மேலும்

நௌரு தீவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள்

australia-refugeesநௌருவில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட புகலிடக் கோரிக்கையாளரான துர்க்கா*, தான் மீண்டும் அத்தீவிற்கு அனுப்பப்பட்டால் எவ்வாறான பயங்கரங்களை அனுபவிக்க வேண்டிவரும் என்பது தொடர்பாகத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவின் நௌருத் தீவில் தடுத்து வைக்கப்பட்ட கடந்த காலத்தில் பல்வேறு சித்திரவதைகள், வடுக்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறிலங்காத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளரான துர்க்கா, மீண்டும் நௌருத் தீவுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்கின்ற அச்சத்தில் உறைந்துள்ளார்.

‘நௌருவிற்குத் திரும்பிச் செல்வதை நினைத்து நான் அச்சம் கொள்கிறேன். அங்கே எனது வாழ்க்கை பாதுகாப்பாக இருக்காது. நான் மீண்டும் நௌருவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டால், என் உயிரை மாய்த்துக்  கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை’ என பாதிக்கப்பட்ட துர்க்கா அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பு முகாமிலிருந்து மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் தெரிவித்தார்.

72 மணித்தியால அறிவித்தலில் நௌருவிற்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்கின்ற நிலையிலுள்ள 72 சிறுவர்கள், அவுஸ்திரேலியாவில் பிறந்த 33 குழந்தைகள் உட்பட 267 புகலிடக் கோரிக்கையாளர்களில் துர்க்காவும் ஒருவராவார்.  267 பேரில் சில புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் நௌருத் தீவுக்கு அனுப்பி வைக்கப்படக் கூடிய உயர் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

தாங்கள் மீண்டும் நௌருவிற்கு அனுப்பி வைக்கப்பட்டால், தாக்கப்படக் கூடிய, சித்திரவதைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக நேரும் எனவும் போதியளவு மருத்துவ வசதிகள் அங்கு இல்லை எனவும் புகலிடக் கோரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

australia-refugees

இவ்வாறான துன்புறுத்தல்கள் மற்றும் ஆபத்தை எதிர்நோக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களில் துர்க்காவும் ஒருவராவார். இவர் 1996ல் சிறிலங்காவின் வடக்கில் உள்ள யாழ்ப்பாண நகரில் வைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர் என்கின்ற சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.

துர்க்கா 22 வயதாக இருந்த போது ஏனைய தமிழ் இளையோர்களைப் போலவே புலிகள் அமைப்பின் அடிப்படைப் பயிற்சிகளைப் பெற்றிருந்தார். ‘ஆனால் நான் ஒரு போதும் புலிகள் அமைப்பின் போராளியாகச் செயற்படவில்லை. நான் அரசியல் பணிகளில் மட்டுமே ஈடுபட்டிருந்தேன்’ என துர்க்கா தெரிவித்தார்.

‘கர்ப்பிணியாக இருந்த போதிலும் நான் சித்திரவதைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகினேன். இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட போது எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படாது இரண்டு ஆண்டுகள் நான் தடுத்து வைக்கப்பட்டேன். இதன் பின்னர் நான் கொழும்பிற்குத் தப்பிச் சென்றேன்.

நான் சிறிலங்கா இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட போது எனது கணவர் காணாமற் போனார். இதுவரை இவர் தொடர்பான தகவல் கிடைக்கப் பெறவில்லை. சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமற்போன பல பத்தாயிரக்கணக்கானவர்களில் எனது கணவரும் ஒருவராவார்’ என துர்க்கா தெரிவித்தார்.

கொழும்பில் துர்க்கா தங்கியிருந்த காலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள நண்பர்களை இவரை வந்து சந்தித்தனர். இதனால் இவர் மீண்டும் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். இவர் மீண்டும் விடுவிக்கப்பட்ட பின்னர், சிறிலங்கா அரச படையினரால் அடிக்கடி பாலியல் வன்புணர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.

‘சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் எனது வீட்டிற்கு வருவர். அவர்கள் ஒவ்வொரு தடவையும் இரண்டு அல்லது மூன்று பேர் வருவார்கள். இவர்கள் என்னைப் பலவந்தமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவார்கள். நான் அவர்களின் ஆசைகளுக்கு ஒத்துழைப்பேன் என அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. இராணுவ வீரர்கள் என் மீது பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட போது நான் அவர்களை எதிர்த்தேன். இதனால் அவர்கள் எனது உடைகளைக் கிழித்தார்கள். எனது கைகளைக் கட்டினார்கள். எனது வாய்க்குள் உடைகளைத் திணித்தார்கள். இதனால் என்னால் கத்த முடியவில்லை. அதன் பின்னர் அவர்கள் என்னை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார்கள்’ என துர்க்கா கூறுகிறார்.

‘அவர்கள் எனது வீட்டை விட்டுச் சென்ற பின்னர் நான் எனது மகனுடன் தனியாக இருந்தவாறு அழுவேன். அவர்கள் இவ்வாறு பல தடவைகள் என்னிடம் வந்தனர்’ என துர்க்கா தெரிவித்தார்.

இதன் பின்னர் 2007ல் இவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று தமிழ்நாட்டு அகதி முகாம் ஒன்றில் தஞ்சம் புகுவதற்கு இவரது நண்பர்கள் துர்க்காவிற்கு உதவினர். இதன்பின்னர் 2014ல் துர்க்கா தனது மகனுடன் அவுஸ்திரேலியாவைப் படகின் மூலம் சென்றடைந்தார்.

யூலை 2014ல் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் பயணம் செய்த 157 புகலிடக் கோரிக்கையாளர்களில் துர்க்காவும் ஒருவராவார். இவர்கள் அவுஸ்திரேலியக் கப்பல் ஒன்றில் ஒரு மாதம் வரை கடலில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்கள் மீண்டும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முயற்சிகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஈடுபட்ட போதிலும், இவர்களைப் பொறுப்பெடுக்க இந்தியா மறுத்தது. ஏனெனில் இவர்களில் எவரும் இந்தியக் குடிமக்கள் அல்லர். இதனால் அவுஸ்திரேலிய அரசாங்கம் இவர்களை நௌரு தீவிற்கு வலுக்கட்டாயமாக அனுப்பியது.

‘நௌரு தீவில் எவ்வித பாதுகாப்பும் இல்லை. நாம் தங்க வைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் எவ்வித பூட்டு வசதிகளும் காணப்படவில்லை. எவரும் எந்த வேளையிலும் எமது கூடாரத்திற்குள் நுழையலாம். பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் கூட என்னை அச்சுறுத்தியுள்ளனர். அவர்கள் என்னை பிடித்திழுத்தனர். இதனால் நான் எப்போதும் அச்சத்துடனேயே வாழ்கிறேன்’ என துர்க்கா தெரிவித்தார்.

‘சிறிலங்காவில் எனக்கு உண்டான காயங்களால் நான் நித்திரை மாத்திரைகளை உண்டுவிட்டு படுத்துறங்கினேன். அடுத்த நாள் காலையில் நான் எழுந்து பார்த்த போது, எனது உடைகள் களையப்பட்டிருந்தன. எனது அறையிலிருந்த பொருட்கள் சிதறுண்டிருந்தன. நான் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன். நான் நித்திரை மாத்திரைகளை உட்கொண்டு விட்டு ஆழ்ந்த நித்திரையிலிருந்த போது பாலியல் வன்புணர்வுக்கு உட்பட்டேன் என்பதை மனநல மருத்துவ மாதுவிடம் தெரிவித்தேன். அவர் எனது முறைப்பாட்டை தனது தீவிர கவனத்திற்குக் கொண்டுவந்தார். இதன்பின்னரே நான் நௌருவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு இடம்மாற்றப்பட்டேன்’ என்கிறார் துர்க்கா.

துர்க்கா தனது 19 வயது மகனுடன் ஜனவரி 2015 தொடக்கம் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தான் மீண்டும் நௌருவிற்குத் திருப்பி அனுப்பப்படலாம் என அச்சம் கொள்வதாக துர்க்கா தெரிவித்தார்.

‘அவ்வாறு நான் நௌருவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன். என்னால் அந்த இடத்திற்குத் திரும்பிச் செல்ல முடியாது’ என துர்க்கா தெரிவித்தார்.

‘எனக்கு எவ்வித சிறப்புக் கவனிப்புக்களும் தேவையில்லை. நான் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும். இதுவே எனது விருப்பம். நான் மீண்டும் அந்த இடத்திற்குத் திருப்பி அனுப்பப்படுவேனோ என்கின்ற அச்சமின்றி வாழவேண்டும். நான் மீண்டும் பாதுகாப்பான உணர்வுடன் வாழவேண்டும்’ என துர்க்கா கூறுகிறார்.

அதேவேளை, பொதுமக்களின் அனுதாபங்களைப் பெற்றுக் கொள்வதற்காக புகலிடக் கோரிக்கையாளர்கள் தம் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வழமையாகும் என நௌரு காவற்துறை ஆணையாளர் கோறே கலேப் தெரிவித்தார்.

‘புகலிடக் கோரிக்கையாளர்கள் தாம் தாக்கப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். இவர்களது கதைகளில் எவ்வித உண்மையும் இல்லை. இவர்கள் தாக்கப்பட்டதற்கான எவ்வித சான்றுகளும் ஆதாரங்களும் காணப்படவில்லை’ என காவற்துறை ஆணையாளர் குறிப்பிட்டார்.

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக காவற்துறையினர் எவ்வளவு தூரம் விசாரணை செய்கின்றனர் என்பது கேள்விக்குறியே. இவ்வாறான தாக்குதல் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பாக தடுப்பு மையத்தின் நிர்வாகிகள் அண்மைய ஆண்டுகளில் 50 வழக்குகளைப் பதிவு செய்த போதிலும், ஐந்து வழக்குகள் மட்டுமே வெற்றிகரமாக வாதிடப்பட்டுள்ளன. ஏனையவர்கள் தமக்கெதிரான சாட்சியங்களை முன்வைக்கத் தவறியுள்ளனர்.

நௌரு காவற்துறை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாக நௌருவின் முன்னாள் வதிவிட நீதிவான் பீற்றர் லோ கடந்த ஆண்டு சுட்டிக்காட்டியிருந்தார். தடுப்பு முகாம்களில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் மீறல் குற்றச்சாட்டுக்கள் மிகத் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக குடிவரவு அமைச்சர் பீற்றர் டுற்றன் தெரிவித்துள்ளார்.

‘சித்திரவதைகள் தொடர்பாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மிகத் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் மிகச் சரியாக விசாரணை செய்யப்படுகிறதா என்பதில் நாம் அதிக சிரத்தை எடுத்துள்ளோம். அவுஸ்திரேலியர்களாகிய நாம் சிறுவர்கள் உட்பட எமது நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளோர் ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களால் அல்லது ஏனையவர்களால் சித்திரவதைகளுக்கும் மீறல்களுக்கும் உட்படுத்தப்படுவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். ஆகவே இவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்’ என அவுஸ்திரேலியக் குடிவரவு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவை வந்தடைந்த எந்தவொரு புகலிடக் கோரிக்கையாளர்களும் அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் குடியேற்றப்பட மாட்டார்கள் என்பது அரசாங்கத்தின் கோட்பாடாக உள்ளதாகவும் இவ்வாறானதொரு கோட்பாடே பாதுகாப்பற்ற கடற்பயணங்களை மக்கள் தொடர்ந்தும் மேற்கொள்வதைத் தடுத்துள்ளதாகவும் இவ்வாறான ஆபத்தான பயணங்களில் மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்படுவதைத் தடுப்பதாகவும் டுற்றர் குறிப்பிட்டார்.

துர்க்கா* – அவரதும் அவரது குடும்பத்தினரதும் பாதுகாப்புக் கருதி  பெயர் மாற்றப்பட்டுள்ளது.

வழிமூலம் – The Guardian
ஆங்கிலத்தில் – Ben Doherty
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *