மேலும்

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர் தமிழ் அரசியல் கைதிகள்

Prisonerஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, வாக்குறுதி வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள், உரிய நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் எடுக்காத நிலையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அனுராதபுர சிறைச்சாலையில் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டிருந்ததால், இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பிக்கவில்லை. அங்குள்ள அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர்.

அதேவேளை, நாட்டின் ஏனைய 13 சிறைச்சாலைகளிலும் உள்ள அரசியல் கைதிகள் நேற்றே தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.

தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்குமாறு கோரி, 217 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த மாதம் 12ஆம் நாள்,  சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அதனையடுத்து, நவம்பர் 7ஆம் நாளுக்கு முன்னதாக இந்த விவகாரத்துக்கு நிரந்தர தீர்வு காண்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இதனையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியிருந்தனர்.

எனினும், இதுவரையில் எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் விடுவிக்கப்படவில்லை. முதற்கட்டமாக இன்று 32 பேரையும், அடுத்து, 20ஆம் நாளுக்குள் 30 பேரையும் பிணையில் விடுவிக்கவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்தது.

ஏனையவர்கள் தொடர்பாக அமைச்ரவை உப குழு ஆரய்ந்து முடிவெடுக்கும் என்றும், 48 தண்டனைக் கைதிகள் தொடர்பாக சிறிலங்கா அதிபரே முடிவெடுக்க வேண்டும் என்றும், சிறிலங்கா பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த திட்டத்தை, நிராகரித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமக்கு பொதுமன்னிப்பு அளித்து அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

அரசாங்கத்தரப்பின் இம்முடிவை நிராகரிப்பதாக தமது உறவினர்கள் ஊடாக நேற்று முன்தினம் அறிவித்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் இடைநிறுத்தியிருந்த தமது போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே அவர்கள் தமது போராட்டத்தை நேற்று ஆரம்பித்துள்ளனர்.

“தம் அனைவரையும் பொதுமன்னிப்பளித்தோ அல்லது பொதுவான பொறிமுறையூடாகவோ, விடுதலை செய்யுங்கள், சட்ட அணுகுமுறை என்ற பேரில் எம்மை பகுதிபகுதியாக பிணையளித்து விடுதலை செய்வதாக கூறி ஏமாற்றாதீர்கள்.

நல்லிணக்கம் தொடர்பாக பேசும் நல்லாட்சி அரசாங்கம் ஏன் எம்மை நிராகரிக்கின்றது, பொதுமன்னிப்பளிப்பு என்பது இந்த நாட்டில் புதிய விடயமல்ல,

தேசிய பாதுகாப்பு என போலிக்காரணம் காட்டி காலங்கடத்தாதீர்கள், 12ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலிகள் சமூத்துடன் இணைந்திருக்கையில் எமது விடுதலை தொடர்பில் ஏன் கருத்திலெடுக்க முடியாதுள்ளது?

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நாம் எமது குடும்பத்துடன் எஞ்சிய காலத்தை கழிக்கவே விரும்புகின்றோம், எமது மனிதாபிமானமான கோரிக்கையை புரிந்து கொள்ளுங்கள்” என தமது உறவினர்கள் ஊடாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறைச்சாலைகளுக்கு வந்து தமது நிலைமைகளை நேரடியாக பார்வையிட வேண்டும் என உறவினர்கள் ஊடாக கோரியுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இம்முறை யாருடைய வாக்குறுதி மீதும் தாம் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை  என்றும், தமது விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியான நிலைப்பாட்டை அறிவித்து  உத்தரவாதமளிக்கும் வரையில் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *