காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவத்துடன் பேச்சு நடத்துகிறதாம் அரசு – ரணில் கூறுகிறார்
வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இராணுவத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அடுத்த மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள் நாளை முன்னிட்டு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், சிவில் சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இவ்வாறு மனித உரிமைகள் நாள் கொண்டாடப்படும் என்று நாம் யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டோம்.
கடந்த காலங்களில் மனித உரிமைகள் நாள் அனுஷ்டிக்க கூடிய சூழல் இலங்கையில் காணப்படவில்லை. எனினும் கடந்த ஜனவரிக்கு பின்னர் அந்த சூழல் முழுமையாக மாறியுள்ளது.
இதற்கு சிவில் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் அளப்பரியதாகும். இதற்காக வீதியில் இறங்கி பாரிய போராட்டங்களை நடத்தியது சிவில் அமைப்புகள் தான். கடுமையான போராட்டங்களுக்கும் தியாகங்களுக்கும் மத்தியில் ஜனவரி புரட்சியை வெற்றிக்கொண்டோம்.
இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். எனினும் இறுதியில் தேசத்துரோகி என்ற பெயரே எனக்கு கிடைத்தது.
ஜனவரி 8 புரட்சிக்கு எதிராக மாற்று புரட்சி முன்னெடுப்பதற்கு சில குழுவினர் தயாராகி வருகின்றனர்.
முன்னைய ஆட்சியின் போது 44 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். இவ்வாறு ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்படும் போது மாற்று புரட்சி செய்ய கூடியவர்களின் கண்ணுக்கு புலப்படவில்லை.
போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக, அனைத்துலக நாடுகளை ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு எம்மால் முடிந்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் கொடூரமான பயங்கரவாத இயக்கம். இதனை அனைத்துலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
போரின்போது இரு தரப்புக்களினாலும் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன. ஆகவே இது தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
குற்றம் இழைக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் உண்மை கண்டறியப்பட வேண்டும்.
காணாமல் போனோர் தொடர்பிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு சிறப்பு பணியகம் ஒன்றை அமைக்கவுள்ளோம். அந்தக் கட்டமைப்பின் கீழேயே உள்ளக விசாரணை பொறிமுறை அமையும்.
எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு சிவில் அமைப்புகளின் பொறிமுறைகள் கட்டாயம் தேவை.
வடக்கில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்பட்டன. எனினும் எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக இராணுவத்துடன் நாம் பேச்சு நடத்தி வருகிறோம்.
வடக்கில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளிலும் முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆகையால் இது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.
ஜனவரி மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
சிறிலங்காவில் போர்க்குற்றம் என்று எதுவும் இடம்பெறவில்லை. பரிந்துரைகளின் பிரகாரம் உள்ளக விசாரணையில் குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.’ என்று தெரிவித்துள்ளார்.