மேலும்

சமந்தா பவரும் சிறிலங்கா தொடர்பான அமெரிக்க கொள்கையும்

Samantha_Powerசிறிசேன அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் நல்லுறவைப் பேணவிரும்பினால், போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறுமாறும்,  குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்காவினால் அழுத்தம் கொடுக்க முடியாது போகலாம்.

இவ்வாறு The Diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சமந்தா பவர், அண்மையில் மெக்சிக்கோவில் இடம்பெற்ற திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பின் பூகோள உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்தார். இந்த உரையின் போது ‘உலக நாடுகளின் அரசாங்கங்கள் பொறுப்புக் கூறல் நிறுவகங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்கிக் கொள்வதற்காகத் தமது நாட்டிலுள்ள சிவில் சமூக அமைப்புக்களுடன்  இணைந்து பணியாற்ற வேண்டும்’ என சமந்தா பவர் குறிப்பிட்டிருந்தார்.

2011ல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பானது தனது உறுப்பு நாடுகளுக்கு ஆதரவை வழங்குவதை நோக்காகக் கொண்டுள்ளது.

கடந்த மாதம் இடம்பெற்ற திறந்த அரசாங்கங்களின் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் சமந்தா பவர் உரை நிகழ்த்தும் போது, இவர் சிறிலங்காவில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தில் 80,000-100,000 பேர் வரை காவுகொள்ளப்பட்டதாகவும்  இந்திய மாக்கடலில் அமைந்துள்ள சிறிய தீவான சிறிலங்காவானது போரின் தாக்கத்திலிருந்து தற்போது மீண்டெழுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

‘சிறிலங்கா பெற்றுக்கொண்டுள்ள அனுபவமானது பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அதாவது தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளமை மற்றும் ஊழல் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள பாரிய விளைவுகளை சிறிலங்கா பெற்றுக் கொண்ட அனுபவம் வெளிப்படுத்தி நிற்கிறது.

ஒரு உறுதியுள்ள மற்றும் நிலையான சிவில் சமூகமானது பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளல் ஆகிய இரண்டுக்கும் இடையில் எவ்வாறு தன்னை நகர்த்திக் கொள்ள முடியும் என்பதை சிறிலங்கா பெற்றுக் கொண்ட அனுபவம் காண்பிக்கிறது. சிறிலங்காவின் தலைவர்கள் குறுகிய காலத்தில் தாம் சேவையாற்றும் மக்களுக்காக இதயசுத்தியுடன் தம்மை அர்ப்பணிக்க விரும்புவதால் இவர்கள் எவற்றை அடைந்துள்ளனர் என்பதை சிறிலங்கா எமக்கும் புகட்டுகிறது’ என சமந்தா பவர் தனது உரையின் இறுதியில் குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அனைத்து சவால்களுக்கும் முகங்கொடுப்பதாக சமந்தா பவர் தெரிவித்ததன் மூலம் இவர் சிறிலங்காவின் உண்மை நிலவரத்திற்கு சான்று பகர்கிறார்.

கடந்த ஜனவரியில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், நீதிச்சேவைகளில் மாற்றம் ஏற்படுத்துதல் உட்பட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

சமந்தா பவர் ஊடகவியலாளராகச் செயற்பட்ட போது இவர் பல்வேறு உலக நாடுகளின் மிகவும் சிக்கலான இடங்களுக்கு நேரடியாகச் சென்று செய்திகளைச் சேகரித்துள்ளார். இவர் சில புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

இதில் ‘நரகத்திலிருந்து ஒரு பிரச்சினை : அமெரிக்காவும் படுகொலையின் வயதும்’ என்கின்ற நூல் மிகவும் பிரபலமானது. இந்த நூலில், அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடு தொடர்பாக விமர்சித்துள்ளார்.

அத்துடன் உலக நாடுகளின் பல்வேறு இடங்களிலும் மிகவும் பயங்கரமான படுகொலைகள் இடம்பெற்ற போது அமெரிக்கா அதனைத் தடுப்பதற்கு தவறியுள்ளதாகவும் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்களை அமெரிக்கா கவனிக்கத் தவறியுள்ளதாகவும் பவர் தனது நூலில் விமர்சித்துள்ளார்.

சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தமானது 2009ல் நிறைவுக்கு வந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் எவ்வளவு மக்கள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பில் பல்வேறு அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தனித் தமிழ்நாடு கோரிப் போராடிய தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் பல ஆண்டுகள் தொடரப்பட்ட யுத்தத்தில் மிகவும் அதிகளவிலான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனாலும் இந்த யுத்தத்தின் போது பொதுமக்களின் இழப்பு மிகவும் அதிகமாகக் காணப்பட்டதாக தற்போது சந்தேகங்கள் வலுத்துள்ளன.

அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா விசாரணை அறிக்கையில் சிறிலங்காவில் இடம்பெற்ற திட்டமிட்ட படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் சித்திரவதைகள் போன்ற மிகப் பயங்கரமான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா மீதான அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாடானது மகிந்த ராஜபக்சவின் தோல்வியுடன் முன்னேற்றம் கண்டுள்ளது. சமந்தா பவரின் சாதகமான எண்ணமானது, ஏற்கனவே சிறிலங்கா நோக்கி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தைச் சேர்ந்த பல மூத்த அதிகாரிகள் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த மே மாதத்தில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான தனது வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணத்தை மேற்கொண்டதுடன் கொழும்பில் இவர் உரை ஒன்றையும் நிகழ்த்தியிருந்தார்.

சிறிசேன பதவிக்கு வந்து பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், சிறிலங்கா மீதான அமெரிக்காவின் ஈடுபாட்டை மீள்அளவீடு செய்வதற்கான தகுந்த தருணமாக இது காணப்படுகிறது.

சிறிசேன அரசாங்கத்துடன் அமெரிக்கா தொடர்ந்தும் நல்லுறவைப் பேணவிரும்பினால், போரின் போது இடம்பெற்ற பல்வேறு மீறல்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூறுமாறும்,  குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அமெரிக்காவினால் அழுத்தம் கொடுக்க முடியாது போகலாம்.

ஏனெனில் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சிறிலங்காவுடனான உறவை அமெரிக்கா சுமூகமாகக் கட்டியெழுப்புவதில் இடையூறுகள் ஏற்படுவதாக அமெரிக்கா உணரலாம்.

சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வளவு தூரம் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புக்கூறலுடனும் அல்லது ஆழமான சீர்திருத்தங்களுடனும் நடந்துகொள்ளவுள்ளது என்பது தெளிவற்றதாகவே உள்ளது. இதுவே தற்போதைய நடைமுறை உண்மையாகும்.

இதுதவிர, ராஜபக்சவின் ஆட்சியின் இறுதி நாட்களுடன் ஒப்பீடு செய்யும் போது தற்போது சிறிலங்காவின் ஆட்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனக் கூறலாம். ஆனால் முழுமையான மாற்றம் ஏற்படவில்லை.

சரியான பாதையில் செல்வதற்கு சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் ஒரு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ராஜபக்சவைப் போன்று சிறிசேன அதிகாரத்துவ ஆட்சியை நடத்தவில்லை. ஆனாலும் சிறிலங்காவில் இன்னமும் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிறிலங்காவின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் பெரியளவில் இன்னமும் நிறைவேற்றப்படாது காணப்படுகின்றது. குறிப்பாக சிறிலங்காவின் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகள் பல இன்னமும் நிலுவையில் உள்ளன. ராஜபக்ச ஆட்சியிலிருந்த போது ஊழல் மிகவும் பயங்கரமான பிரச்சினையாகக் காணப்பட்டது.

இதுவே கடந்த அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தன. ஆனாலும் இத்தேர்தல் பரப்புரைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவது தொடர்பாக மிகச் சொற்பளவிலான வாக்குறுதிகளே முன்வைக்கப்பட்டிருந்தன என்பது ஒரு கெட்ட வாய்ப்பாகும்.

இடது மற்றும் வலதுசாரிகள் அமெரிக்காவின் வெளியுறவுக் கோட்பாட்டை விமர்சித்து வருகின்ற போதிலும், சிறிலங்காவில் அண்மையில் இடம்பெறும் ஆட்சி சீர்திருத்தங்களை ஒபாமா நிர்வாகமானது அமெரிக்காவின் ஜனநாயக ஊக்குவிப்பு முயற்சிகளுக்கான வெற்றிப் பத்தியில் குறிப்பிட விரும்புகின்றது.

இல்லாவிட்டால், சிறிலங்காவின் நகர்வுகளை நேர்மையானதாகவும், துல்லியமான மதிப்பீடுகளாகவும் அமெரிக்க அரசாங்கம் மாற்றுவது மிகவும் முக்கியமானதாகும்.

சிறிசேனவின் இறுதித் தீர்வு என்ன என்பது எவருக்கும் தெரியாது என்பதே உண்மையாகும். இதனை நாங்கள் சிறிதுகாலத்திற்கு அறியமாட்டோம்.

அமெரிக்காவின் நம்பகத்தன்மையை சிறிலங்காவானது பலவீனப்படுத்துமாயின் இதன்மூலம் சிக்கலான, போருக்குப் பின்னான நாடுகளில் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேலும் சிக்கலடைவதற்கான தருணம் உருவாகலாம் எனக் கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *