மேலும்

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டிய மைத்திரி

MS_CMவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் புறக்கணித்து விட்டு, ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறார் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் வடக்கு தவிர்ந்த ஏனைய எட்டு மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கான அழைப்பு தமக்கு விடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மாகாணசபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டு, மத்திய அரசின் அதிகாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது குறித்து, மாகாண முலமைச்சர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்துப் பேச்சு நடத்தவே சிறிலங்கா அதிபர் இந்தக் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மாகாணசபைகளின் அதிகாரங்களை குறைப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்றும், 13ஆவது திருத்தச்சட்டத்தின் படி, மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

மேலும், மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை நிதி அமைச்சின் ஊடாக முன்னெடுப்பதற்கும் இந்தச் சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட தயாரிப்பின் போது முதலமைச்சர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்து கொள்வதாகவும் சிறிலங்கா அதிபர் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படாத நிலையில்,  நேற்று நடந்த வடக்கு மாகாண சபை அமர்வில் உரையாற்றிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமும், வடக்கு மாகாணசபையை புறக்கணித்தே செயற்படுவதாக விசனம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *