கூட்டமைப்புக்கு வழங்கிய மற்றொரு வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டார் மைத்திரி
யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.
அதிபர் செயலகத்தில் வைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இதற்கான நியமனக் கடிதத்தை, நேற்று வழங்கினார்.
ஏற்கனவே, யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக, பிரதிஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சிறிலங்கா அதிபர் நியமித்திருந்தார்.
யாழ். மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கூடுதல் ஆசனங்களை வென்ற நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர பதவி, கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
எனினும், அந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவி, கூட்டமைப்புக்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டதாக விசனம் வெளியிட்டிருந்தார்.
இதில், ஆறு வாக்குகளால் வெற்றி பெற்ற ஐதேக உறுப்பினருக்கு, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தநிலையில், யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பின்னர், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதனுக்கு இணைத்தலைவர் பதவியை சிறிலங்கா அதிபர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.