மேலும்

மகிந்த மயமாக்கப்பட்ட சட்டமாஅதிபர் திணைக்களம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

Yuvanjana-Wanasundera-mr2010ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சர்கள் பதவியேற்ற போது, வர்த்தமானி அறிவித்தலில் சட்டமா அதிபர் திணைக்களம் எந்த அமைச்சின் கீழ் என்பது குறிப்பிடப்படவில்லை.

இது தொடர்பாக அப்போதைய நீதி அமைச்சர் ஜோன் செனவிரத்தினவிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்பிய போது, வர்த்தமானி அறிவித்தலில் சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைத் தானும் தேடுவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் நீதி அமைச்சர் ஜோன் செனவிரத்தினவால் வர்த்தமானியில் சட்டமா அதிபர் திணைக்களத்தை நீதி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. அப்போதைய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சட்டமா அதிபர் திணைக்களத்தைத் தனது நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தார்.

நீதி அமைச்சின் கீழ் அதுவரை காலமும் செயற்பட்டு வந்த சட்ட மா அதிபர் திணைக்களம் நிறைவேற்று அதிபரின் தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டமை அதுவே முதற்தடவை.

மகிந்த, சட்ட மா அதிபர் திணைக்களத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தபோது, சட்ட மா அதிபராக மொகான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் மொகான் பீரிஸ் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் உத்தியோகபூர்வமற்ற சட்டவாளர் சங்கத்தில் இணைந்திருந்தார். இந்நிலையில் மொகான் பீரிசை விட அனுபவம் வாய்ந்த மூத்த பல சட்டவாளர்கள் இருந்த போதிலும் சட்டத்திற்கு முரணாக மகிந்தவால் அவர் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இது 19வது திருத்தச் சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டது. 19வது திருத்தச் சட்டம் மற்றும் அரசியல்யாப்பு சபை போன்றவற்றின் அதிகாரங்களைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் மகிந்த ஈடுபட்டார். 2010ல் தனது முழுமையான அதிகாரத்தின் கீழ் சட்ட மா அதிபர் திணைக்களத்தைக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்ச, மொகான் பீரிசை சட்ட மா அதிபராக நியமித்தார். இதன்மூலம் தனது நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பதே இவரது எண்ணமாகக் காணப்பட்டது.

‘நீதியின் புனிதப் புறாவாகச்’ செயற்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் முதன்முதலாக மகிந்த ராஜபக்ச நீதிச் சேவையைப் புறக்கணிக்கும் பணியை ஆரம்பித்தார். இத்திணைக்களத்தின் சட்டமா அதிபர் மொகான் பீரிசை மகிந்த தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சரத் பொன்சேகாவைச் சிறையில் அடைத்தார். இதுவே மக்கள் மத்தியில் மகிந்தவின் உண்மைத்திரையைக் கிழித்தெறிந்த சந்தர்ப்பமாக அமைந்தது.

மகிந்த தனது கட்டுப்பாட்டின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தைக் கொண்டுவந்தார் என்கின்ற உண்மையை மக்கள் உணர்ந்து கொண்டனர். இவ்வாறான பின்னணியில், சிறிலங்காவின் உச்ச நீதிமன்றமானது இராணுவ நீதிமன்றின் ஊடாக பொன்சேகாவைத் தண்டித்தது. பொன்சேகாவின் நாடாளுமன்றப் பிரவேசத்தைத் தடுப்பதற்காக நீதியை மகிந்த தவறாகப் பயன்படுத்தியதே சிறிலங்காவின் அப்போதைய சட்ட ஆட்சியாகக் காணப்பட்டது.

பொன்சேகா 2011 ஜனவரியில் சிறையிலடைக்கப்பட்ட போது மொகான் பீரிசே சட்டமா அதிபராக இருந்தார். இக்காலப்பகுதியில் சரத் பொன்சேகாவிற்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் வழக்கொன்றைப் பதிவு செய்தது. செப்ரெம்பர் 2011 வரை மொகான் பீரிஸ் சட்ட மா அதிபராகப் பதவி வகித்தார். இவரின் பின்னர் ஈவா வணசுந்தர, மொகான் பீரிசின் இடத்திற்கு நியமிக்கப்பட்டார்.  ஈவா சட்ட மா அதிபராகச் செயலாற்றிய காலத்திலும் சரத் பொன்சேகாவால் இராணுவ நீதிமன்றின் தீர்ப்புக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மனுக்கள் அனைத்தும் பயனற்றுப் போயின.

மொகான் சட்ட மா அதிபராகப் பதவி வகித்த பின்னர், அமைச்சரவைக்கான சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஈவாவின் சட்ட மா அதிபர் பதவிக்காலம் நிறைவுபெற்ற பின்னர், இவர் மகிந்தவால் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஈவாவைத் தொடர்ந்து பாலித பெர்னாண்டோ சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்து யுவன்ஜன் விஜயதிலக நியமிக்கப்பட்டார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கட்டுப்பாட்டை மகிந்த பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், நீதிச் சேவை மீது மக்கள் தமது நம்பிக்கையை இழந்தனர். 2015 அதிபர் தேர்தலில் மகிந்த தோல்வியுற்ற பின்னர், மீண்டும் சட்டமா அதிபர் திணைக்களம் நீதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது. மகிந்தாவால் இழைக்கப்பட்ட தீவிர மீறல்களைச் சரிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், சட்ட மா அதிபர் திணைக்களத்திற்குள் பணியாற்றும் மகிந்த விசுவாசிகள் 2015 அதிபர் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அலட்சியப்படுத்தினர்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 2015 அதிபர் தேர்தலில் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை பிறப்பித்தனர். இதுவே மைத்திரிக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையில் முன்னுரிமை பெற்றுள்ளது. இதற்கு முரணாக, யுவான்ஜனின் தலைமையிலான சட்ட மா அதிபர் திணைக்களமானது சட்டத்தின் முன் குற்றவாளிகளை நிறுத்துவதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாத்ததாக ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசநாயக்க குற்றம் சுமத்தினார். இவரது இந்த அறிவிப்பானது அமைச்சர் ராஜித சேனரட்னாவால் ஆதரிக்கப்பட்டது.

அவன்காட் ஆயுத விவகாரம் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவை யுவான்ஜனின் சட்ட மா அதிபர் திணைக்களம் கைதுசெய்ய வேண்டும் என அனுரகுமார முன்னர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். ஆனால் இதன் பின்னர் சட்ட மா அதிபராக சுகத கம்லத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் கோத்தபாயவைக் கைதுசெய்ய முடியாது என அனுர குமார தெரிவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே. இவ்விரு முரண்பாடான கருத்துக்களில் மறைந்துள்ள உண்மை என்ன என்பது தெளிவாகவில்லை.

அவன்காட் வழக்கை இழுத்தடித்தல் மற்றும் குற்றவாளி வெளிநாட்டிற்குப் பயணித்தல் போன்றவற்றின் பின்னர் சட்டமா அதிபரும் சுகத கம்லத்தும் செயற்படுவதாக முன்னர் ராஜித குற்றம் சுமத்தியிருந்தார். சட்ட மா அதிபர் திணைக்களத்தை விட்டு வெளியேறிய சுகத கம்லத் நீதி அமைச்சின் செயலராகப் பதவியேற்றார். இந்த நியமனமும் மகிந்தவாலேயே மேற்கொள்ளப்பட்டது.

நீதி அமைச்சரை மகிந்த புறக்கணித்தார் என்பதிலும் சுகத கம்லத்தின் ஊடாக நீதி அமைச்சைக் கட்டுப்படுத்த முயற்சித்தார் என்பதிலும் எவ்வித இரகசியமும் இருக்கவில்லை. யுவனான்ஜன் சட்ட மா அதிபராகவும் சுகத பதில் சட்ட மா அதிபராகவும் பணியாற்றிய காலப்பகுதியில், அவசியமான ஆலோசனைகளுக்காக நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஊடாக மைத்திரி-ரணில் அரசாங்கம் 37 வழக்குகளை வழங்கியிருந்தது. இந்த வழக்குகளில் எட்டு வழக்குகள் மட்டுமே சட்ட மா அதிபர் திணைக்களத்தால் கையளப்பட்டிருந்தன. இதில் எஞ்சிய 29 வழக்குகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை.

23 பெப்ரவரி 2015ல் போலிக் கடவுச்சீட்டு மோசடிக்காக விமல் வீரவன்சவின் துணைவியார் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பில் ஓராண்டாக சட்ட மா அதிபர் திணைக்களம் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை. ஆனால் திடீரென சட்ட மா அதிபர் திணைக்களம் விழிப்புற்று செயற்படத் தொடங்கியதால் விமல் வீரவன்சவின் பாரியாரின் கைவிரல் அடையாளம் அண்மையில் எடுக்கப்பட்டது.

மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சு மிகவும் பலமான அமைச்சாகக் காணப்பட்டது. மகிந்த அரசாங்கத்தின் இருப்பானது யுத்தத்தின் வெற்றியிலேயே தங்கியிருந்தது.  மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் பிரதான அங்கங்களாக நீதி அமைச்சு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் போன்றன காணப்படுகின்றன.

இந்த அரசாங்கத்தின் இருப்பானது ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டறியும் இதன் திறனிலேயே தங்கியுள்ளது. விஜயதாச ராஜபக்ச நீதி அமைச்சாக இருப்பதற்கு எவ்வளவு தூரம் தகைமை பெற்றுள்ளார் என்பதை மைத்திரி – ரணில் அரசாங்கம் ஆய்வுசெய்ய வேண்டும். ஏனெனில் விஜயதாச ராஜபக்சவே கோத்தபாய ராஜபக்ச கைதுசெய்யப்படுவதை எதிர்த்திருந்தார்.

அயோக்கியர்கள் பாதுகாக்கப்படுவார்களாயின், நம்பி வாக்களித்த மக்கள் மத்தியில் தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் அவநம்பிக்கை ஏற்பட்டு விடும். போரில் மகிந்த தோல்வியுற்றிருந்தால், 2010ல் இவர் மீண்டும் இவரது வாக்காளர்களால் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார். இதுபோன்றே தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாடும் ஆகும்.

சட்ட மா அதிபர் திணைக்களம் சுயாதீனமாகச் செயற்படாததாலேயே சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். யுவான்ஜன் விஜயதிலகவின் வெளியேற்றமானது தற்போதைய அரசாங்கத்திற்குக் கிடைத்த ஆசியாகும். சுகத கம்லத்தை சட்டமா அதிபராக்க மறுத்தமையும் இந்த அரசாங்கத்தின் ஒரு கெட்டித்தனமான செயலே ஆகும். 2009ல் இடம்பெற்ற யுத்தத்தின் போது சிறிலங்காவின் முப்படைகளும் சந்தித்த சவால்களை விடத் தற்போதைய புதிய சட்ட மா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய மிகக் கடினமான சவால்களைச் சந்திக்க வேண்டிய நிலை தோன்றுகிறது. யுவான்ஜன் சட்ட மா அதிபராக இருந்தபோது இவரது திணைக்களத்தில் இரண்டு முகாம்கள் காணப்பட்டன. ‘மேல் முகாமானது’ துரிதமாகச் செயற்படுவதற்காக கோவைகளை மேற்தளத்திற்குக் கொண்டுசென்றது. ‘கீழ் முகாமானது’ ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பான கோவைகளை மறைப்பதற்காக அவற்றைத் தரைவிரிப்பின் கீழ் மறைத்து வைத்தது.

நீதியை நிலைநாட்டுவதை உறுதிப்படுத்துவதற்கு ‘கீழ் முகாமை’ துடைத்தழிப்பதற்கான சிறந்த வாய்ப்பை சிறிலங்காவின் புதிய சட்டமா அதிபர் பெற்றுள்ளார். ‘அன்பிற்குரிய மகனே, அவசியமான மற்றும் துரித நடவடிக்கைக்காக உங்கள் முன்னே அயோக்கியர்கள் உள்ளனர்’ என்று மட்டுமே புதிய சட்ட மா அதிபரை நோக்கி மக்கள் கூறவேண்டும்.

ஆங்கிலத்தில்  – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்        – சிலோன் ருடே
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *