மேலும்

யாழ்ப்பாணத்தில் இரகசியக் கூட்டத்தில் உருவான புதிய அமைப்பு – முதலமைச்சரும் பங்கேற்பு

TPC (1)யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்த இரகசியக் கூட்டம் ஒன்றில், தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊடகங்களுக்குத் தகவல் தெரியப்படுத்தப்படாமல்- ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமல்- யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இந்த இரகசியக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசன், நல்லை ஆதீன குருமுதல்வர், உள்ளிட்ட அரசியல்வாதிகள், மதகுருமார், மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் வரை பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்திலேயே, தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மருத்துவர் பி.லக்ஸ்மன், ரி.வசந்தராஜா ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

TPC (1)TPC (2)TPC (3)

இந்தக் கூட்டத்தில் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதற்கும், சமூக சீரழிவுகளைத் தடுக்கும் விவகாரங்களைக் கையாள்வதற்கும் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுதல், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணித்தல், சமூகச் சீரழிவுகளை முடிவுக்கு கொண்டு வருதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் விக்னேஸ்வரன் இடையிலேயே அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது தாம் இப்போதும் ஊமை என்றும், ஏற்பாட்டாளர்களிடம் கேளுங்கள் என்றும் கூறியிருந்தார்.

எனினும், இந்த நிகழ்வில் ஏற்பாட்டாளர்கள் என்று எவரும் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

அதேவேளை இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும், கஜேந்திர குமார் ஆகியோர் கருத்து வெளியிட்ட போது, இது அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் என்றும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது இதன் முக்கிய நோக்கங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *