ஜனவரியில் சிறிலங்கா அமைச்சரவை மாற்றம் – அதிரடிக்குத் தயாராகிறார் மைத்திரி
சிறிலங்காவின் அமைச்சரவை வரும் ஜனவரி மாத முற்பகுதியில் மாற்றியமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைத்து நான்கு மாதங்களாகியுள்ள நிலையில், இந்த திடீர் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றம் குறித்து சிறிலங்கா அதிபரும், பிரதமரும் கவனம் செலுத்தியுள்ளதாகவும், இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, மிகவும் செல்வாக்குள்ள அமைச்சர் ஒருவர் பதவி இழப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை மகிந்த ராஜபக்ச ஆதரவு அணியில் இடம்பெற்றிருந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாம் மகிந்த அணியில் இருந்து விலகப் போவது குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.