மேலும்

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் பதவியைப் பிடிக்க சிறிலங்கா இராணுவத்துக்குள் பனிப்போர்

military-officersசிறிலங்கா இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான, இராணுவத் தலைமை அதிகாரி பதவியைப் பிடிப்பதில், மூத்த இராணுவ அதிகாரிகளுக்குள் பனிப்போர் மூண்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்றதையடுத்தே அந்தப் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பதவிக்கான போட்டியில் இருக்கும் அதிகாரிகளில் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் முன்னணியில் இருக்கிறார். ஏற்கனவே இராணுவத் தலைமை அதிகாரி நியமனங்களின் போது, இரண்டு தடவைகள் இவர் ஓரம்கட்டப்பட்டிருந்தார்.

இவரைப் புறக்கணித்தே மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஆகியோர், முன்னர் இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர்.

கவசப்படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், அடுத்த ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் நாள் ஓய்வு பெறவுள்ளார்.

இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கான நியமனங்களின் போது, காலாற்படைப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கே அதிக முன்னுரிமை கொடுக்கப்படுவது வழக்கம்.

அதேவேளை, இராணுவத் தலைமை அதிகாரி பதவிக்கான போட்டியில் காலாற்படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவும், பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சன்ன குணதிலகவும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் மைத்துனர்களாவர்.

மேஜர் ஜெனரல் ஜெகத் டயசின் சமகாலத்தவர்களான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, மேஜர் ஜெனரல் சுமித் மானவடு, மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன ஆகியோர், 55 வயதை எட்டும் நிலையில் ஓய்வு பெறவுள்ளனர்.

55 வயதுக்குப் பின்னர் மேஜர் ஜெனரல்களுக்கு சேவை நீடிப்பு வழங்குவதில்லை என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதனால், தற்போது சிறிலங்கா இராணுவத்தில் உள்ள 46 மேஜர் ஜெனரல்களில், 24 பேர், அடுத்த ஆண்டு ஓய்வுபெறவுள்ளனர்.

அதேவேளை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவும், அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் நாள் ஓய்வு பெறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *