ஒருபோதும் முடிவுறாதா சுமையைத் தாங்கி வாழ்கிறார். அத்துடன் தொழில் வாய்ப்பற்றவராகவும் உள்ளார்.

‘எனது பிள்ளைகளில் ஒருவர் மட்டுமே உழைக்கக் கூடிய நிலையில் உள்ளார். இவன் மீன்பிடியில் ஈடுபடுகிறார். இதன் மூலம் சிறிதளவு வருமானத்தை ஈட்டமுடிகிறது. அவன் சம்பாதிக்கும் சிறிதளவு வருமானத்திலேயே எமது முழுக் குடும்பமும் தங்கியுள்ளது. அவன் எவ்வித வளங்களும் இன்றியே தனது தொழிலை மேற்கொள்கிறான். மீன்பிடி வலைகளைத் தருவதாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய போதிலும் இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை. அங்கவீனமுற்ற எனது இரு பிள்ளைகளாலும் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது. அவர்களை வெளியில் அனுப்ப முடியாது’ என செல்வராஜி அழுதவாறு தெரிவித்தார்.

இவர் தனது கண்களைத் துடைத்தவாறு மேலும் கூறினார் : ‘வாழ்வதற்கு எமக்குப் பணம் தேவை. பிள்ளைகளுக்கு மருந்து வாங்குவதற்குப் பணம் தேவை. முன்னர் இராணுவத்தினர் இவர்களுக்கான மருந்துகளை வழங்கினர். கிராமத்தவர்களுக்கு உணவுகளைத் தயாரித்து விற்பதன் மூலம் நான் சிறியளவில் சம்பாதிக்கிறேன். ஆனாலும் எமது வறுமை நிலை காரணமாக இதனைத் தொடர்வதிலும் சிக்கல் உள்ளது’ என்றார்.

இவ்வாறான நிலை முல்லைத்தீவில் மட்டும் காணப்படவில்லை. பல்வேறு சமூக நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், வடக்கில் 40,000-60,000 வரையான பெண்கள் கணவனை இழந்து வாழ்கின்றனர். வடக்கில் 50,000 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளதாக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.   40-59 வயதுப் பெண்களே அதிகளவில் தமது குடும்பங்களைத் தலைமை தாங்குவதாக புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் 2012-13 வெளியிடப்பட்ட குடும்ப வருமான மற்றும் செலவுகள் அடங்கிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களில் அரைவாசிப் பேர் கணவனை இழந்தவர்கள் ஆவர்.

30 ஆண்டுகால யுத்தமானது வடக்கில் வாழும் கணவனை இழந்த பெண்களின் வாழ்வை அழித்துள்ளது. ‘போர் முடிவடைந்த பின்னரும் கூட கணவனை இழந்த பெண்களின் பிரச்சினை என்பது மிகப் பாரியதொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பொருளாதார ரீதியாக இந்தப் பெண்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர்’ என முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எம்.மோகன்தாஸ் தெரிவித்தார்.

இந்தப் பெண்கள் தமது குடும்பங்களைப் பராமரிப்பதற்கான போதியளவு வளங்களைக் கொண்டிருக்காமையே இதற்கான முக்கிய காரணமாகும். போரின் பின்னர் வடக்கில் பல்வேறு கட்டுமான அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ள போதிலும், செல்வராஜி போன்ற கணவனை இழந்து வாழும் பெண்களின் வறுமையைக் குறைப்பதற்காக எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

‘போர்க் காலத்திலும் எமக்கான தொழில்வாய்ப்பைப் பெற முடியவில்லை. இதனாலேயே எனது கணவர் இனிப்புப் பண்டங்களை விற்று குடும்பத்தைக் காப்பாற்றினார். இதேபோன்று தற்போதும் எமது பொருளாதாரத்தை வளப்படுத்துவதற்கான தொழில் வாய்ப்பைப் பெறமுடியவில்லை’ என செல்வராஜி தெரிவித்தார்.

வடக்கிலுள்ள பெண்கள் தொழில்வாய்ப்பைப் பெற முடியாது துன்பப்படுகின்றனர் என்பதை மோகனதாசும் ஏற்றுக்கொண்டார்.

கணவன்மாரை இழந்த பெண்களுக்கு அரசாங்கம் போதியளவில் உதவுகிறதா?

2014ல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின் படி, 65 சதவீதமான பெண்கள் தொழிலற்றவர்கள் ஆவர். பெண்கள் தொழில்வாய்ப்பைப் பெறுவதில் சிரமப்படுகின்ற நான்கு மாவட்டங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரண்டும் முதன்மை நிலையில் உள்ளன. போரின் போது கணவன்மாரை இழந்த பெண்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான திட்டம் ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போரின் போது கணவன்மாரை இழந்த பெண்களின் சுயதொழிலை ஊக்குவிப்பதற்காக 5.43 மில்லியன் ரூபாக்களை மகளின் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான அமைச்சு ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 181 குடும்பங்கள் மாதாந்தம் 30,000 ரூபாவை கொடுப்பனவாகப் பெற முடியும்.

மேலும், யாழ்ப்பாணத்தில் 54,000 குடும்பங்கள் சமுர்த்திக் கொடுப்பனவையும் பெறுகின்றனர். எனினும், போரின் போது கணவனை இழந்த எத்தனை பெண்கள் சமுர்த்திக் கொடுப்பனவைப் பெறுகின்றனர் என யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலுள்ள சமுர்த்தி அதிகாரியிடம் வினவியபோது இது தொடர்பான சரியான எண்ணிக்கை தெரியாது எனக் கூறினார். இவற்றுக்கப்பால், போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூபா 3000 கொடுப்பனவாக வழங்குவதற்கான திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

எனினும், இத்திட்டமானது கணவன்மாரை இழந்த பெண்களை முதன்மைப்படுத்திய ஒன்றல்ல எனவும், இத்திட்டத்தின் கீழ் எந்த வகையான குடும்பங்களை பயனாளிகளாகத் தெரிவு செய்வது என்பது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் தெளிவற்றவர்களாக உள்ளனர் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.

‘அரசாங்க அதிகாரிகள் தம் வசம் போதியளவு நிதியைக் கொண்டுள்ள போதிலும், தேவைப்படுபவர்களுக்கு அதனை வழங்க முன்வரவில்லை. இந்த நிதியை ஏன் மக்களுக்கு வழங்கவில்லை என வினவிய போது, தேவைப்பாடுடைய பயனாளிகளைத் தாம் இன்னமும் தெரிவு செய்யவில்லை என அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த நிதியை எந்த வகையில் வழங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என வினவியபோது, தேவைப்பாடுடைய குடும்பத்தினர் தனிப்பட்ட ரீதியில் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள். மக்கள் ஒருபோதும் தாமாக முன்வந்து விண்ணப்பிக்கக் கூடிய நிலையில் இல்லை என நான் அவர்களிடம் விரிவாக எடுத்துக்கூறினேன்’ என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் நிலைப்பாட்டு நேரில் பார்வையிடுவதன் மூலம் மக்களின் தேவைகளை அறிய வேண்டும் என அரசாங்க அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரூபா 3000 ஐ 6000 ரூபாவால் அதிகரிக்குமாறு பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

‘ஒருங்கிணைக்கப்பட்ட நிதி மூலம் நாங்கள் பெற்றுள்ள ஆறு மில்லியன் நிதியின் பெரும்பகுதியை போரின் போது கணவன்மாரை இழந்த பெண்களுக்காக ஒதுக்கத் தீர்மானித்துள்ளோம். கடந்த காலத்தில் பெண்கள் விவகாரங்களைக் கையாள்வதற்கான மகளிர் விவகார அமைச்சு வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவில்லை. தற்போது நாங்கள் இந்த அமைச்சை உருவாக்கியுள்ளோம்.  ஆனால் பெண்களுக்கு உதவுவதற்கான நிதி எதனையும் நாங்கள் அரசாங்கத்திடம் பெறவில்லை. இதற்கான நிதியை தந்துதவுமாறு அனைத்துலக நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’ என வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

வடக்கைக் கட்டியெழுப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கமும் அனைத்துலக சமூகமும் முதலீடு செய்கின்ற போதிலும், யுத்தத்தின் வடுக்களை இன்னமும் ஆற்றமுடியாது உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

‘வடக்கில் வாழும் கணவனை இழந்த பெண்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, வடக்கில் உள்ள மொத்த சனத்தொகையில் பெண்களின் எண்ணிக்கை அதிகூடியதாகும். இந்நிலையில் போரின் போது அதிகளவான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதன் காரணமாக இந்த நிலை மேலும் மோசமாகியுள்ளது. இரண்டாவதாக, கணவன்மாரை இழந்த பெண்கள் தமது குடும்பங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியவர்களாகவும் தமது பிள்ளைகளுக்கு உணவு சமைத்தும் அவர்களின் கல்வியிலும் உதவி செய்ய வேண்டிய பல்வேறு சுமைகளைத் தாங்குகின்றனர். இவ்வாறான காரணங்கள் இந்தப் பெண்களை மேலும் துன்பங் கொள்ள வைக்கிறது’ என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளையில், மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களால் போரால் பாதிக்கப்பட்ட கணவன்மாரை இழந்த பெண்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், இந்தப் பெண்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு இவை போதியதாக இருக்கவில்லை என போரின் கணவன்மாரை இழந்த பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவி திருமதி சாந்தா அபிமானசிங்கம் தெரிவித்தார்.

‘யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்தப் பெண்களில் பெரும்பாலானவர்கள் அரசாங்க மற்றும் ஏனைய பொது நிலங்களில் பயிர்களைச் செய்து தமக்கான வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர். எனினும், இந்த நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டதாலும், வெளிநாடுகளில் நீண்டகாலமாக வாழ்ந்த நிலத்தின் உரிமையாளர்கள் மீளவும் தமது நிலங்களைப் பார்வையிடுவதற்காக வருகை தந்தமையாலும் இந்தப் பெண்களால் தமது விவசாயத்தைத் தொடர முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்தப் பெண்கள் வீடுகளை இழந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை உயர்ந்ததன் காரணமாக, தமது வாழ்வைக் கொண்டு நடாத்துவதில் இந்தப் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்’ என திருமதி சாந்தா அபிமானசிங்கம் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான காரணங்களால் இந்தப் பெண்கள் தமது பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், இவர்களால் தமது பிள்ளைகளின் கல்விச் செலவு மற்றும் பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவு போன்றவற்றை ஈடுசெய்ய முடியவில்லை எனவும் இந்த நிலை தொடர்ந்தால் கல்வியறிவற்ற இளையோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்தும் இவர்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுவதற்கான வழியும் உருவாகும் என திருமதி சாந்தா அபிமானசிங்கம் மேலும் தெரிவித்தார்.

(தொடரும்)

ஆங்கிலத்தில்  – டிலிசா அபேசுந்தர
வழிமூலம்       – சண்டே லீடர்
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *