மேலும்

இந்துமாக் கடலில் இராணுவக் கட்டுப்பாட்டை விரிவாக்க முனையும் சீனா

chinese-submarineஅமெரிக்காவின் ‘பக்ஸ் அமெரிக்கானா’வை சீனா பிரதியெடுத்து செயற்படுத்தி வரும் நிலையில் வல்லுனர்கள் சீனாவின் இத்திட்டத்தை ‘பக்ஸ் சினிசியா’ என அழைக்கிறார்கள். இதனைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடல் சார் பாரம்பரிய வழக்காறுகளைக் கைவிட வேண்டும்.

இவ்வாறு Epoch Times ஊடகத்தில் Joshua Philipp எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்கும் பணிகளை சீனா கிட்டத்தட்ட பூரணப்படுத்தியுள்ள நிலையில், இது இந்திய மாக்கடலை நோக்கி தனது அடுத்த கட்டமாக  நகர்வதற்கான சமிக்கைகள் தென்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல் தரித்து நின்ற வேளையில் இந்தியா தனது எல்லையோரப் பாதுகாப்புத் தொடர்பாக அச்சம் கொண்டது. இதேபோன்று, ‘இந்திய மாக்கடலில் சீனக் கடற்படையின் செயற்பாடுகள் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும்’ என இதற்கு இரண்டு மாதங்களின் பின்னர்- யூலை 01ல் -சீனப் பாதுகாப்பு பேச்சாளர் மூத்த கேணல் ஜாங்  யுஜின் தெரிவித்தார்.

சீனாவின் இந்த அறிவிப்பும் இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கை நிலைப்படுத்துவதற்கான பணிகளை ஆற்றத் தொடங்கியுள்ளது என்பதற்கான அறிகுறிகளாகக் காணப்படுகின்றன.

இதே நாளன்று சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் வித்தியாசமான அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தார். இவர் இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். அதாவது இந்தியாவானது இந்திய மாக்கடலைத் தனது கொல்லைப்புறமாகக் கருதமுடியாது என்பதே அந்த அறிவித்தலாகும்.

தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்குவதில் தனது முழு வளங்களையும் பயன்படுத்திய சீனா, தற்போது இந்திய மாக்கடலை நோக்கி பாரியதொரு ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளதானது, சீனா தனது பூகோள இராணுவ மற்றும் பொருளாதார அதிகாரத்துவத்தைப் பெற்றுக்கொள்வதற்கான தாகத்தைத் தணிப்பதற்கான ஒரு திறந்த நகர்வாகக் காணப்படுவதாக, அனைத்துலக மதிப்பீடு மற்றும் மூலோபாய மையத்தின் மூத்த அதிகாரி றிச்சார்ட் பிசர் தெரிவித்துள்ளார்.

சீனக் கம்யூனிசக் கட்சியானது தனது சொந்த அதிகாரத்தின் கீழ் புதிய அனைத்துலக வர்த்தக வலைப்பின்னல்களை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது. இதன் ஒரு பகுதியாகவே சீனாவின் புதிய பட்டுப் பாதை அமைந்துள்ளது.

இப்பட்டுப் பாதைத் திட்டமானது வீதிகள், தொடருந்துப் பாதைகள் மற்றும் எண்ணெய்க் குழாய்கள் போன்றவற்றின் மூலம் சீனாவைப் பாகிஸ்தானுடன் இணைப்பதாகும். இதன் மற்றுமொரு திட்டமாக ‘கடல் வழிப் பட்டுப் பாதை’ அமைந்துள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக அனைத்து பாரிய கடல்வழி வர்த்தக மையங்களை சீனா தனது செல்வாக்கிற்குள் கொண்டு வருதல் அல்லது  அவற்றைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான ஒரு முயற்சியாகும்.

தனது செல்வாக்கைப் பரப்ப விரும்பும் நாடுகளுக்கு அருகில் சீனாவானது தனது நிலையைப் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. குறிப்பாக Pax Americana  என்ற அமெரிக்க இராணுவ சக்தியை நிலைப்படுத்துவதற்கான திட்டத்தை தற்போது சீனா பிரதியெடுக்கும் பணியை முன்னெடுக்கிறது.

அமெரிக்காவின் இத்திட்டமானது பூகோள சமாதான நடவடிக்கையைப் பாதுகாப்பதுடன் சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளையும் பாதுகாக்கிறது. அனைத்து மூலோபாய கடல்வழி தொடர்பாடல்களுக்குத் தேவையான இராணுவ உடைமைகளைப் பயன்படுத்துவதும் அமெரிக்கத் திட்டத்தின் மையமாகும்.

அமெரிக்காவின் ‘பக்ஸ் அமெரிக்கானா’வை சீனா பிரதியெடுத்து செயற்படுத்தி வரும் நிலையில் வல்லுனர்கள் சீனாவின் இத்திட்டத்தை ‘பக்ஸ் சினிசியா’ என அழைக்கிறார்கள். இதனைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடல் சார் பாரம்பரிய வழக்காறுகளைக் கைவிட வேண்டும் என்பதை சீன கம்யூனிசக் கட்சி வலியுறுத்துகிறது.

இதற்கான திட்டங்களை சீன அரசாங்கம் தீட்டிவருகிறது. அத்துடன் பாரம்பரிய முறைகளைக் கைவிட்டு, அனைத்து மூலோபாய முக்கியத்துவம் மிக்க தொடர்பாடல் மையங்களைப் பாதுகாப்பதற்கான பணிகளையும் இத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு உள்வாங்கப்படும் நாடுகளின் நலன்களிலும் அக்கறை செலுத்துவதற்கான புதியதொரு செயற்பாட்டை சீனா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

இத்திட்டம் தொடர்பாக சீன இராணுவ மூலோபாயத்தால் மே 26ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறிருப்பினும், அமெரிக்காவின் முறைமைக்கு எதிராக சீனாவால் முன்னெடுக்கப்படும் புதிய திட்டத்தில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தல் போன்றன அடிப்படையாக உள்ளன.

தென்சீனக் கடலில் சீனா தனது இராணுவப் பலத்தைப் பலப்படுத்தி அதனை நிறைவேற்றியுள்ள இதேவேளையில் இந்திய மாக்கடல் நோக்கி வர்த்தக சார் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் சீனா எத்தகைய மூலோபாயத்தைப் பயன்படுத்துகின்றது என்பதை அறியமுடியும்.

‘உலகின் மிகச்சிறந்த வல்லரசு நாடாக’ மிளிர்வதே சீனாவின் தலையாய குறிக்கோளாகும். அத்துடன் இந்தக் குறிக்கோளை அடைந்து கொள்வதற்கு தேவைப்படுமிடத்து அமெரிக்காவை எதிர்த்து நிற்பதற்கும் சீனா தயாராக உள்ளது’ என பிசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இவ்வாறானதொரு முதன்மையான வல்லரசு நாடு என்ற பதவி நிலையில் இருந்து கொண்டே சீனா தனக்கான நலன்களை அடைந்துகொள்ள விரும்புகிறது.

குறிப்பாக இரண்டாம் உலக யுத்த காலத்திலிருந்து அமெரிக்கா நீண்ட காலமாக உலகின் வல்லரசாக விளங்குவதன் மூலம் தனக்கான நலன்களை அடைந்து கொள்வது போல் சீனாவும் தனது நலன் பெற விரும்புகிறது’ என பிசர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு மூலோபாயத்தை பிரயோகிப்பதற்கு வர்த்தகம் என்பது அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்டாலும், சீனா தனது வர்த்தக வலைப்பின்னலுக்குள் தன்னை எதிர்க்கும் எந்தவொரு நாட்டையும் எதிர்ப்பதற்கு தனது இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சிறிலங்காவுடன் தரைவழித் தொடர்பைப் பேணுவதற்காக இந்திய மாக்கடல் நோக்கி சீனா தனது நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதானது, இந்தியாவை சீனா முற்றுகையிட முயற்சிப்பதாக இந்திய வல்லுனர்களால் நோக்கப்படுகிறது. ஏனெனில் சீனாவின் பொருளாதாரத்திற்கு மிகப்பாரிய போட்டியாளராக விளங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

கடல்வழி முக்கிய மையங்களைக் கட்டுப்பட்டில் கொண்டு வருவதற்கான தனது மூலோபாயத்தை சீனாவின் கம்யூனிசக் கட்சி ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. மலாக்கா நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக சீனா தனது இராணுவத்தை தென் சீனக் கடலில் நிலைப்படுத்தியுள்ளது.

பப் எல்-மன்டேப் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக சீனா டிஜிபூற்றியில் ஒரு இராணுவத் தளத்தை அமைப்பதற்கான திட்டமிடலை மேற்கொண்டுள்ளது. துருக்கி நீரிணைகளுக்காக, புதிய பட்டுப் பாதைத் திட்டத்தின் மூலம் பலப்படுத்தலை மேற்கொள்வதென சீனா தீர்மானித்துள்ளது.

ஆகவே சீனா தனது முக்கிய வர்த்தக மையங்களிலும் இவ்வாறான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்திய மாக்கடலானது இதிலிருந்து வேறுபடுகிறது. குவாடரிலுள்ள துறைமுகத்தை முகாமை செய்வதற்காக சீனா ஏற்கனவே பாகிஸ்தானுடன் 40 ஆண்டு உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது.

சீனாவின் இத்திட்டம் தொடர்பில் இந்தியா மகிழ்ச்சி கொள்ளவில்லை. தனது கடல் பிரதேசத்திற்கு அருகில் சீனப் போர்க் கப்பல்கள் நிலையாகத் தரித்திருப்பதை இந்தியா விரும்பவில்லை.

‘குவாடர் துறைமுகமானது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் இலக்குகளையும் சமாந்தரமாக இணைத்துள்ளது’ என பிசர் குறிப்பிடுகிறார். இந்தப் பிணைப்பானது பலொகிஸ்தான் விரிகுடாவில் தீவிரவாதிகளின் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும் பாகிஸ்தானுக்கு உதவுகிறது.

அத்துடன் இந்திய மாக்கடலுள்ள பல்வேறு வழிகளில் தொடர்புகளைப் பேணுவதற்கான சீனாவின் இலக்கையும் இந்தப் பிணைப்பானது நிறைவேற்றுகிறது.

தென்சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை உருவாக்குகின்ற சீனாவின் பணி நிறைவுக்கு வருவதாக யூன் 16 அன்று சீனக் கம்யூனிசக் கட்சி அறிவித்தது. செயற்கைத் தீவுகளில் பல்வேறு கட்டுமான வசதிகளை முன்னெடுப்பதன் மூலம் சீனா தனது திட்டத்தை தென்சீனக் கடலில் முன்னெடுக்கும் அதேவேளையில், சீனா தற்போது தனது அடுத்த பணிக்கு ஆயத்தமாகியுள்ளது.

இந்திய மாக்கடலில் சீனா தனது அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்துள்ளது. தென் சீனக் கடலில் செயற்கைத் தீவுகளை நிர்மாணித்த சீன நிறுவனங்களே தற்போது பட்டுப்பாதைத் திட்டத்தையும் முன்னெடுக்கின்றன. இந்த நிறுவனங்களுக்குள் சீனத் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம், சீன வர்த்தக நிறுவனம் (அனைத்துலகம்), சீன அரச கட்டுமான மற்றும் பொறியியல் நிறுவனம் ஆகியன உள்ளடங்கும்.

சீனாவின் தொடர்பாடல் கட்டுமான நிறுவனம் கடல் அகழும் பணியில் பெருமளவில் ஈடுபட்டுள்ளது. ‘சீனா தற்போது இந்திய மாக்கடல் நோக்கிய தனது நடவடிக்கையை விரிவுபடுத்தியுள்ளது. அத்துடன் இது தென்கிழக்கு ஆசியாவில் தனது கட்டுமானப் பணியை நிறைவேற்றியுள்ளது. இங்கு சீனாவால் பயன்படுத்தப்பட்ட உடமைகள் இந்திய மாக்கடலில் சீனா தனக்குத் தேவையான துறைமுகங்களை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும்’ என செப்ரெம்பர் 17 அன்று அமெரிக்க கடற்படை நிறுவகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்துறைமுகங்கள் சீனா தனது மூலோபாய நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு சங்கிலியாகப் பயன்படும் என அமெரிக்காவால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மாக்கடலின் எல்லைகளிலுள்ள நாடுகளில் சீனா தனது முதலீட்டில் துறைமுகங்களை அமைத்துள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானின் கராச்சி மற்றும் குவாடர் துறைமுகங்கள் மற்றும் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றன சீனாவால் தனது பட்டுப் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இப்புதிய முயற்சியானது தற்போதே ஆரம்பமாகியுள்ளதாக அமெரிக்க சிறப்பு கட்டளை நடவடிக்கைகள் பிரிவில் பணியாற்றும் சுயாதீன ஒப்பந்தகாரரான றொபேற் ஹட்டிக் குறிப்பிட்டுள்ளார். தென் சீனக் கடலில் சீனக் கம்யூனிசக் கட்சியானது மிக விரைவாகத் தனது கட்டுமானங்களை நிறுவியது தொடர்பாக பெரும்பாலான அவதானிகளும் ஆய்வாளர்களும் கவனத்திற்கொள்ளவில்லை என்பதை நினைவுபடுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

ஆகவே நாங்கள் இனிவருங் காலங்களில் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் மேலும் எத்தகைய அதிர்ச்சிகள் இடம்பெறக் காத்திருக்கின்றன என்பதை நன்கு அவதானிக்கத் தவறக் கூடாது என றொபேற் தெரிவித்துள்ளார்.

இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சீனா 18 கடற்படை முகாங்களை அமைக்கத் திட்டமிடுவதாக நவம்பர் 19,2014 அன்று வெளியிடப்பட்ட ‘நமிபியன்’ பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான், சிறிலங்கா, பர்மா, ட்ஜிபோற்றி, ஜெமன், ஓமான், கென்யா, ரன்சானியா, மொசாம்பிக், செச்செல்ஸ் மற்றும் மடகஸ்கார் ஆகிய இந்திய மாக்கடல் பிராந்திய நாடுகளிலேயே சீனா தனது கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக இப்பத்திரிகை சுட்டிக்காட்டியிருந்தது.

இத்தளங்கள் சீனக் கடற்படை இந்திய மாக்கடலின் வடக்கு, மேற்கு மற்றும் தென்மத்திய பகுதிகளில் தனது பிரசன்னத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் என ஊடகம் குறிப்பிட்டிருந்தது.

இந்த அறிவிப்பை சீனக் கம்யூனிசக் கட்சி மறுத்திருந்தாலும் கூட, ‘நமிபியா’ பத்திரிகையில் குறிப்பிட்ட ஒவ்வொரு நாடுகளை நோக்கியும் சீனா தனது திட்டங்களைச் செயற்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்த நாடுகளில் துறைமுகங்களை அமைத்துக் கொடுத்தும் அல்லது ஏற்கனவே உள்ள துறைமுகங்களை விரிவுபடுத்துவதற்குமான பணியை சீனா மேற்கொண்டு வருகிறது.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த கேணல் ஜெங் ஜன்செங்கிடமிருந்து டிசம்பர் 22,2014 எனத் திகதியிடப்பட்டு நமிபியாவின் வெளிவிவகார நிரந்தர செயலர் செல்மா சிபாலா முசாவி பை அபேட்டுக்கு முகவரியிடப்பட்ட நம்பகமான, இரகசியக் கடிதத்தை ‘நமிபியா’ பத்திரிகை வெளியிட்டது. ‘இவ்விரு அதிகாரிகளும் தத்தமது நாடுகள் சார்ந்த விடயங்கள் தொடர்பாக’ சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் நமிபியாவில் பரிந்துரைக்கப்பட்ட சீனக் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் விளக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ‘முத்துமாலை’ மூலோபாயத்தின் கீழ் சீனா இந்திய மாக்கடலில் கடற்படை வலைப்பின்னலை அமைக்கும் என இராணுவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சீனாவின் முத்துமாலை மூலோபாயத் திட்டமானது ஏற்கனவே அடுத்த படிமுறையை அடைந்திருக்கலாம் என கொள்கை வகுப்பாளர்கள் கருதுவதாக மார்ச் 25 அன்று றொபேற் சி.ஓ.பிரியனால் வெளியிடப்பட்ட பத்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்திய மாக்கடலை அடிப்படையாகக் கொண்ட சீனாவின் முத்துமாலை கடற்படை மூலோபாயமானது சீனாவின் 21ம் நூற்றாண்டிற்கான ‘கடல்வழி பட்டுப்பாதைத்’ திட்டத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாயமாகக் காணப்படுவதாகவும், இத்திட்டமானது தற்போது தென் அத்திலாந்திக் வரை விரிவுபடுத்தப்பட்டிருப்பது போல் தென்படுவதாகவும் ஒ பிரியன் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்தியாவிற்கு அருகிலுள்ள கடற்பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை பிரசன்னமாகிறது என்பதே உண்மையாகும்’ எனவும் இவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *