மேலும்

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து திங்களன்று முடிவு – சிறிலங்கா அதிபரின் மற்றொரு வாக்குறுதி

CM-msதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் மாகாண அமைச்சர்களுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண  முதலமைச்சருடன், அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், ரி.குருகுலராஜா, பி.சத்தியலிங்கம், பி.டெனீஸ்வரன் ஆகியோரும், சிறிலங்கா அதிபருடன், அவரது ஆலோசகர் கருணாரட்ணவும் பங்கேற்றிருந்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்படும் தடைகள் என்பவற்றை விளக்கும் விரிவான அறிக்கை ஒன்றை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சிறிலங்கா அதிபரிடம் கையளித்தார்.

இதிலுள்ள விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்த முதலமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பாக, சிறிலங்கா அதிபரின்  கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

CM-ms

இதன்போது கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், சிறிலங்காவில் இரண்டு தடவைகள் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி.யினருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சிறிலங்கா அதிபர் முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முதலமைச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அனைத்துக் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இருந்த போதிலும் இந்த விடயத்தில் அரசியல் ரீதியாக சில பிரச்சினைகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். எனினும் இதனை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த முதலமைச்சர், சிறிலங்கா அதிபர்  தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கைதிகளின் விடுதலைக்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழ்க் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதால் பாதிக்கப்படுபவர்கள் அவர்கள் மட்டுமல்ல. கைதிகளுடைய குடும்பத்தினரும் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். தினசரி என்னைச் சந்திக்கும் கைதிகளின் உறவினர்கள், இது தொடர்பில் எழுப்பும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது என்று முதலமைச்சர் சிறிலங்கா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து கைதிகளின் முழுமையான கோவைகளையும் தனக்கு அனுப்பி வைக்குமாறு சட்டமா அதிபரைப் பணித்த சிறிலங்கா அதிபர் , எதிர்வரும் திங்கட்கிழமை இந்த விவகாரத்துக்கு தான் பதிலளிப்பதாகவும் முதலமைச்சரிடம் உறுதியளித்ததார்.

அத்துடன் வடமாகாண சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மீள்குடியேற்றத்துக்காக எனக்கூறி காடழிக்கப்படுதல் போன்ற விடயங்கள் முதலமைச்சரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இவை தொடர்பில் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுவதாக சிறிலங்கா அதிபர்  உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில், மகிந்த ராஜபக்ச அணியினரின் நெருக்குதல்களுக்கு சிறிலங்கா அதிபர் அஞ்சுவதை இந்தப் பேச்சுக்களின் போது உணர்ந்து கொள்ள முடிந்ததாக, வடக்கு மாகாண அமைச்சர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *