மனித உரிமை வாக்குறுதிகளை காப்பாற்றத் தவறிவிட்டது சிறிலங்கா – அனைத்துலக மன்னிப்புச் சபை
சிறிலங்காவில் புதிய அரசாங்கம் கடந்த ஆண்டு பதவியேற்றபோது, மனித உரிமைகள் தொடர்பாக கொடுத்திருந்த வாக்குறுதிகள் பலவற்றைக் காப்பாற்றத் தவறியிருப்பதாக, அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம்சாட்டியுள்ளது.
உலக நாடுகளின் மனித உரிமை நிலவரங்கள் குறித்த இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையிலேயே சிறிலங்கா மீது கடுமையான விமர்சனங்களை அனைத்துலக மன்னிப்புச் சபை முன்வைத்துள்ளது .
‘சிறிலங்காவில் கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற புதிய அரசாங்கம் அரசியலமைப்பு சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னேற்றுவதாக உறுதியளித்திருந்தது.
ஆனால், எதேச்சாதிகார கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல்கள், சித்திரவதைகள், திட்டமிட்டு காணாமல்போகச் செய்யும் நடவடிக்கைகள், தடுப்புக்காவல் மரணங்கள் மற்றும் குறற்வாளிகள் நீதியின் பிடியிலிருந்து தப்பியிருக்கும் நிலை தொடருதல் போன்ற மனித உரிமைகளுக்கான பல்வேறு சவால்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே தொடர்கின்றன.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகின்ற அந்த சட்டத்தை நீக்குவதாகவும் கடந்த செப்ரெம்பரில் அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
217 கைதிகள் தொடர்ந்தும் அந்த சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். புனர்வாழ்வு என்ற இன்னொரு வகையான எதேச்சாதிகார தடுப்புக்காவலுக்கு வேறு 45 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தடுப்புக்காவலில் இருப்போர் மீது சித்திரவதை, பாலியல் வன்முறைகள் பிரயோகிக்கப்படுவது தொடர்ந்து நடக்கின்றன.
இவ்வாறான மனித உரிமை மீறல்கள் நடக்கக்கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்து சிறிது காலத்தில், 17 வயது சிறுவனும் இன்னொருவரும் தடுப்புக் காவலில் வைத்து பொய்யான குற்றஒப்புதலை பெறுவதற்காக தாக்கப்பட்டதாகவும், உடைகளை களைந்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் தடுப்புக் காவலில் சந்தேகத்துக்கு இடமான மரணங்கள் தொடர்வதுடன், கடந்தகால குற்றச் சம்பவங்களின் சூத்திரதாரிகள் நீதியின் பிடியில் சிக்காமல் இருப்பதும் தொடர்கிறது.
காணாமல்போனவர்கள் தொடர்பான அதிபர் ஆணைக்குழுவுக்கு 18, 586 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. ஆனால், காணாமல்போனவர்களுக்கு என்ன ஆனது என்பதை கண்டறிவதிலும் அவர்களை காணாமல்போகச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதிலும் முன்னேற்றம் காணப்படவில்லை.
மே 19ம் நாளை போரில் பலியானவர்களின் நினைவு நாளாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தாலும், வடக்கில் பல இடங்களில் தமிழர்கள் பொதுவான நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், வடக்கிலும் கிழக்கிலும் கடுமையான அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக, முல்லைத்தீவில் இப்படியான நினைவு நிகழ்வுகள் பாதுகாப்பு படையினரால் தடுக்கப்பட்டன.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட மதச்சிறுபான்மை சமூகங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை.
2010ம் ஆண்டில் கிளிநொச்சியில் நடந்த கூட்டுப் பாலியல் வல்லுறவு தொடர்பாக, நான்கு சிறிலங்கா படைச் சிப்பாய்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டது, குற்றவாளிகள் நீதி நடைமுறையிலிருந்து தப்பியிருக்கும் போக்குக்கு எதிரான சிறிய வெற்றியாக பார்க்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.