முதலமைச்சர் எதிர்த்தாலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுமாம்
வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கும் திட்டத்துக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
அண்மையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த போது, அவர் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இதனால், பலாலி விமான நிலைய சுற்றாடலில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர் என்று அவர் கூறியிருந்தார்.
எனினும், இந்த திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், இந்தியாவின் நி்தியுதவியுடன் பலாலி விமான நிலைய விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வடக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் பலாலி விமான நிலையம், பிராந்திய விமான நிலையமாக விரிவாக்கப்படவுள்ளதாக, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
“இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர் பலாலிக்கும், இந்தியாவுக்கும் இடையில் நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
இந்தத் திட்டம், சுற்றுப்புற மக்களுக்கோ, மீன்பிடி சமூகத்துக்கோ தடையாக இருக்காது என்று அரசாங்கம் நம்புகிறது.
அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும்.
வடக்கு மாகாண முதலமைச்சரின் கவலைகளை தீர்க்க சிறிலங்கா பிரதமரும், இந்த குழுவினரும் நடவடிக்கை எடுப்பர்.
இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்படும் போதே, எப்போது திட்டத்தை ஆரம்பிப்பது, மற்றும் நிதி தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.