மேலும்

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு

Major General N.A Jagath C Diasபோர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் 33 ஆண்டு கால இராணுவ சேவையை நாளையுடன் முடித்துக் கொள்ளவிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நாளையுடன்,  55 வயதை எட்டும் நிலையிலேயே மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஓய்வு பெறவிருக்கிறார்.

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த இவர், 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை – விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை முன்னெடுத்த சிறிலங்கா இராணுவத்தின் 57ஆவது டிவிசனுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

இந்த இறுதிக்கட்டப் போரில் பொது மக்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதற்கு பொறுப்பாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுகளுக்கு இவர் உள்ளாகியிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், ஜேர்மனியில் சிறிலங்காவின் துணைத் தூதுவராகவும், முல்லைத்தீவு படைகளின் தலைமையக தளபதியாகவும் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் பதவி வகித்திருந்தார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததையடுத்து, இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நியமிக்கப்பட்ட போது, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.

இவருக்கு 55 வயதுக்குப் பின்னரும் சேவை நீடிப்பு வழங்க வேண்டும் என்றும், போர்க்குற்ற விசாரணையில் இருந்து அரசாங்கம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியிருந்தார்.

அதேவேளை, இவர் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இவருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் சேவை நீடிப்பு உத்தரவை வழங்காத நிலையில், நாளையுடன் ஓய்வுபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *