மேலும்

இந்தியா, சீனா இடையே சிறிலங்கா அமைக்க விரும்பும் பாலம்

ravi-karunanayakeஇந்திய மாக்கடலின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் போட்டியிடும் ஆசியாவின் மிகப் பாரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய  நாடுகளை இணைப்பதற்கான பாலமாக செயற்பட சிறிலங்கா முனைவதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

Nikkei Asian Review என்ற ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலேயே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

”சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் சிறிலங்கா அணிசாரா நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றவுள்ளது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் சிறிலங்கா இதயசுத்தியுடன் கூடிய நட்புறவைப் பேணுகிறது.

இந்திய மாக்கடலின் பொருளாதாரப் பிராந்தியத்தை வலுப்படுத்துவதில் சிறிலங்கா பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

சீனாவையும் தாய்வானையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் தனது நாட்டில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டது. இதேபோன்று நாங்களும் சீனாவையும் இந்தியாவையும் எமது நாட்டில் ஒன்றிணைத்தால் இது எவ்வளவு அற்புதமானதொரு தளமாக அமையும்.’

இந்தியா ஏற்றுமதிச் சந்தையையும், சீனா பட்டுப்பாதையையும் இலக்காகக் கொண்டுள்ளன. இந்நிலையில் நாங்கள் இவ்விரு நாடுகளினதும் இலக்குகளை நிறைவேற்றக் கூடிய ஒருங்கிணைப்புப் புள்ளியாகச் செயற்பட்டு இதனை உறுதிப்படுத்த முடியும்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு சிறிலங்கா, இந்தியா மற்றும் ஏனைய அயல் நாடுகளுடன் இதயசுத்தியுடனான உறவைப் பேணிவருகிறது. எம்மிடமிருந்து இந்த நாடுகள் எதிர்பார்க்கின்ற தலைமைத்துவப் பண்பை நாங்கள் தொடர்ந்தும் பேணுவோம்.

இதன்மூலம் நாங்கள் சிறிலங்காவில் எந்தவொரு பணியையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்கின்ற நம்பிக்கையை பிற நாடுகளுக்கு வழங்குவோம்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தைப் பொறுத்தளவில் அதற்கான நிலம் தற்போது குத்தகைக்கு விடப்பட்டுளள்து. தற்போதைய திட்டத்தில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சீனா இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால் தொடர்ந்தும் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தியா, சிறிலங்காவில் பிறிதொரு துறைமுக நகரத்தை அமைப்பதற்கு முன்வருவதற்கான தக்க தருணமாக இது காணப்படுகிறது. இவ்வாறான ஒத்துழைப்புக்கள் மூலம் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மூலம் ‘பொருளாதாரத் திருப்பத்தை’ ஏற்படுத்த முடியும்.

நல்ல நோக்கங்களுடன் சிறிலங்காவில் முதலீடு செய்ய முன்வரும் எந்தவொரு நாடுகளையும் சிறிலங்கா வரவேற்கிறது.

சீனா, யப்பான், கொரியா, போன்ற எந்தவொரு நாடுகளையும் சிறிலங்கா வரவேற்கிறது. ஏனெனில் நாங்கள் நட்பு சார்ந்த வெளியுறவுக் கோட்பாட்டைக் கொண்டுள்ளோம். எமக்கு எல்லோரும் நண்பர்களே. எவரும் எதிரிகள் அல்லர்.

இந்தியாவுடன் மீண்டும் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கான ‘மீள்சமப்படுத்தல்’ பணியில் சிறிலங்கா ஈடுபட்டுள்ளது. இதேவேளையில் சீனாவிடமிருந்தும் சிறிலங்கா முற்றுமுழுதாக இடைவெளியைப் பேண மாட்டாது.

இந்திய மாக்கடலின் கேந்திர மையத்தில் சிறிலங்கா அமைந்துள்ளதால் ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான கடல்வழிப் பாதையாகவும் இது செயற்படுகிறது.

இந்திய மாக்கடலின் கடல்சார் போக்குவரத்து வழிகளை மையப்படுத்தி சீனாவால் முன்னெடுக்கப்படும் முத்துமாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக இதன் கரையோர பட்டுப் பாதைத் திட்டத்திற்குள் சிறிலங்காவையும் உள்ளீர்ப்பதற்காக ஏற்கனவே சிறிலங்காவில் சீனா பல பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கமானது தனது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய காரணியாக எல்லா நாடுகளுடனும் சமஉறவைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. அடுத்த ஆண்டில் சிறிலங்கா தனது பொருளாதாரத்தை 6.5 சதவீதமாக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.

உயர் வெளிநாட்டுக் கடன் சுமையையும் சிறிலங்கா கொண்டுள்ளது. அதாவது 62 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை சிறிலங்கா கொண்டுள்ளது.

தொழிற்துறை, நிதிச் சேவைகள், சுற்றுலாத்துறை, கல்வித்துறை மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளையும் அபிவிருத்தி செய்வதை நாம் இலக்காகக் கொண்டுள்ளோம்.

இதேபோன்று எதிர்காலத்தில் கப்பற்துறை, கப்பல் கட்டுமானம் போன்ற பல்வேறு தொழிற்துறைகளையும் நாட்டில் முன்னேற்றுவதற்கான வாய்ப்புக்களை சிறிலங்கா எதிர்பார்க்கின்றது.

நிதிச் சேவைகளுக்கான ஒரு மையமாக சிறிலங்காவை மாற்றுவதே எமது நோக்காகும். டுபாய், சிங்கப்பூர் போன்ற நாடுகள் நோக்கி தமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குச் செல்வதற்குப் பதிலாக, எமது நாடான சிறிலங்காவை நோக்கி இவர்களை உள்ளீர்த்துக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.

சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமைகளாக வாழ்வாதார மேம்பாடு, பலப்படுத்தல் மற்றும் ஒற்றுமை போன்றன காணப்படுகிறது. அத்துடன் வெளிநாடுகளால் வழங்கப்படும் உதவிக்குப் பதிலாக வெளிநாடுகளிடமிருந்து நேரடி முதலீடுகளை சிறிலங்கா எதிர்பார்த்து நிற்கிறது.

இந்தியாவின் ஏற்றுமதி செயற்பாடுகளின் முக்கிய மையமாக விளங்கும் ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ என்ற இந்தியாவின் திட்டத்தை தானும் கடைப்பிடிக்க வேண்டும் என சிறிலங்கா விரும்புகிறது.

‘எங்களால் ஒன்றாகப் பணியாற்ற முடியும் என்கின்ற சூழலில் நாங்கள் ஏன் ஒருவருடன் ஒருவர் போட்டி போட விரும்புகிறோம்?

கொழும்புத் துறைமுகத்தைப் பயன்படுத்த முடியும் என்ற சூழலில் ஏன் இந்தியாவில் பத்து துறைமுகங்களைக் கட்டவேண்டும்? ஏன் போட்டிபோட்டு, செலவுகளை இரு மடங்காக்க வேண்டும்?’  எனவும் கருணாநாயக்க தெரதிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *