மேலும்

பிரச்சினைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் வடமாகாணம் – அனைத்துலக ஊடகம்

jaffna-tamils (2)சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உள்நாட்டின் வடக்கில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் கண்டுகொள்ள வேண்டும்.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

மைத்திரிபால சிறிசேன சிறிலங்காவின் அதிபராகப் பதவியேற்று ஓராண்டு கடந்தநிலையிலும் கூட போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் நாளாந்த வாழ்வில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

‘வடக்கு மாகாண வீதிகளில் இராணுவ வீரர்கள் உலாவுவதை நாம் பார்த்தோம்’ என ஊடகவியலாளரான சாலின் உதயராசா தெரிவித்தார். மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் தொடர்ந்தும் சிறிலங்கா அரச படையினரின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்த வண்ணமேயுள்ளனர். ‘சிறிலங்கா இராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்பது நிச்சயமாகும்’ என உதயராசா தெரிவித்தார்.

ஊடகவியலாளரான உதயராசா பல்வேறு முக்கிய விடயங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார். 2011 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில், சிறிலங்கா இராணுவத்தால் ஊடகவியலாளர் என்பதற்காக நான்கு தடவைகள் உதயராசா மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

சில ஆண்டுகளாகிய பின்னர், இன்றும் கூட உதயராசா தனது உடலில் ஏற்பட்ட வலி காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அரசாங்கத்தின் அடக்குமுறையின் நினைவாகத் தனது நெற்றியில் இராணுவ வீரர்களின் தாக்குதலால் உருவான வடுவை உதயராசா என்னிடம் காண்பித்தார்.

வடக்கு மாகாணத்தில், மகிந்த ராஜபக்சவின் காலத்திலும் பார்க்கத் தற்போது மக்கள் சுதந்திரமாகத் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்குமான உரிமையைப் பெற்றுள்ளனர். மக்களின் அன்றாட செயற்பாடுகளில் இராணுவத்தினர் தலையீடு செய்கின்ற நிலையும் தற்போது குறைந்துள்ளது.

‘மகிந்த ராஜபக்சவின் காலத்தில் அனுபவித்த அடக்குமுறைகள் தற்போது முடிவடைந்துள்ளன. ஆனால் அடிப்படைப் பிரச்சினைகள் என்பது எப்போதும் ஒரேமாதிரியாகவே உள்ளன’ என உதயராசா தெரிவித்தார். பொதுமக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளமை உட்பட தமிழ் அரசியற் கைதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் மறுத்துவருதல், இராணுவ மயமாக்கல் தொடர்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தற்போதும் நிலவுவதாக உதயராசா தெரிவித்தார்.

‘வீதிகளில் பார்க்கும் போது இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அவர்கள் இன்னமும் இங்கேயே உள்ளனர். பொதுமக்களைக் கண்காணிக்கின்ற பிரச்சினை தற்போதும் சுட்டிக்காட்டப்படுகிறது’ என ஊடகவியலாளர் உதயராசா தெரிவித்தார்.

சில முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் கூட, வடக்கில் வாழும் மக்கள் மத்தியில் இன்னமும் அச்சம் நிலவுகிறது. ஜனவரி இறுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் நான் ஒரு வாரத்தைக் கழித்தேன். ஒருநாள் யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபலமான உணவு விடுதியில் நான் இரவுணவை உட்கொண்டிருந்த போது, இதற்கு முன்னைய எனது பயணத்தின் போது சந்தித்த ஒரு இளைஞரை  நான் பார்த்தேன்.

அந்த இளைஞரின் ஆங்கிலம் சிறந்ததாகக் காணப்பட்டது. அவர் என்னுடன் பேசவிரும்புகிறார் என்பதை நான் உணர்ந்தேன். பிறிதொரு நாளில் அந்த இளைஞனைச் சந்திப்பதற்கான அனுமதியை அவரிடம் கோரியபோது அவர் தயக்கம் காண்பித்தார்.

பின்னர், ‘நான் உங்களுடன் உரையாடும் போது ஒளிப்படங்கள் எடுப்பீர்களா?’ என அந்த இளைஞன் என்னிடம் கேட்டார்.

‘இல்லை. சந்திப்பு மட்டும் தான். எவ்வித ஒளிப்படங்களும் எடுக்கப்படமாட்டாது’ என நான் அந்த இளைஞனிடம் கூறினேன். ‘நாளை சந்திப்போம்’ என அந்த இளைஞன் கூறியவாறு விடைபெற்றான்.

மானிப்பாய் வீதியிலுள்ள எனது விடுதியில் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நான் காத்திருந்த போதும் அந்த இளைஞன் வரவில்லை. நான் அந்த இளைஞன் பணியாற்றும் விடுதிக்குச் சென்றேன்.

‘ஏன் சந்திப்பிற்கு வரவில்லை?’ என நான் அந்த இளைஞனிடம் வினவினேன்.

‘சேர், தயவுசெய்து என்னைத் தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். எனக்கு உங்களைச் சந்திக்க விருப்பம். ஆனால் முடியவில்லை. நான் உங்களைச் சந்தித்தால், பயங்கரவாதத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று நபர்கள் என்னை வந்து சந்திப்பார்கள். நான் நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் இருக்க வேண்டும்’ எனக் கூறினான்.

தனது தகப்பனாரின் நிலங்களில் விடுதலைப் புலிகள் தமது பயிற்சி முகாம் ஒன்றை நிறுவியிருந்தாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.

‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்களா?’  என நான் அவனிடம் வினவினேன். ‘ஆம். இதுவே காரணமாகும்’ என இளைஞன் பதிலளித்தான்.

ஒருநாள் பிற்பகல், யாழ்ப்பாண நகருக்கு வெளியே 11 பேரைக் கொண்ட மக்களுடன் நான் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தேன். இதனை வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவரே ஒழுங்குபடுத்தினார். சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு முன்வரவில்லை என கலந்துரையாடலில் பங்குபற்றியவர்கள் தெரிவித்தனர். ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் நிலைமை முன்னேறும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்ததாக ஒருவர் தெரிவித்தார்.

‘எமது துன்பங்கள் தொடர்கின்றன’ என பங்காளி ஒருவர் தெரிவித்தார். ‘இழந்தவற்றுக்கான இழப்பீடுகள் எவ்வாறு வழங்கப்படும்? காணாமற்போனோரின் நிலைப்பாடு என்ன?’ என பிறிதொருவர் தெரிவித்தார்.

நான் எனது கலந்துரையாடலை முடித்துக் கொண்டு வெளியேற முற்பட்ட போது அந்தப் பெண்கள் ஒருமித்து சிரித்தனர். அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என நான் வினவிய போது, ‘வெளிநாட்டவர்கள் வந்துகொண்டே உள்ளனர். ஆனால் இங்கு உண்மையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை’ என கலந்துரையாடலில் பங்குகொண்ட பெண்மணி ஒருவர் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதோடு மட்டுமல்லாது, உள்நாட்டின் வடக்கில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது பிரச்சினைகளையும் கண்டுகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் விவகாரங்களை ஒப்பீடு செய்யும் போது சிறிலங்காவின் முன்னைய ஆட்சியாளர் ராஜபக்சவை விட சிறிசேன எவ்வளவு தூரம் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பதே இங்குள்ள வினாவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *