மேலும்

நேற்று பிணை வழங்கப்பட்ட ஒருவர் மட்டுமே விடுவிப்பு – எஞ்சியோர் சிறைக்குள்

gavelபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் நேற்று பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டாவது கட்டமாக பிணையில் விடுவிக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட 30 பேரில், எட்டுப் பேர் மாத்திரம் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இவர்களைப் பிணையில் விடுவிக்க சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, எட்டுப் பேரையும், 1 மில்லியன் ரூபா சரீரப் பிணை மற்றும், நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.

தம்பையா கனகலிங்கம் பவானந்தன், வீரசிங்கம் லோகநாதன், மாணிக்கவேல் சாந்தலயன், ஸ்ரீகந்தராஜா ராஜா, குமாரசிங்கம் குலசங்கர், கந்தசாமி கருணாநிதி, கந்தசாமி குகதாசன், மகேந்திரன் புவிதரன் ஆகியோரே  நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒருவரது பிணை நிபந்தனைகள் உறவினர்களால் நிறைவேற்றப்பட்டதையடுத்து, நேற்றே விடுதலை செய்யப்பட்டார். எஞ்சியோர் மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதேவேளை, கடந்த 11ஆம் நாள், பிணை அனுமதி வழங்கப்பட்ட 31 அரசியல் கைதிகளில், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த மேலும் இரண்டு பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *