மேலும்

அமைதிக்கான உறுதிப்பாட்டை சிறிலங்கா எப்படி நிரூபிக்க முடியும்? – அனைத்துலக ஊடகம்

உண்மையில் சிறிலங்கா அரசாங்கமானது மீளிணக்கம் தொடர்பாக தீவிர கரிசனை காண்பிக்க வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் நிலத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரைப் பின்வாங்கச் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் சுதந்திரமானதொரு வாழ்வை வாழ்வதற்கான உதவியை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு foreign policy ஊடகத்தில், TAYLOR DIBBERT எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ஒபாமா நிர்வாகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அண்மைக்காலமாக பிறிதொரு ‘ஜனநாயக வெற்றிக் கதையை’ பரப்புரை செய்துள்ளனர், இம்முறை நாங்கள் பேசுவது, சிறிலங்கா என்ற சிறிய தீவு தொடர்பாகவேயாகும். சிறிய, மூலோபாய முக்கியத்துவம் மிக்க சிறிலங்காத் தீவானது நீண்ட கால யுத்தப் பாதிப்பிலிருந்து தற்போது மீண்டெழுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின் பிரகாரம் இந்த யுத்தத்தில் 100,000 வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இரண்டு தடவைகள் தொடர்ச்சியாக நாட்டின் அதிபராகப் பதவி வகித்த மகிந்த ராஜபக்ச கடந்த ஜனவரியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலிலும் ஆகஸ்ட்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வியுற்றார்.

இவரது ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவில் அதிகாரத்துவ ஆட்சி நிலவியது. இந்நிலையில் சிறிலங்காவின் ஆட்சி மாறியுள்ள நிலையில், நிலையான மறுமலர்ச்சி, மீளிணக்கம், இதயசுத்தியுடன் கூடிய பொறுப்புக்கூறல் போன்றன தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கும் மேலாக, இந்த ஆரம்பமானது சுமூகமாக நிறைவடைவதற்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக நகர்வுகளை எடுக்க முடியும்.

சிறிலங்கா தனது நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்கு அனைத்துலக சமூகம் தனது உதவியை வழங்குவதற்கு முயற்சிக்கும் அதேவேளையில், சர்ச்சைக்குரிய ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பாக அண்மையில் சிறிலங்காவின் நாடாளுமன்றில் விவாதம் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக இடம்பெற்ற யுத்தத்தின் முக்கிய பங்குதாரர்களான சிறிலங்கா அரசாங்கப் படைகளும் தமிழ்ப் புலிகளும் எவ்வாறான போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என்பது முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி, மனித உரிமைகள் மற்றும் மீளிணக்கப்பாடு போன்றன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தனிநாடாக்க வேண்டும் எனக் கோரியே தமிழ்ப் புலிகள் யுத்தத்தில் ஈடுபட்டனர். சிறிலங்காவின் 20 மில்லியன் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினர் சிங்களவர்களாவர்.

பெரும்பான்மை சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிலங்கா அரசால் திட்டமிட்ட ரீதியில் கல்வி, வேலைவாய்ப்பு, நில வளங்கள் மற்றும் மொழி விவகாரங்கள் போன்றவற்றில் சிறுபான்மைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாகவே 1970களில் தமிழ் ஆயுதக்குழுக்கள் தோற்றம் பெற்றன.

ஆரம்பத்தில் பல்வேறு தமிழ்க் குழுக்கள் தோற்றம் பெற்ற போதிலும், 1983 தொடக்கம் 2009 வரை சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்ப் புலிகள் மட்டுமே ஆயுதப்போரில் ஈடுபட்டனர்.  மிக அதிகளவிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்தது.

போரின் இறுதியில், போர்க் குற்றங்கள் உள்ளடங்கலாக அனைத்துலக மனிதாபிமானச் சட்டம் மீறப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்ப் புலிகளும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டனர்.

சிறிலங்கா வாழ் மக்களுக்குத் தேவையான பரந்தளவிலான நிலைமாற்று நீதி முறைமையை நோக்கி சிறிலங்கா நகரும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  பொறுப்புக் கூறல் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் எதிர்பார்க்க முடியும் என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகமானது தனது நாட்டின் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் பங்கெடுப்பதற்கு தனக்கு சிறிது காலஅவகாசம் தேவை என சிறிலங்கா அரசாங்கம் செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளது. எனினும், மனிதஉரிமைகள், மீளிணக்கப்பாடு, மற்றும் போர்க் காயங்களை ஆற்றுப்படுத்துதல் போன்றவற்ற விடயங்களில் தான் மிகவும் தீவிரமாகச் செயற்படுகின்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமானது உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.

சிறிலங்காவில் இராணுவ மயமாக்கல் தொடர்ந்தும் காணப்படுகின்றன. ஆறு ஆண்டுகளிற்கு முன்னர் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த போதிலும், சிறிலங்காவில் தற்போதும் இராணுவ மயமாக்கல் நிலவுகின்றது.

குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் பெருந்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் 100,000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிங்கள சமூகத்தைச் சேர்ந்த சிறிலங்கா இராணுவத்தினர் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பிரதேசத்தில் அதிகளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதால், தமது சாதாரண வாழ்வு பாதிக்கப்படுவதாகவும் பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் தமிழ் மக்கள் உணர்கின்றனர்.

மக்களின் நாளாந்த வாழ்வு பாதிக்கப்படும் அதேவேளையில், சிறிலங்கா இராணுவத்தினர் வர்த்தக செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால் தமிழ் மக்கள் வேலை வாய்ப்பை பெறமுடியாது தவிக்கின்றனர்.

சிறிலங்கா அரசாங்கமானது இராணுவத்தினரை பின்வாங்கும் விடயத்தில் ஆர்வத்துடன் செயற்படாததன் காரணமாக இந்தச் சூழல் மேலும் மோசமடைந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

உண்மையில் சிறிலங்கா அரசாங்கமானது மீளிணக்கம் தொடர்பாக தீவிர கரிசனை காண்பிக்க வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களின் நிலத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரைப் பின்வாங்கச் செய்வதன் மூலம் தமிழ் மக்கள் சுதந்திரமானதொரு வாழ்வை வாழ்வதற்கான உதவியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான நடவடிக்கை மூலம் மட்டுமே நாட்டில் மீளிணக்கப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் உருவாகும்.

ஆகவே இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இதயசுத்தியுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக எத்தனை இராணுவத்தினர் எங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக தெளிவான தரவுகளை சிறிலங்கா அரசாங்கம் வெளியிட வேண்டும்.

தனியார் நிலங்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் உட்பட்ட நிலப் பிரச்சினைகள் இராணுவ மயமாக்கலுடன் தொடர்புபட்டதாகும். வடக்கில், குறைந்தது பல பத்தாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலை தென்படுகிறது.

தேசிய பாதுகாப்பு அல்லது சட்டப் பிரச்சினை போன்ற நில அபகரிப்பை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கப்படும் காரணங்களாகக் காணப்படுகின்றன. வடக்கிலுள்ள 5000 ஏக்கர் நிலங்களை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் கையகப்படுத்தி வைத்திருக்கின்றது.

இவ்வாண்டு மிகக் குறைந்த ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், இன்னமும் பல ஏக்கர் நிலங்கள் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதற்கும் அப்பால், பல நூறு தமிழ் அரசியற் கைதிகள் சிறிலங்கா அரசாங்கத்தால் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். போர்க் காலத்தில் தமிழ் மக்கள் பலர் பலவந்தமாகக் கடத்தப்பட்டும் தடுத்தும் வைக்கப்பட்டனர்.

தற்போதும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகளும் மேற்கொள்ளப்படுவதானது நீண்ட காலமாக நிலவி வரும் ஒரு பிரச்சினையாகும்.

சிறிலங்காவில் அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் அரச பாதுகாப்புப் படைகள் பாரியளவில் கைதுகள், தேடுதல்கள், மற்றும் மக்களைத் தடுத்து வைத்தல் போன்றவற்றிற்கான அதிகாரத்தைப் பெற்றிருந்தனர். எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படாது சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் நபர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 18 மாதகாலம் தடுத்து வைக்கப்பட முடியும்.

சிறிலங்கா அரசாங்கமானது தொடர்ந்தும் தமிழ் அரசியற் கைதிகளைத் தடுத்து வைத்துள்ளதானது தமிழ் சமூகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் இவர்கள் மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கான காரணியாகவும் காணப்படுகின்றன.

அண்மையில் சிறிலங்காவின் சிறைகளில் வாடும் கைதிகள் தம்மை விடுவிக்கக் கோரி நாடு தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நவம்பர் 07இற்குள் இதற்குத் தீர்வு காண்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி வழங்கிய நிலையில் இவர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் இற்றைவரை இது தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இராணுவத்தை வெளியேற்றுதல், மக்களின் காணிகளை அவர்களிடம் திருப்பிக்கொடுத்தல், அரசியற் கைதிகளை விடுவித்தல் அல்லது அவர்களுக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றுக்குக் கொண்டு செல்லல் போன்றன போருடன் தொடர்புபட்ட அடிப்படைப் பிரச்சினைகளாகும்.

இவை தமிழ் சமூகத்தின் மிக முக்கிய பிரச்சினைகளாகும். இவை தொடர்பில் காத்திரமான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும்.

இவ்வாண்டு இடம்பெற்ற இரண்டு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல்கள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாரியதொரு வாய்ப்பை வழங்கியுள்ளன.

பொறுப்புக்கூறல் தொடக்கம் இழப்பீடு வழங்குதல் வரையான அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்று நீதி முறைமை பின்பற்றப்பட வேண்டும். இந்த முறைமையானது நாட்டில் வாழும் அனைத்து இன மற்றும் மத சமூகங்களின் நலன்களை முன்னுரிமைப்படுத்துவதாக உருவாக்கப்பட வேண்டும். இல்லையேல், இதயசுத்தியுடன் கூடிய சமாதானத்தை நாட்டில் உருவாக்க முடியாது.

கடந்த காலம் தொடர்பாக சிறிலங்கா எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என்பதை மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆகவே இவை தொடர்பில் தீர்வுகள் எட்டப்படும் போது சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை கவனிக்கத் தவறக்கூடாது.

போருக்குப் பின்னான சிறிலங்காவில், கொள்கைப் பற்றுள்ள, வலுவான தலைமை ஒன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கான காலம் ஏற்கனவே தாமதமாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *