வரலாறுகாணா வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – விமான நிலையமும் மூடப்பட்டது
கடந்த இரண்டு நாட்களாக விடாமல் கொட்டி வரும் மழையால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள அதேவேளை, சென்னை நகரம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வரலாறு காணாத மழை கடந்த இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கடும் மழை இரவு பகலாகப் பெய்து கொண்டிருப்பதால், பேருந்து, தொடருந்து, விமான சேவைகள் பெரும்பாலும் முடங்கியுள்ளன.
தண்டவாளங்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் தென்மாவட்டங்களுக்கான தொடருந்து சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கும், வெளிமாநிலங்கள், நகரங்களுக்கான பிரதான தரைவழிப்பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய ஓடுபாதைகள், மற்றும் விமானத் தரிப்பிடங்களுக்குள்ளேயும், வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் நேற்று இரவு தற்காலிகமாக மூடப்பட்டது.
சென்னைக்கு வரும் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டன.
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலுள்ள ஏரிகள் குளங்கள் பலவும் உடைப்பெடுத்து வெள்ளம் பாய்வதால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வீதிகளில் வாகனங்கள் பயணம் செய்ய முடியாதளவுக்கு வெள்ளம் தேங்கியுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள் வெள்ளம் புகுந்ததாவும், அதன் பாதுகாப்புச் சுவர் இடிந்து போனதாலும் அங்கிருந்து ஆபத்தான வன விலங்குகள் தப்பித்து வெளியேறும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்றுத் தொடக்கம் மின்சார விநியோகம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சென்னையிலுள்ள மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் இருளில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாறு காணா இயற்கைப் பேரிடரினால், இலட்சக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களை இழந்தும், உணவின்றியும், தங்க இடமின்றியும், தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குரோம்பேட்டை மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்குள்ளேயும் வெள்ளம் புகுந்துள்ளதால், நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே, சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் நேற்றுக் காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை வரையும் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது.
சென்னையில் மட்டும் நேற்று சராசரியாக ஒரே நாளில் 256 மி.மீ மழை பதிவாகியுள்ளது.