ஹரிணியின் சீன, இந்திய பயணங்கள் ஜேவிபிக்குள் அமைதியற்ற நிலையை ஏற்படுத்துமா?
எந்தவொரு அமைச்சரும் அல்லது அரசாங்க அதிகாரியும் வெளிநாட்டு பிரமுகர்கள் அல்லது தூதுவர்களைச் சந்திப்பதற்கு முன்னர், ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று ஜனவரி மாதம் அரசாங்கம் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், கூறப்பட்டிருந்தது.
இந்த சுற்றறிக்கை, குறிப்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்காகக் கொண்டது என்பது, எதிர்க்கட்சியின் கருத்தாகும்.
இந்திய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவரான ஹரிணி, அமெரிக்க நிதியுதவி பெற்ற ஒரு அரசு சாரா நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.
அவர் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் மட்டுமல்லாமல் பல மேற்கத்திய நாடுகளுடனும் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, ஜே.வி.பி மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே உறவுகளை வளர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
இருப்பினும், மேற்கத்திய நாடுகளுடனான இந்த தொடர்புகள் ஜே.வி.பிக்குள் ஒரு கவலையாக மாறியது.
வெளிவிவகார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை, அவரது வெளிநாட்டு ஈடுபாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று எதிர்க்கட்சி கூறுகிறது.
அவரது வெளிநாட்டு பயணங்கள் ஜே.வி.பியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரவியுள்ளது.
இருப்பினும், அவருக்கு சீனாவிலிருந்து அழைப்பு வந்தது. ஜே.வி.பி அதனை எதிர்க்கவில்லை.
அவரது பயணம் சிறிலங்காவுக்கான சீனத் தூதுவரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
அவரது சீன வருகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று, சீன வட்டாரங்கள் ஆரம்பத்தில் சுட்டிக்காட்டின.
இருப்பினும், இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதும், சிறிலங்காவிற்கான சீனத் தூதரகம், அவரது வருகைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு பீஜிங்கிற்கு அறிவுறுத்தியதாக நம்பப்படுகிறது.
சீன அதிபரின் மனைவியைச் சந்திக்க ஹரிணி ஆரம்பத்தில் விடுத்த கோரிக்கைக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அவரது இந்திய பயணம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு இப்போது அந்த சந்திப்பு வழங்கப்படலாம்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் தலைவருடனான சந்திப்பு, அவரது சீன பயணத்தின் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ஜூன் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஆனால் அங்கு சீன அதிபரைச் சந்திக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சிறிலங்காவில் அதிபருக்குப் பின்னர் இரண்டாவது சக்திவாய்ந்த நபர் ரில்வின் சில்வா என்பது சீனாவுக்குத் தெரியாது.
இருப்பினும், ஹரிணியை அவர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நபராக மாற்றியது, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான அவரது தொடர்புகளாக இருக்கலாம்.
பிரதமர் மோடியைச் சந்திக்க ஹரிணிக்கு என்டிடிவி இந்தியா அழைப்பு விடுத்தது.
இந்த அழைப்பு, சீன அழைப்பிற்கு முன் வந்ததா அல்லது அதற்குப் பிறகு வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் சீனா மற்றும் இந்தியா இரண்டிற்குமான அவரது பயணங்கள் ஜேவிபிக்குள் அமைதியற்ற நிலையை உருவாக்கும்.
ஆங்கில வழிமூலம்- உபுல் ஜோசப் பெர்னான்டோ