மேலும்

மர்மப்பொருள் விழும் நாளில் விமானங்கள் பறக்க, மீன்பிடிக்கத் தடை?

சிறிலங்கா அருகே விழப்போகும் மர்மப் பொருள்-WT1190F

சிறிலங்கா அருகே விழப்போகும் மர்மப் பொருள்-WT1190F

விண்வெளியில் இருந்து WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ஆம் நாள், வெள்ளிக்கிழமை விழும் என்று எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் தென்பகுதிக் கடலில், மீன்பிடிக்கவும், விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று கருதப்படும், 2 மீற்றர் நீளமான – WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், வரும் 13ஆம் நாள் சிறிலங்காவுக்குத் தெற்கில், 100 கி.மீ தொலைவில், கடலில் விழும் என்று விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளர்.

வரும் 13ஆம் நாள் வெள்ளிக்கிழமை, உள்ளூர் நேரப்படி, காலை 11.48 மணியளவில், கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மர்மப் பொருளினால் சிறிலங்காவுக்கு ஆபத்து ஏற்படாது என்றும், அது வளிமண்டலத்துக்குள் நுழையும் போது பெரும்பாலும் நடுவானிலேயே எரிந்து போய் விடும் சாத்தியம் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் துறைத் தலைவர் கலாநிதி சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

WT1190F

அதேவேளை, சிறிய துண்டுகள் நிலத்தில் விழுவதற்கான சாத்தியங்களை நிராகரிக்க முடியாது என்று ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின், மூத்த ஆய்வாளரான விஞ்ஞானி சரோஜ் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

எல்லாப் பகுதிகளும் எரிந்து போகத் தவறினால், சிறிய துண்டுகள் நிலத்தை வந்தடைய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ஆர்தர் சி கிளார்க் நிலையம் மற்றும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் தகவல்களின் அடிப்படையில், வரும் வெள்ளிக்கிழமை தெற்கு கடல் பகுதியில் விமான பறப்புக்குத் தடைவிதிப்பது குறித்து அவதானித்து வருவதாக, விமான சேவைகள் கட்டுப்பாட்டாளர் கிரிசாந்தி திசேரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாத்தறை, காலி, அம்பாந்தோட்டை மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளை, அந்தப் பகுதிகளில் மீன்பிடித் தடையை நடைமுறைப்படுத்தும் படி அறிவுறுத்தியுள்ளதாக, கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் பெர்னான்டோ கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *