மேலும்

ஆட்சியைப் பிடிக்க ஆரூடம் பார்க்கும் மகிந்த – உபுல் ஜோசப் பெர்னான்டோ

mahinda- a'puraமகிந்த ராஜபக்ச அண்மையில் அபயராமய விகாரைக்கு சோதிடர் ஒருவரை அழைத்து மைத்திரிபால சிறிசேனவின் எதிர்காலம் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பான அவரது ஜாதக நிலைமையைக் கேட்டறிந்திருந்தார். இதன்பிரகாரம் 2016 ஏப்ரல் மாதம் அளவில் புதிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கான பிரகாசமான எதிர்காலம் ஒன்று தனக்கு உள்ளதாக மகிந்த ராஜபக்ச கருதுகிறார்.

இவர் தனது எதிர்காலக் கனவு தொடர்பாக தனது நண்பர்களிடமும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்துள்ள உறுப்பினர்களிடமும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்ச வரும் ஏப்ரலில் அரசாங்கம் ஒன்றை அமைக்கும் வரை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  மகிந்தவின் இந்தக் கனவு தொடர்பான செய்தி மைத்திரியின் காதையும் எட்டியது. இது தொடர்பாக மைத்திரி பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

1994ல் தோற்கடிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, மீண்டும் அரசாங்கத்தை அமைப்பதற்காக பத்து ஆண்டுகள் வரை சந்திரிக்கா குமாரதுங்கவின் இறப்புத் தொடர்பாக கனவு கண்டது. இதேபோன்று மகிந்தவின் இறப்பிற்காக மேலும் பத்து ஆண்டுகள் வரை ஐ.தே.க காத்திருந்தது.

1994ல் ஆட்சியிலிருந்து தோற்கடிக்கப்பட்டு எதிர்க்கட்சியாகச் செயற்பட்ட ஐ.தே.க மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான எந்தவொரு திட்டமிடப்பட்ட மூலோபாயங்களையும் கொண்டிருக்கவில்லை. பல தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இக்கட்சியானது தனது தோல்வியால் துவண்ட போதிலும் எவ்வித காத்திரமான திட்டங்களையும் தீட்டவில்லை. மாறாக சந்திரிக்காவின் ஆரூடத்தை அலசி ஆராய்ந்தது.

‘சந்திரிக்கா விரைவில் கெட்ட காலத்திற்கு முகங்கொடுக்கப் போகிறார். ஆனால் இவரது ஆரூடத்தின் பிரகாரம் இது தொடர்பான காலப்பகுதி சுட்டிக்காட்டப்படவில்லை’ என ஐ.தே.க யிடம் சோதிடர்களால் எதிர்வுகூறப்பட்டது. சோதிடர்களால் எதிர்வுகூறப்பட்ட சந்திரிக்காவின் ஆரூடம் மீது மட்டுமே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் நம்பிக்கை கொண்டிருந்தது. எனினும், சந்திரிக்கா இந்த நாட்டை 11 ஆண்டுகள் வரை ஆட்சி செய்தார்.

சந்திரிக்கா தனது ஆட்சிக்காலத்தை நிறைவுக்குக் கொண்டுவந்த போதிலும், ஆரூடம் மீது நம்பிக்கை கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியால் சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற முடியவில்லை. ஐ.தே.க தனக்கு ஆதரவான மக்கள் கூட்டத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான எவ்வித திட்டமிட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய பொறுப்புடைய அதிகாரி ஒருவர் ஒரு தடவை ஐ.தே.கவின் பொறுப்பு வாய்ந்த முக்கிய அரசியல் தலைவரான காமினி அத்துக்கோரளவிடம் ஒரு விடயத்தைத் தெரிவித்திருந்தார்.

‘நான் ஒருநாள் விஜய குமாரதுங்கவுடன் சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆரூடத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். நாங்கள் பிரபலமான ஒரு புத்த பிக்குவிடமே சோதிடம் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம். குறித்த ஆரூடம் சந்திரிக்காவினுடையது தான் என்பது பிக்குவிற்குத் தெரியாது. இந்தச் சாதகத்திற்குச் சொந்தமான பெண்மணி சோடாப் போத்தல் போன்ற குணவியல்பைக் கொண்டுள்ளார் என பிக்கு தெரிவித்திருந்தார். அதாவது வாயுவுடன் அடைக்கப்படும் சோடாப் போத்தலானது திறந்தவுடன் ஆவியாகிவிடும். அதேபோன்றே சந்திரிக்காவின் குணவியல்பும் என பிக்கு குறிப்பிட்டார்.

அத்துடன் குறித்த காலப்பகுதிக்குப் பிறகு இந்த சாதகம் தொடர்பில் எதனையும் எதிர்வுகூற முடியாதுள்ளதாகவும் பிக்கு சுட்டிக்காட்டியிருந்தார்’ என்பதே காமினி அத்துக்கொறவிடம் கூறப்பட்ட சம்பவமாகும்.

குறித்த அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்த பிரமுகர் சந்திரிக்காவின் ஆரூடம் தொடர்பில் பிக்குவால் கூறப்பட்ட விடயத்தை மேலும் பல ஐ.தே.க உறுப்பினர்களிடமும் தெரிவித்திருந்தார். ஐ.தே.க தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பில் சந்திரிக்காவின் சாதக பலன்கள் மேலும் உயிரூட்டுவதாக இந்த உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டனர்.

1999ல் இடம்பெற்ற குண்டு வெடிப்பொன்றில் சந்திரிக்கா மயிரிழையில் உயிர் தப்பினார். இவர் சிறிலங்காவை 11 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தார். இதன் பின்னரே ஐ.தே.க விழித்துக் கொண்டது. சந்திரிக்காவைத் தொடர்ந்து மகிந்த ஆட்சிக்கு வந்தார். இதன் பின்னர் மகிந்தவின் சாதக பலன்களைப் பார்ப்பதில் ஐ.தே.க நேரத்தைச் செலவழித்தது.

‘மகிந்தவிற்கு கெட்ட காலம் இடம்பெறுவதாலேயே இதற்குப் பரிகாரமாக அவர் திருப்பதி கோயிலுக்கு பூசை செய்வதற்காகச் செல்கிறார்’ என்கின்ற கதையையும் ஐ.தே.க உறுப்பினர்கள் புனைந்தனர்.

2009ல் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றிற்கு பிரபல சோதிடர் சந்திரசிறி பண்டார அழைக்கப்பட்டிருந்தார். இவர் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆவார். மகிந்த மிகப் பாரிய ஆபத்தைச் சந்திக்கவுள்ளார் என பண்டார கருத்தரங்கில் தெரிவித்திருந்தார்.

ஐ.தே.கவில் செயற்பட்டுக் கொண்டிருந்த மகிந்தவின் உளவாளி ஒருவர் இதனை மகிந்தவிடம் தெரிவித்தார். இதனை அறிந்து கோபங்கொண்ட மகிந்த சந்திரசிறி பண்டாரவைக் கைதுசெய்தார். 2009ல் மகிந்த போரை வெற்றி கொண்ட பின்னரேயே பண்டார, மகிந்தவின் எதிர்கால ஆரூடத்தை எதிர்வு கூறியிருந்தார்.

மகிந்த போரை வென்றெடுத்த பின்னர் ஐ.தே.க பெரும் நெருக்கடியைச் சந்தித்திருந்தது. தாங்கள் இனி ஒருபோதும் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கருதினர்.

இந்நிலையில் மகிந்த ஆபத்தைச் சந்திக்கப் போகிறார் என்கின்ற பண்டாரவின் செய்தி ஐ.தே.க உறுப்பினர்களுக்கு மனஆறுதலை அளித்தது. எனினும் மகிந்த தொடர்பாக பண்டார எதிர்வுகூறியதால் இவர் மிகப் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டார். ஆட்சியாளருக்கு சாதகமற்ற சோதிட பலனைக் கணித்ததன் காரணமாக சோதிடர் ஒருவர் கைதுசெய்யப்பட்டமை இதுவே சிறிலங்காவின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக காணப்பட்டது.

இதற்கு முன்னர், 1982ல் நக்சலைட் என முத்திரை குத்தப்பட்டு விஜய கைது செய்யப்பட்டார். அத்துடன் சிறிலங்கா அரசாங்கங்களுக்கு எதிராக கடந்த காலங்களில் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர்கள் எனக் குற்றம் சுமத்தப்பட்டு பலர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால் மகிந்தவின் காலத்திலேயே சோதிடர் ஒருவர் தனக்குச் சார்பற்ற வகையில் சாதக பலனைக் கூறியதற்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரசியற் சதியை அடிப்படையாக வைத்தே இவ்வாறு மகிந்தவுக்கு எதிராக சோதிடம் கூறியதாக சந்திரசிறி பண்டாரவிடம் காவற்துறையினர் விசாரித்தனர். ஆனால் இதனை பண்டார மறுத்ததுடன், சோதிட பலனை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தான் இதனைக் கணித்ததாகத் தெரிவித்தார்.

மகிந்தவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான மேர்வின் சில்வா, பண்டாரவை மகிந்தவிடம் அழைத்துச் சென்று மகிந்தவுக்குச் சாதகமாக சோதிடம் கூறுமாறு வலியுறுத்தினார். இதன் பின்னரே பண்டார விடுவிக்கப்பட்டார். ஆனாலும் ஐ.தே.க விடம் பண்டார தெரிவித்தது போன்று மகிந்த எந்தவொரு ஆபத்தையோ அல்லது துன்பியல் சம்பவத்தையோ தனது ஆட்சிக்காலத்தில் சந்திக்கவில்லை.

அதிபர் தேர்தலை மகிந்த முன்கூட்டியே நடத்தியிராவிட்டால், இவர் இன்றும் சிறிலங்காவின் அதிபராக இருந்திருப்பார். எனினும் மகிந்த ஒரு பத்தாண்டு வரை இந்த நாட்டை ஆட்சி செய்துள்ளார்.

அரசியல் அரங்கிலிருந்து சந்திரிகா வெளியேறுவதைப் பார்ப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியானது 11 ஆண்டுகள் வரை காத்திருந்த போதிலும், இறுதியில் 2015ல் ஐ.தே.க அரசாங்கம் அமைப்பதற்கு சந்திரிக்காவே உதவியுள்ளார்.

வழிமூலம் – சிலோன் ருடே
ஆங்கில மூலம் – உபுல் ஜோசப் பெர்னான்டோ
மொழியாக்கம்  – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *