மேலும்

அமெரிக்க நிலைப்பாடு சிறிலங்காவுக்குச் சாதகமாக மாறிவிட்டதா? – சமந்தா பவர் விளக்கம்

samantha powerஉண்மை மற்றும் நீதியை எதிர்பார்க்கும் சிறிலங்காவின் வடக்கிலுள்ள  மக்கள் மத்தியில் இருக்கும், நம்பிக்கையீனத்தை போக்கும் வலுவான பொறிமுறைகள், விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான மூன்றுநாள் பயணத்தை நேற்றிரவு முடித்துக் கொண்ட அவர், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்காவில் இன்னமும் இருக்கின்ற, தண்டனையில் இருந்து தப்பிக்கும் முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

சிறிலங்கா மூலோபாய வாய்ப்புகளை இழந்து விடக் கூடாது என்றால், இந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய வேண்டியிருக்கிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்த போது, செயற்பாடுகளின் வேகம் குறித்து விரக்தியை வெளியிட்டார்.

வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழுத்தம் கொடுக்க அமெரிக்காவின் உத்தரவாதத்தை கோரினார்.

விக்னேஸ்வரனும், ஏனையோரும், இராணுவமயநீக்கம், காணாமற்போகச்செய்யப்பட்டோர் குறித்து பொறுப்புக்கூறல், பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதில் தாமதம், மெதுவான பொருளாதார அபிவிருத்தி குறித்து கவலை வெளியிட்டனர்.

துரிதமான அபிவிருத்திக்கு அமெரிக்காவின் நேரடி முதலீட்டை உறுதிப்படுத்துமாறும் கோரப்பட்டது. வடக்கு மாகாண அபிவிருத்திக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அரசியல் தலைமை கூறியது.

அங்கு புறக்கணிப்பு மரபு உள்ளது. நம்பிக்கை இடைவெளிக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

கடந்த செப்ரெம்பரில் கொண்டு வரப்பட்ட ஜெனிவா தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கிய பின்னர், சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா தனது முன்னைய நிலையை மாற்றிக் கொண்டு மென்போக்கை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், இது அமெரிக்காவின் நிலைப்பாட்டு மாற்றம் பற்றியது அல்ல. குறுகிய காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் எந்தளவுக்கு மாற்றங்களை செய்தது என்பதன் பிரதிபலிப்பே அதுவாகும்.

எமது தொனி சாதகமாக மாறியுள்ளது. ஏனென்றால், இங்கு அதிகம் மாறியிருக்கிறது. எனினும், நாம் இன்னமும் விழிப்பாகவும் கவனமாகவுமே இருக்கிறோம். களநிலை உண்மைகளே எமது தொனியைத் தீர்மானிக்கின்றன.

இலங்கைத் தீவில் அமைதிக்கும், செழிப்புக்கும் வாய்ப்புகள் உள்ளன.

2010இல் இருந்ததை விட இப்போதுள்ள நிலை வித்தியாசமானது. அந்த நிலை திரும்பச் சாத்தியமில்லை.

இராணுவ இருப்பைக் காண முடியவில்லை. சிவிலியன் தலைமைத்துவத்தை நோக்கிய தெளிவான மாற்றம் இடம்பெற்றுள்ளது. சூசகமான இராணுவப் பிரசன்னம் இயல்புநிலையை மையமாகக் கொண்டிருக்கிறது.

இத்தகைய தெளிவான மாற்றங்கள் இருந்தாலும், சந்தேகம் ஏற்படுவது  இயற்கை. பாதிக்கப்பட்டவர்களுக்கு குற்றவியல் நீதி வழக்கத் தொடங்கும் வரை, இந்த ஆழமான அச்சநிலை தொடர்து கொண்டிருக்கும்.

சிறிலங்காவுடனான பிணைப்பை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. முன்னைய நிர்வாகத்தில் மோசமான குறைபாடுகள் இருந்தன. அவை மாற்றப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

நாம் இணைந்து செயற்படுவதற்கு பல அனைத்துலக பாதுகாப்புக் கரிசனைகள் உள்ளன.

ஆனால் அவையெல்லாவற்றுக்கும் முன்பாக, எவ்வாறு இராணுவமயநீக்கம் இடம்பெறுகிறது, பொறுப்புக்கூறல் பொறிமுறை செயற்படுகிறது என்று நாம் பார்க்க வேண்டியுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *