மேலும்

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீதான தாக்குதலை ஒப்புக்கொள்கிறார் சரத் பொன்சேகா

sarath-fonsekaபோர் தவிர்ப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த, புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினரால் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது உண்மையே என்று ஒப்புக் கொண்டுள்ளார் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ஐபிசி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த போது, புதுக்குடியிருப்பு மருத்துவமனை சிறிலங்கா படையினரின் பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, “புதுக்குடியிருப்பு மருத்துவனை கனரக ஆயுத தாக்குதலுக்கு இலக்கானது. ஆனால் அது தவறுதலாக இடம்பெற்றது.” என்று கூறியிருக்கிறார்.

அதேவேளை, போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதற்குப் பொறுப்பேற்கத் தாம் தயாராக இருப்பதாகவுவும் சரத் பொன்சேகா இந்த செவ்வியில் கூறியுள்ளார்.

இசைப்பிரியாவின் படுகொலையை உரு வருந்தத்தக்க செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடேசன், புலித்தேவன் ஆகியோரின் மரணங்கள் தொடர்பாக நிச்சயமாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற ஐ.நா அறிக்கையை பொய்யானது என்று நிராகரித்த சரத் பொன்சேகா, நவநீதம்பிள்ளையின் புள்ளிவிபரங்கள், ஆதாரமற்றது என்றும் குறிப்பிட்டார்.

போரின் போது மக்கள் வாழ்விடங்களில் குண்டுகள் வீசப்பட்டதைக் காட்டும் செய்மதிப் படங்களை ஐ.நா  மற்றும் மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்ட அவர், தாக்குதலின் போது தரையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உயர்தொழில்நுட்ப கருவிகளை சிறிலங்கா இராணுவம் பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

அனைத்துலக மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாகவே தாம் போரை நடத்தியதாகவும், சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவம் இரகசிய முகாம்களை வைத்திருந்தது என்பதை ஒப்புக் கொண்ட அவர், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்த பின்னர், கருணாவும் கூட அத்தகையதொரு இரகசிய முகாமில் தான் மறைந்திருந்தார் என்றும் தெரிவித்தார்.

இரகசிய முகாம்கள் இராணுவப் புலனாய்வில் முக்கியமானதொரு அங்கம் என்று, குறிப்பிட்ட அவர், ஆனால் மகிந்த ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும், துணை ஆயுதக்குழுக்களை வைத்திருந்தனர் என்றும் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *