மேலும்

பட்டுப்பாதை திட்டம் – இலக்கை அடைய சீனா எதிர்கொள்ளும் பெரும் போராட்டம்

சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்ட அமுலாக்கமானது சீனாவின் எல்லைக்கு அப்பால் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது என்பதே உண்மை. சீனாவின் நெருங்கிய கரையோர அயல்நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள தயக்கமே இத்திட்டத்தின் பின்னடைவுக்குக் காரணம்.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Shannon Tiezzi எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சீன அரசின் கடல்சார் நிர்வாக இயக்குனர் வங்க் கொங்கின் கூற்றின் பிரகாரம், 21ம் நூற்றாண்டு கரையோர பட்டுப் பாதைத் திட்டத்தை 2016ல் மேற்கொள்வதற்கான மிகப்பாரிய திட்டங்களை சீனா கொண்டுள்ளது.  இவ்வாண்டு சீனா இத்திட்டத்தை பெருமளவில் நிறைவுசெய்வதற்கான பணிகளை முன்னெடுக்கும் என இயக்குனர் வங்க் கொங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா-ஆசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு)அமைப்பின் கடல்சார் ஒத்துழைப்பு மையம் மற்றும் கிழக்காசியாவில் கரையோர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான தளத்தை நிறுவுதல் போன்றன தொடர்பாக வங்க் தெரிவித்துள்ளார்.

பட்டுப்பாதைத் திட்டங்கள் தொடர்பாக சீனா ஏற்கனவே ‘பட்டுப்பாதை பொருளாதார அணையை நிறுவுதல் மற்றும் 21ம் நூற்றாண்டிற்கான கரையோர பட்டுப்பாதையின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள்’ என்கின்ற விரிவான செயற்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இச்செயற் திட்ட ஆவணத்தில் கரையோர பட்டுப்பாதைத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் பாதைகள் மற்றும் முன்னுரிமைகள் தொடர்பாக விளக்கப்பட்டுள்ளது.

’21ம் நூற்றாண்டிற்கான கரையோர பட்டுப்பாதை சீனாவின் கரையோரத்திலிருந்து தென்சீனக் கடல் மற்றும் இந்திய மாக்கடல் ஆகியவற்றின் ஊடாக ஐரோப்பா வரை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடல் பிராந்தியத்தில் சுமூகமான, பாதுகாப்பான, வினைத்திறன் மிக்க போக்குவரத்துப் பாதைகளை அமைத்து அவற்றின் மூலம் பட்டுப்பாதைத் திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் மாக்கடல் துறைமுகங்களை இணைப்பதே இதன் நோக்கம்’ என சீனாவால் வெளியிடப்பட்ட விரிவான செயற்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013ன் ஆரம்பத்தில் ‘அணை மற்றும் பாதை’ ஆகிய இரண்டிற்குமான திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இதற்கான கூட்டு செயற்திட்டமானது மார்ச் 2015 இலேயே வெளியிடப்பட்டது. குறிப்பாக, சீனா தனது அணை அமைக்கும் திட்டத்தில் பாகிஸ்தான், கசகஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளையும் பங்காளியாகக் கொண்டுள்ளது. எனினும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டுமாயின் எகிப்தை சீனா தனது பங்காளியாக்கியிருக்க வேண்டும். ஆனால் இதை சீனா தவறவிட்டுள்ளது.

தென்சீன ஆசியத் துறைமுகத்திலுள்ள சீனாவின் கரையோர அயல்நாடுகள் தென்சீனக் கடலில் சீனா எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது என்பதை அவதானித்து வருகின்றன. ஆகவே வாங் தெரிவித்த கூற்றானது இந்த நாடுகள் விடயத்தில் முரணான கருத்தைத் தோற்றுவித்துள்ளது.

தென்சீனக் கடல் உட்பட சீனாவின் கரையோரப் பிராந்திய நகர்வுகளை வரையறுக்கின்ற பொறுப்பைக் கொண்டுள்ள சீன அரசின் கடல்சார் நிர்வாகத்தின் இயக்குனராக வங்க் கடமையாற்றுகிறார். ஆகவே இவர் சீனாவின் எல்லை நாடுகளின் கடற்பிராந்தியங்களில் சீனச் சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். சீனாவின் எல்லைத் தகராறு இடம்பெறுகின்ற இடங்களிலும் கூட சீனச் சட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இது தவிர, வங்கின் கூற்றுக்கள் கரையோர பட்டுப்பாதைத் திட்டத்தை அல்லது கரையோர ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான புதிய மூலோபாயத்தை உள்ளடக்கவில்லை.

சீன-ஆசியான் அமைப்புடனான கரையோர ஒத்துழைப்பு மையமானது பழைய விடயமாகும். 2011லிருந்து சீனா,  ஆசியான் அமைப்புடன் கரையோர ஒத்துழைப்புத் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளின் பயனாக, 2014லிருந்து சீன அரசின் கடல்சார் நிர்வாகத்தின் வழிகாட்டலின் கீழ் சீன-ஆசியான் ஒத்துழைப்பு மையத்தை உருவாக்குவது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

2016ல் சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்டம் முற்றுமுழுதாக நிறைவேற்றப்படும் என வங் நம்புகிறார். எனினும், இதுபோன்றே கடந்த ஆண்டும் ஆசியான்-சீன கரையோர ஒத்துழைப்பு ஆண்டு’ என சீனா நிறைந்த நம்பிக்கையுடன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு நிறைவேற்றப்படவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

இதேவேளையில், கிழக்கு சீனக் கடலில் ‘கிழக்காசியாவில் கரையோர ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான தளத்தை’ உருவாக்குதல் என்ற எண்ணத்தின் கீழ் நெருக்கடி முகாமைத்துவப் பொறிமுறையை உருவாக்குவதற்கான திறனை சீனா மற்றும் யப்பான் கொண்டிருக்கவில்லை.

இதை அடிப்படையாகக் கொண்டு, சீனா, தென்கிழக்கு ஆசியாவில் தனது பட்டுப்பாதைத் திட்டம் தொடர்பில் எவ்வித நகர்வையும் முன்னெடுக்கவில்லை என ஒட்டுமொத்தமாகக் கூறிவிட முடியாது. கடந்த ஆண்டு, லாவோஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளுடனும் சீனா கடந்த ஆண்டு அதிக முதலீட்டுடன் கூடிய தொடருந்துப் பாதைகளுக்கான உடன்படிக்கைகளை நிறைவேற்றியது.

இதேபோன்று தாய்லாந்துடன் பிறிதொரு தொடருந்துப் பாதைக்கான உடன்பாட்டில் உத்தியோகபூர்வமாக சீனா கைச்சாத்திட்டது. இதேபோன்று, சிறிலங்காவில் மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்த கையோடு இடைநிறுத்தப்பட்ட சீனாவின் துறைமுக அபிவிருத்தித் திட்டம் மீண்டும் தொடர்வதற்கான அனுமதி சிறிலங்கா அரசாங்கத்தால் அண்மையில் வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக நோக்கில், சீனாவின் கரையோரப் பட்டுப்பாதைத் திட்ட அமுலாக்கமானது சீனாவின் எல்லைக்கு அப்பால் மிகவும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றது என்பதே உண்மை. சீனாவின் நெருங்கிய கரையோர அயல்நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள தயக்கமே இத்திட்டத்தின் பின்னடைவுக்குக் காரணமாகும்.

சீனா தனது கரையோரப் பட்டுப் பாதைத் திட்டத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் தனது அயல்நாடுகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் வென்றெடுக்க வேண்டியது மிகவும் முக்கியமான காரணியாக உள்ளதாக சீன சமூக விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜியுயு லீ சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டுப்பாதைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, தற்போதும் சீனா தனது இலக்கை அடைந்து கொள்வதில் பெரும் போராட்டத்தைச் சந்திக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *