மேலும்

சீனாவை மீண்டும் தழுவுகிறது சிறிலங்கா

port-cityஎண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை இணைத்து கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தை அமைக்கும் தனது நோக்கத்தின் ஒரு பகுதியாகவே சீனா, சிறிலங்காவில் அதிக அக்கறை காண்பித்து வருகிறது.

இவ்வாறு, Reuters செய்தி நிறுவனத்துக்காக, SHIHAR ANEEZ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில், சீனாவுடனான சிறிலங்காவின் வர்த்தக உறவானது நெருக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது.

இடைநிறுத்தப்பட்ட சீனாவின் துறைமுகத் திட்டத்தை மீளவும் மேற்கொள்வதற்கான அனுமதியை கொழும்பு வழங்கியுள்ள அதேவேளையில், புதிய சிறப்பு பொருளாதார வலயத்திற்கான முதன்மைப் பங்காளியாக சீனாவை சிறிலங்கா தேர்வு செய்துள்ளது.

இதனால் இலங்கைத்தீவு மீதான தனது செல்வாக்கைத் தொலைத்து விடுவேனோ என இந்தியா பதற்றமடைந்துள்ளது. அத்துடன்  இந்திய மாக்கடல் நோக்கிய சீனாவின் நகர்வும், சிறிலங்காவில் சீனா பொது மற்றும் இராணுவ ஆகிய இரண்டு வசதி வாய்ப்புக்களையும் உருவாக்கும் நோக்குடன் செயற்படுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாகவும் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

2015 வரை சீனச் சார்பு ஆட்சியை நடத்திய சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தோல்வியின் பின்னர் சீனாவுடனான உறவில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது. இதன் பின்னர் சிறிலங்காவின் ஆட்சியைக் கைப்பற்றிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனத் திட்டங்கள் நியாயமானவையும் சட்டரீதியானவையுமா என்பது தொடர்பாக மீள்மதிப்பீடு செய்திருந்தார்.

தற்போது, மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் சீனாவிடமிருந்து முன்னர் வாங்கிய கடன்கள் மற்றும் கொடுப்பனவுகளைக் கருத்திற் கொண்டு, மீண்டும் சீனத் திட்டங்கள் நாட்டில் அமுலாவதற்கான அனுமதியை வழங்கியுள்ளார். ஆனாலும் மகிந்தவின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சீன உடன்படிக்கைகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அவை மீண்டும் செயற்படுத்தப்படுகின்றன.

‘சீனா மீதான நிலைப்பாடு முற்றுமுழுதாக மாற்றமடைந்துள்ளது’ என சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ‘மேற்குலகின் இறுக்கமான நிபந்தனைகளால், வேறு யார் எமக்காக தமது நிதியை முதலீடு செய்யப் போகிறார்கள்?

சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் 1.4பில்லியன் டொலர் செலவில் சீனா நிர்மாணித்து வரும் துறைமுக நகரத் திட்டம் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் கூற்றின் பிரகாரம், சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயம் ஒன்றை அமைப்பதில் சீன முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காண்பித்துள்ளனர். அம்பாந்தோட்டையில் ஏற்கனவே சீனாவால் 1.7 பில்லியன் டொலர் செலவில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்றன அமைக்கப்பட்டுள்ளன.

‘ஆகவே நாங்கள் சீன முதலீட்டாளர்களை ஏற்றுக்கொண்டுள்ளோம். அவர்கள் தமது சொந்த நிதியை முதலீடு செய்வார்கள். இதுவே இந்த நாடு முன்னேறுவதற்கான சிறந்த வழியாகும்’ என சமரவிக்கிரம மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா மீதான சீனாவின் முதலீடானது சிறிலங்காவின் 79 பில்லியன் டொலர் பொருளாதார வலயத்தில் வேறு முக்கிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாது என்பது கருத்தல்ல. திருகோணமலையில் சிறப்பு பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கடந்த வாரம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுக்களை மேற்கொண்டதாக இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘இந்தியா மற்றும் சிறிலங்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுநிலையானது மிகவும் வலுவாக உள்ளது. இது மேலும் வலுப்படுத்தப்படுகிறது’ என இந்திய மாக்கடல் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இந்திய வெளியுறவு அமைச்சின் கூட்டுச் செயலர்   ரேணு போல் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுவரையில், வர்த்தக வலயத்திற்கான திட்டவரைபுடன் சீனா மட்டுமே சிறிலங்காவை நாடியுள்ளதாக சிறிலங்காவின் முதலீட்டுச் சபையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது 2009ல் முடிவிற்கு வந்த பின்னர், சீனா பல நூறு மில்லியன் டொலர் முதலீட்டில் வீதிகள், துறைமுகங்கள் போன்றவற்றை இலங்கையர்களுக்காக நிர்மாணித்து வழங்கியுள்ளது. மேற்குலக நாடுகள் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கு நிபந்தனைகள் இட்ட நிலையில் சீனாவே சிறிலங்காவில் தனது முதலீடுகளை அதிகளவில் மேற்கொண்டிருந்தது.

எண்ணெய் வளம் நிறைந்த மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை இணைத்து கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தை அமைக்கும் தனது நோக்கத்தின் ஒரு பகுதியாகவே சீனா, சிறிலங்காவில் அதிக அக்கறை காண்பித்து வருகிறது.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் உட்பட சில நாடுகள் சிறிலங்காவுடனான தமது கடல்வழிப் போக்குவரத்தில் சீனாவின் செல்வாக்கு நிலவுவதை உணர்ந்துள்ளன. இதுவே இந்த நாடுகள் பதற்றமடைவதற்கான காரணமாகும்.

மகிந்தவின் பலமான அரணாக விளங்கும் தென்சிறிலங்காவின் கரையோரக் கிராமமான அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகமானது சீனாவால் சிவில் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படலாம் என மேற்குலக இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான அச்சங்கள் தேவையற்றவை எனவும், இந்தியா உட்பட பல்வேறு தூர தேச நாடுகளின் கப்பல்கள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தரித்து நின்று செல்வதாகவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீனாவால் சிறிலங்கா முதலீட்டுச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ள நான்கு மிகப் பாரிய திட்டவரைபுகளில் அம்பாந்தோட்டையில் சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைத்தலும் ஒன்றாகும் என முதலீட்டுச் சபையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏனைய திட்டவரைபுகள் தொடர்பான தகவல்களை இந்த அதிகாரி வழங்கவில்லை.

நிலப்பரப்பு மற்றும் சூழலியல் பாதிப்புக்களை மட்டுப்படுத்திய பின்னரே கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியதாக வர்த்தக அமைச்சர் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக நாளொன்றுக்கு 380,000 டொலர் செலவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு துறைமுக நகரத் திட்டத்திற்கு நிதி வழங்கும் சீன அரசின் தொடர்பாடல்கள் நிர்மாண நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘சீனா மற்றும் சிறிலங்கா ஆகியவற்றுக்கிடையில் இத்திட்டம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட சமரசப் பேச்சுக்களின் விளைவாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் இது தொடர்பான உண்மைத்தன்மையை விளங்கிக் கொண்டது. இது தொடர்பான சீர்திருத்தங்கள் சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டது’ என துறைமுக நகரத் திட்டத்தை அமுல்படுத்தும் உள்ளக நிறுவனமான CHEC Port City Colombo (Pvt) Ltd ஐச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

‘எல்லாம் நல்லபடியாக இடம்பெறுகிறது. சீன அரசானது கடன் வட்டியாக ஏழு சதவீதத்தை அறவீடு செய்வதாக ஏற்றுக்கொண்டதால், நாங்கள் மீளச்செலுத்தும் ஆண்டையும் குறைத்துள்ளோம்’ என சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சிறிலங்காவுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பை எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்தது. ‘சிறிலங்கா தொடர்ந்தும் சீனாவுடனான ஆழமான நடைமுறை சார் ஒத்துழைப்பைத் தொடரும் என நாம் நம்புகிறோம்’ என சீன வெளியுறவு அமைச்சின் பெண் பேச்சாளர் குவா சுன்சிங்க் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *